கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்கள்: உங்களுடைய மாநிலம் இதில் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
(இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியான நாளிதழ்கள், செய்தி இணையதளங்கள் சிலவற்றில் இடம்பெற்ற முக்கிய செய்திகள் சிலவற்றை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். )
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் முதல் 10 மாநிலங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள தி இந்து தமிழ் திசை.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டியது. 24 மணி நேரத்தில் 1,619 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் முதல் 10 மாநிலங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் நேற்றைய நிலவரப்படி 6.8 லட்சம் நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் (1.9 லட்சம்), கர்நாடகா (1.33 லட்சம்), சத்தீஸ்கர் (1.28 லட்சம்) ஆகியவற்றில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சை பெறுகின்றனர். கேரளா (94,009), டெல்லி (74,941), தமிழ்நாடு (70,391), மத்திய பிரதேசம் (68,576), ராஜஸ்தான் (67,135), குஜராத் (61,647) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DAILYTHANTHI
இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்தாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்களுக்கு கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், " இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மற்றும் பரப்பும் அபாயம் உள்ளது.
எனவே, இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், பயணத்திற்கு முன்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கிறது அந்த நாளிதழ் செய்தி
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswamy Twitter
குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அறுவை சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியதாக தினமணி நாளிதழ் இணையதள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் நேற்று முதல்வர் பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.வீட்டில் மூன்று நாள்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு முதல்வர் பழனிசாமியை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வா் பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கோ் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டாா். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹொ்னியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.ஆனால், அப்போது தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தொடங்கியிருந்ததால், அவா் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. இதற்கு நடுவே, அதிமுகவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் முதல்வா் ஈடுபட்டார்.
தற்போது வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதல்வா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்பது தெரியவந்தது. அதன் பின்னா் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல்வரின் உடல் நிலை சீராக இருந்ததால், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று கூறியுள்ளது தினமணி.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












