"அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ரூ. 120 கோடி வந்தது" - யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், BJP
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரூ. 120 கோடி அளவுக்கு நிதி வந்தது என்று தேர்தல் பரப்புரையின்போது பேசினார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தர பிரதேச மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரவாக கோவை மற்றும் விருதுநகரில் இன்று பரப்புரை செய்தார்.
விருதுநகரில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், "சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் தனது உரையை துவங்கினார்
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் ஒரு புண்ணிய பூமி உத்தர பிரதேசத்திலிருந்து இங்கு வந்திருப்பதற்கு பெருமை அடைகிறேன். தமிழர் கலாசாரத்தை, பண்பாட்டை உலகத்திற்கே எடுத்து காட்டியவர் நமது பிரதமர். இந்தியாவின் பண்பாடு, கலாசாரம் அனைத்தும் கலந்த மாநிலம் தமிழ்நாடு. காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த போதும் இந்தியாவில் கிராமங்களில் மின்சாரம் இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. உலக நாடுகளுக்கு இணையாக இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறோம். கொரானா காலத்தில் நலிவடைந்த பெண்களுடைய வங்கி கணக்கில் 500 ரூபாய் வழங்கப்பட்டதுடன், ரேஷன் கடைகள் மூலமும் நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டன" என்று கூறினார்.
நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
"திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெண்களை களங்கப்படுத்துவதையே கொள்கையாக கொண்டுள்ளன. இந்த தேச விரோத சக்திகளை வாக்குகள் மூலம் எதிர்வரும் தேர்தலில் விரட்டியடிப்போம்."
அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகம் 120 கோடி ரூபாய் நிதி

பட மூலாதாரம், BJP
முன்னதாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி அமைந்துள்ள உத்தர பிரதேசத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் புனிதமான தொடர்பு உள்ளதாக கூறினார்.
"அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தமிழக மக்கள் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பங்களிப்பு செய்துள்ளனர். இதற்காக நாட்டு மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆதித்யநாத் கூறினார்.
"எதிர்வரும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்துவிட்டு இப்போது தமிழகம் வந்துள்ளேன். அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பதோடு, மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைபற்றும். கேரளாவில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். அதே போல தமிழகத்திலும் பா.ஜ.க கூட்டணி வெற்றியடையும். மத்திய அரசு அனைத்து துறையிலும், அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. அவை தொடருவதற்கு தமிழகத்தில் அ.தி.மு.க அரசு தொடர வேண்டும்" என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் - திமுக கட்சிகளை விமர்சித்த யோகி ஆதித்யநாத், "தமிழகம் பெண்களை உயர்வாக பார்க்கக் கூடிய மாநிலம். குமரி முதல் துவங்கி தமிழகம் எங்கும் பெண்கள் போற்றப்படுகின்றனர். ஆனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் பெண்களுக்கு எதிரான மன நிலைக் கொண்டவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, பெண்களின் மேம்பாடு குறித்த எந்த அக்கறையும் இருக்காது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஊழலுக்கு பெயர் பெற்றவர்கள்" என்று குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
- எப்படி இருக்கிறது வட தமிழ்நாடு? தேர்தலைத் தீர்மானிக்கும் சிக்கல்களின் நிலவரம் என்ன?
- கருத்துக் கணிப்பு மூலம் கருத்துத் திணிப்பு: தொண்டர்களுக்கு மடல் எழுதும் இபிஎஸ், ஓபிஎஸ்
- "10.5% உள்ஒதுக்கீடு ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்" - குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















