தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 'விஜய், அஜித், சூர்யா அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஏதாவது செய்தாரா?' - சேப்பாக்கம் பா.ம.க வேட்பாளர் கசாலி

பட மூலாதாரம், udhayanidhi stalin facebook /BBC
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ம.க சார்பில் ஏ.வி.ஏ.கசாலி களமிறங்கியுள்ளார். கடந்தமுறை ஆறாம் இடம்பெற்ற கசாலிக்கு இந்தமுறை சேப்பாக்கம் தொகுதி கைகொடுக்குமா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குத் தனி இடம் உண்டு. இத்தொகுதியில் தொடர்ந்து தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இரண்டு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். இந்தமுறை தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். மாநிலம் முழுக்க தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அவ்வப்போது சேப்பாக்கம் தொகுதிக்குள்ளும் உதயநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க வேட்பாளரை எதிர்த்து பா.ம.க சார்பில் ஏ.வி.ஏ.கசாலியும் அ.ம.மு.க சார்பில் எல்.ராஜேந்திரனும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெயசிம்ம ராஜா என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர்த்து ஐ.ஜே.கே சார்பில் கட்டுமானத்துறை வல்லுநரான முகமது இத்ரிஸ் என்பவரும் போட்டியிடுகிறார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் 10 சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தன. அதேநேரம், கடந்த தேர்தலில் 4.48 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்த பா.ஜ.க, இந்தமுறை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதும் பாட்டாளி மக்கள் கட்சிக்குப் பிளஸ்ஸாகப் பார்க்கப்படுகிறது.
பா.ம.க வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவருடனான பேட்டியில் இருந்து.
கள நிலவரம் எப்படியிருக்கிறது?
மிக நன்றாக இருக்கிறது. தொகுதியில் எந்தவிதமான சுகாதாரமான வசதிகளும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சென்னையின் மிக முக்கியமான பகுதியாக இந்தத் தொகுதி உள்ளது. இங்கு ஐஸ்ஹவுஸ், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.
தி.மு.கவை நம்பி நம்பியே மக்கள் ஏமாந்துவிட்டனர். இந்த அவலங்களை நேரில் பார்க்கும்போது கவனிக்க முடிகிறது. சட்டமன்ற உறுப்பினரின் பணி என்னவென்பதே மக்களுக்குத் தெரியவில்லை. `நான் வெற்றி பெற்றால் உண்மையாகப் பணியாற்றுவேன்' எனக் கூறி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு எந்த வேலைகளையும் செய்யாமல் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது எனத் தெரியவில்லை. வாக்குகளை மட்டுமே பெற்று தி.மு.க வாழ்வாங்கு வாழ்கிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்."
உதயநிதியை எதிர்த்து வெல்வதை எளிதான ஒன்றாகப் பார்க்கிறீர்களா?

பட மூலாதாரம், udhayanidhi stalin facebook page
அவரை எதிர்த்து வெற்றி பெறுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அவர்கள் மக்களின் வாக்குகளை பர்சேஸ் செய்வார்கள். நான் சென்ற பகுதிகளில் எல்லாம் ஒரே ஒருநாள் உதயநிதி பிரசாரம் செய்யட்டும். அவருக்கு சேவை மனப்பான்மை உள்ளதா என்ன? அவர் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் இருக்கிறார். அங்கு எதாவது செய்தாரா.. சினிமாவில் 28 யூனியன்கள் உள்ளன. அதனை நம்பி 20,000 தொழிலாளிகள் உள்ளனர். அவர்களுக்கு எதாவது செய்திருக்கிறாரா?"
அப்படிப் பார்த்தால் நீங்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தானே?
நான் சினிமா தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். சில படங்களில் நடித்திருக்கிறேன். அதனை நான் ஒரு தொழிலாகப் பார்க்கவில்லை. சமூகக் கருத்துள்ள படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரத்தைத் தெரிந்து கொண்டுதான் நடிக்கிறேன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் மூலமாக பெரியளவில் சினிமா தயாரிப்புப் பணியில் உதயநிதி ஈடுபட்டுள்ளார்.
சினிமாவில் சம்பாதிக்கும் அஜித், விளம்பரமில்லாமல் உதவி செய்து வருகிறார். மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் விஜய்யும், பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சூர்யாவும் அகரம் அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு நாங்கள் சல்யூட் அடிக்கிறோம். இவர்களோ, வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
கடந்தமுறை போட்டியிட்டு ஆறாம் இடத்துக்கு வந்தீர்கள். இந்தமுறை தேர்தல் பிரசாரத்தில் தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?
கூட்டணிதான் எங்களுக்குப் பலமாக இருக்கிறது. எங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். சிந்தாதிரிப்பேட்டை பக்கம் உள்ள சௌராஷ்ட்ரா, வன்னியர், பிராமணர்கள், தலித் மக்கள் எனப் பலரும் எங்களை வரவேற்கின்றனர்.

பிராமண சமூக மக்கள், `மாம்பழத்துக்குத்தான் வாக்கு' எனத் தீர்மானமே போட்டுவிட்டார்கள். இந்தத் தொகுதியில் ஜெயின் மார்வாடி சமூகத்தினருக்கு என 2,500 வாக்குகள் உள்ளன. அவர்களும் எனக்கு வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர். தி.மு.க வந்தால் ரௌடியிசம் வரும் எனத் தெரியும். அதனால் மக்கள் என்னை வரவேற்கிறார்கள்."
தொகுதிக்கு சிறுபான்மை வாக்குகள் அதிகம் இருப்பதால், உதயநிதி எளிதாக வெற்றி பெறுவார் என்கிறார்களே?
அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. நட்புக்கும் அன்புக்கும் சிறுபான்மை மக்கள் அடிமைப்பட்டவர்கள். தி.மு.கவின் கவர்ச்சிகர வாக்குறுதிகளை கடந்தமுறை நம்பினார்கள். இந்தமுறை அப்படி நடக்காது. சமுதாய மக்கள் மத்தியில், `கசாலி வந்தால் நன்றாக இருக்கும்' என நம்புகிறார்கள்.
அதுதான் என்னுடைய பலம். உதயநிதி பகல் கனவு கண்டு வருகிறார். அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கட்சியின் நிர்வாகிகளும் ஏற்கவில்லை. சென்னை தி.மு.கவின் கோட்டை என்பது இந்தமுறை உடையும். மக்களின் மனநிலை மாறிவிட்டது. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கூட்டணி பலமும் இருப்பதால் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















