"இந்த ஊரில் பா.ஜ.க வளர்வதற்கு வாய்ப்பில்லை": கே.எஸ். அழகிரி

பட மூலாதாரம், Facebook
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்து, அரசியல் கட்சிகள் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள், இடங்களை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை, பா.ஜ.கவின் வளர்ச்சி, ராகுல் காந்திக்கு சரியான மொழிபெயர்ப்பாளர்கள் அமையாதது ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி. அவரது பேட்டியிலிருந்து:
கே. வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. உங்களுக்கான வெற்றிவாய்ப்பு எந்த அளவுக்கு இருக்குமென நினைக்கிறீர்கள்?
ப. என்னுடைய அனுபவத்தில் இந்தத் தேர்தல் கொஞ்சம் புதுமையானது. ஏராளமான தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். போட்டியிட்டிருக்கிறேன். ஏழு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். இந்தத் தேர்தலில் சிறப்பு என்னவென்றால், பெருமளவில் மக்கள் எங்கள் கூட்டங்களுக்கு வந்தார்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் குவிந்தார்கள். இந்தக் கூட்டத்தின் மனோபாவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நாம் எது பேசினாலும் அசைவற்று இருக்கும் ஒரு கூட்டமும் உண்டு. அல்லது வாகனத்திலிருந்து நம் தலை தெரிந்தாலே சந்தோஷமாக கோஷமிடும் கூட்டமும் உண்டு. இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்.
பொதுவாக கூட்டங்களில் இம்மாதிரி எழுச்சி இருந்தால், நமக்கு நல்ல வெற்றி என்று கணிப்போம். நாங்கள் சென்ற கூட்டங்களுக்கு எல்லாம் நல்ல எழுச்சியும் ஆதரவும் இருந்தது. ராகுல் காந்தியும் ஸ்டாலினும் கலந்துகொண்ட கூட்டம் எல்லாம் மகத்தான கூட்டம். அவற்றை பெரிய மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
தவிர எங்கள் கூட்டங்களில் கொள்கைகளைப் பேசினோம். தனிப்பட்ட முறையில் குறைசொல்வது, தாக்குவது ஆகியவை எங்கள் கூட்டங்களில் மிகக் குறைவாக இருந்தது. பா.ஜ.க. ஏன் வேண்டாம் என்று பேசினோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வெறுமனே சொல்லாமல், ஏன் வாக்களிக்க வேண்டுமென்று விளக்கினோம்.

பட மூலாதாரம், Facebook
குறிப்பாக விலை ஏற்றத்தை எங்களால் தடுக்க முடியும் என்றோம். அதற்கு உதாரணமாக பெட்ரோல் விலை ஏற்றத்தைக் குறிப்பிட்டோம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர்களாக இருந்தன. அப்போது பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்றது. எரிவாயு சிலிண்டர் 400 ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை சரிபாதியாக குறைந்திருக்கிறது. 54 டாலர்களுக்குத்தான் விற்கப்படுகிறது. அப்படியானால் பெட்ரோலை 35 ரூபாய்க்கும் எரிவாயுவை 200 ரூபாய்க்கும் விற்க வேண்டும். மாறாக பெட்ரோலை நூறு ரூபாய்க்கும் சிலிண்டரை 900 ரூபாய்க்கும் விற்கின்றனர். இந்த அரசாங்கத்திற்கு பொருளாதாரக் கொள்கை கிடையாது. வரி விதிப்பில் ஞானம் கிடையாது. இதையெல்லாம் மக்களிடம் சொன்னோம்.
நாங்கள் வந்தால் கலால் வரியைக் குறைப்போம். அதைச் செய்தால் எரிபொருள் விலை குறையும். மு.க. ஸ்டாலின் வந்தால் எரிபொருள் விலையைக் குறைப்பார். இதையெல்லாம் பொதுமக்களிடம் சொன்னபோது அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆகவே எங்களுக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என கருதுகிறோம்.
கே. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி கட்சியினரிடம் பேசி இடங்களைப் பெறுவதில் உங்களுக்கு வரும் நெருக்கடிகளைவிட, இடங்களைப் பெற்ற பிறகு நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்தான் அதிகமாக இருக்கிறதே...
ப. இரண்டிலுமே எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள்தான் அவற்றைப் பிரச்னையாகப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றையுமே ஒரு குழுவாக அமர்ந்து பேசித்தான் முடிவு செய்கிறோம். முதலில் 9 பேர் கொண்ட குழு, அதன் பிறகு அகில இந்திய தலைமை, அகில இந்திய செயலாளர்கள், அதற்குப் பிறகு ஸ்க்ரீனிங் கமிட்டி என பல குழுக்கள் சேர்ந்துதான் இவை எல்லாம் முடிவு செய்யப்படுகின்றன. ஆகவே இதில் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏற்படவுமில்லை.
கே. காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாக, சத்தியமூர்த்தி பவனின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வேறு எந்தக் கட்சியிலும் இதுபோல நடக்கவில்லை. காங்கிரசில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

பட மூலாதாரம், Facebook
ப. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் என மொத்தமாக 2,500 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 25 பேருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கிறோம். அப்படியானால், மீதமுள்ள 2,475 பேருடைய மன நிலை எப்படியிருக்கும்? இதெல்லாம் இயல்பு. இதற்கு இவ்வளவு பெரிய கேள்வி கேட்க வேண்டியதில்லை. இவ்வளவு பெரிய பதில் சொல்லவும் வேண்டியதில்லை. நிறையப் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.
கே. கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றவந்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே..
ப. அதுதான் சொல்லி விட்டேனே.. எல்லாமே இருக்கும். 2,500 பேரில் 2,475 பேருக்குக் கிடைக்கவில்லை எனும்போது எல்லாம் இருக்கும். ஆனால், இடம் வழங்கப்பட்ட 25 பேரில் தகுதி குறைவானவர்கள் என்று யாரும் கிடையாது.
கே. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக பல முறை தமிழ்நாடு வந்த ராகுல்காந்தி காங்கிரசிற்கு ஒரு பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு சில முறை மட்டுமே இங்கு வந்தார். அந்த உற்சாகம் திடீரென தணிந்துவிட்டதைப் போலத் தோன்றியது என்ன காரணம்?
ப. முதல் கட்டமாக அவர் வந்தபோது எங்கேயும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதனால், இங்கே கூடுதல் நேரத்தைச் செலவிட்டார். தேர்தல் அறிவித்துவிட்ட பிறகு அசாம் மீது கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மேற்கு வங்கம், கேரளா, கோவா, புதுச்சேரி என செல்ல வேண்டியிருந்தது. இப்படி பல மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், இங்கே வர முடியவில்லை.
கே. எல்லா தலைவர்களும் கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவிலான ஒரு முன்னணியை ராகுல் காந்தி கட்டியெழுப்ப வேண்டுமென மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அது குறித்து ராகுல்காந்தி ஏதும் சொல்லவில்லை.. அது சாத்தியமில்லை என ராகுல் நினைக்கிறாரா?

பட மூலாதாரம், Facebook
ப. ஒரு பெரிய கூட்டத்தில் பலத்த கோஷங்கள், கரகோஷங்களுக்கு நடுவில் பேசும்போது ஒரு தலைவர் பேசிய எல்லாவற்றுக்கும் மற்றொரு தலைவர் பதில் சொல்வது சாத்தியமில்லை. மு.க. ஸ்டாலின் பேசியது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. ஏற்கெனவே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய கருத்தும் கூட. அதை மு.க. ஸ்டாலின் நினைவுபடுத்தினார். அது எங்களுக்கு 100 சதவீதம் உடன்பாடான கருத்துதான். நல்ல நேரத்தில் அவர் மக்களுக்கு அதை நினைவுபடுத்தியிருக்கிறார்.
கே. மு.க. ஸ்டாலினின் பேச்சை நீங்கள் ராகுலுக்கு மொழிபெயர்த்தீர்கள்.. அதற்கு அவரது எதிர்வினை என்னவாக இருந்தது?
ப. பொதுவாக ஸ்டாலின் பேசியதை ராகுல் காந்தி மிகவும் ரசித்தார். வரவேற்றார். வைகோ, வீரமணி பேசியதை மிகவும் விரும்பிக் கேட்டார். ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவு செய்தார். இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, தேர்தலுக்கு முன்பே அவர் முதல்வராகி விட்டதைப் போலத் தெரிகிறது என்றார். ஆகவே, இந்தப் பேச்சுகளில் ராகுல் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
கே. பிரியங்கா காந்தி ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை? சரியான திட்டமிடல் இல்லையா?
ப. கன்னியாகுமரியில் நாங்கள் மேடை அமைப்பதுவரை பணிகளை முடித்து விட்டோம். அவருடைய கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
கே. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும்போது, காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெற்றால், அதன் செயல்பாடு எப்படியிருக்கும்? 2006 - 11 காலகட்டத்தில் ஆளும்கட்சிக்கு அனுசரணையான கட்சியாகவே காங்கிரஸ் செயல்பட்டதே, அது போல நடந்து கொள்ளுமா?
ப. அப்படியெல்லாம் இல்லை. ஏ.ஆர். மாரிமுத்து தலைவராக இருந்த காலத்தில் இருந்து, எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தலைவராக இருந்த காலத்தில் இருந்து, ஒரு ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம். எதிர்கட்சி என்பதற்காக ஆளும்கட்சி சொல்வதையெல்லாம் எதிர்க்க வேண்டியதில்லை. மாறாக, தோழமைக் கட்சியாக இருந்தாலும்கூட, அதைச் சுட்டிக்காட்டுவது எதிர்கட்சியின் கடமை. நல்ல விஷயங்களைச் செய்யும்போது இரண்டொரு வார்த்தைகள் அவர்களை மேம்படுத்திப் பேசுவதும் எதிர்கட்சியின் கடமை. காங்கிரஸ் எப்போதுமே இந்தக் கடமையிலிருந்து தவறியதில்லை. சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்.

பட மூலாதாரம், Facebook
கே. தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் ஆர்வம் கொள்ளும் இளைஞர்கள் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளை நோக்கியே ஈர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த இளைஞர்கள் ஏன் காங்கிரசை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. இதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா?
ப. நிச்சயமாக. ராகுல் காந்தியின் வருகையின்போது மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பெருமளவில் இளைஞர்கள் வந்தார்கள். ராகுல் காந்தி இளைஞர்களை கொள்கை ரீதியாக வசீகரிக்கிறார் என்பதையே காட்டுகிறது. ராகுல் காந்தி பொருளோடு பேசுகிறார்; தன்னம்பிக்கையோடு பேசுகிறார் என்ற உணர்வு வேகமாக வளர்ந்து வருகிறது.
சிறு கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் மறைமுகமாக பா.ஜ.கவை, அண்ணா தி.மு.கவை ஆதரிப்பவர்கள். பேசும்போது இக்கட்சிகளை எதிர்ப்பது போல பேசுகிறார்கள். ஆனால், செயல்படும்போது மதச்சார்பற்ற சக்திகளான எங்களைப் போன்றவர்களின் வாக்குகளைப் பிரிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். இது எப்போதுமே அரசியலில் உண்டு. பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ளும் ஆற்றல் தி.மு.க. - காங்கிரசிற்குத்தான் உண்டு. எங்களிடம்தான் கொள்கை இருக்கிறது. இவர்கள் இடையில் புகுந்து அந்த வாக்குகளைக் களவாட நினைக்கிறார்கள். திசை திருப்பப் பார்க்கிறார்கள்.
இதனால், மூன்றாம் அணி என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்தத் தேர்தலில் மிக மோசமான பின்னடைவு ஏற்படும். மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.
கே. பா.ஜ.கவுக்கு தேர்தல் அரசியலில் பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்காவிட்டாலும் அவர்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கின்றன. ஆனால், காங்கிரசிடம் அம்மாதிரி செயல்பாட்டைப் பார்க்க முடியவில்லையே ஏன்?
ப. இது ஒரு மாயை. பா.ஜ.க. தமிழ்நாட்டில் வளர்கிறது என்று சொல்வது ஒரு மாயை. தமிழ்நாட்டில் எங்கேயுமே வளரவில்லை. வளர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதற்கு ஊடகங்கள் தீனி போடுகின்றன.
கே. வளர்வது குறித்துப் பேசவில்லை.. அவர்களது செயல்பாடுகள் குறித்துத்தான் கேள்வி..

பட மூலாதாரம், Facebook
ப. செயல்பாடுகள் குறித்துத்தான் சொல்கிறேன். வேல் யாத்திரை என்று சென்றார்கள். அது என்ன ஆனது? நான்கைந்து இடங்களுக்குப் போனார்கள். அதற்கு மேல் நடத்த முடியவில்லை. ஆனால், ஏர் கலப்பை யாத்திரை என்று நாங்கள் செய்தோம். தமிழ்நாடு முழுவதும் அதை நடத்தினோம். ஏறக்குறைய 200 தொகுதிகளில் இதைச் செய்தோம். ஊடகங்கள் அவர்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். காங்கிரசை முன்னிலைப்படுத்த அஞ்சுகிறீர்கள்.
மோதி தாராபுரத்தில் பேசும்போது அவருடைய முழுப் பேச்சையும் ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்கின்றன. ஆனால், சேலத்தில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் பேசும்போது அதைக் கொஞ்சம் கொஞ்சம்தான் காட்டுகிறீர்கள். ஊடகவியலாளர்கள் நடுநிலையாக இருக்கலாம். ஆனால், ஊடக முதலாளிகள் அச்சப்படுகிறார்கள். எனவே, எங்களுடைய செய்திகள் கொண்டுபோய் சேர்க்கப்படவில்லை.
ஆனால், எந்தெந்த ஊடகங்கள் எல்லாம் எங்கள் செய்தியைக் காட்ட மறுத்தார்களோ அவர்களே கருத்துக் கணிப்புகளில் 190 இடங்கள் கிடைக்கும் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே இந்த ஊரில் பா.ஜ.க. வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. இதை நான் எதிர்க் கட்சி என்ற விரோத மனப்பான்மையில் சொல்லவில்லை. அவர்களது தத்துவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நம்முடைய மக்களுக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உண்டு. காங்கிரஸ் கட்சி என்பது கடவுள் எதிர்ப்புக் கட்சியோ, மத எதிர்ப்புக் கட்சியோ அல்ல. ஆனால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களை துன்புறுத்துவதோ, அழிக்க நினைப்பதோ தவறானது என்கிறது காந்தியம். இன்னொரு இறைவனுக்கு எதிராக செயல்படுவது ஆன்மீகமல்ல. இதை காந்தி உலகிற்குத் தெரிவித்தார். இந்திய மக்கள் அதைத்தான் விரும்புவார்கள். அதனால்தான் 70 ஆண்டு காலமாக இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரசும் நம்முடைய ஜனநாயகமும்தான் அதற்குக் காரணம். இந்தியா முழுவதும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே இயக்கம் காங்கிரஸ்தான். ஆகவேதான் எங்கள் இயக்கத்திற்குத்தான் இளைஞர்கள் அதிகம் வருவார்கள்.
இவர்களைப் போல ஒரு தவறான களமாடலைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. அதிரடியான செயல்களைச் செய்ய விரும்பவில்லை. பதிலாக, ஆக்கபூர்வமாக செயல்பட விரும்புகிறோம். எங்கள் மேடைகளில் மோதியைப் பற்றித் தவறாக பேசமாட்டோம். ஆனால், அவருடைய ஆட்சியின் தவறுகளைப் பேசுவோம்.
கே. ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பேசும்போது அவருக்கு ஏன் சரியான மொழிபெயர்ப்பாளர் அமைவதில்லை?
ப. உங்களுடையது தவறான கருத்து. தமிழ்நாட்டில்தான் இப்படிக் கேள்விகள் எழுகின்றன. இலக்கியக் கூட்டங்களில்தான் வார்த்தைக்கு வார்த்தை சரியான வார்த்தையை எதிர்பார்ப்பார்கள். அரசியல் கூட்டங்களில் நான் என்ன பேச விரும்புகிறேனோ, அதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வளவுதான். நான் இலக்கிய ரீதியாகப் பேசினால் அதே போல மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ராகுலோ, சோனியாவோ பேசிய கருத்து சரியாக சென்று சேர்ந்ததா என்பதுதான் முக்கியம். அப்படிப் பார்க்கும்போது தவறு ஏதும் நேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















