உத்தராகண்ட் முதல்வர் திடீர் ராஜிநாமா - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உத்தராகண்ட் சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தையும் அவர் அம்மாநில ஆளுநர் பேபி ராணி மெளரியாவிடம் அளித்தார்.

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேந்திர சிங் ராவத், "தேவ பூமியில் சுமார் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் பணியை ஆற்ற எனக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கியது. அத்தகைய பெரிய பொறுப்பை ஆற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அதுவரை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. மாநிலத்தில் கல்வியன் வளர்ச்சிக்கும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் பல திட்டங்களை கொண்டு வந்தோம். பாஜக புதிய சட்டமன்ற குழு தலைவரை கட்சியின் எம்எல்ஏக்கள் புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடி முடிவு செய்வார்கள்," என்று கூறினார்.

முன்னதாக, டெல்லியில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை திங்கட்கிழமை திரிவேந்திர சிங் ராவத் சந்தித்துப் பேசினார்.

உத்தராகண்டில் கடந்த சில மாதங்களாக ஆளும் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் கட்சியின் மூத்த அமைச்சர்களையும் தலைவர்களையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக ஒரு தரப்பினர் புகார் கூறி வந்தனர். இதைத்தொடர்ந்து பாஜக மேலிட பார்வையாளர்களாக ரமண் சிங், பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கெளதம் ஆகியோரை உத்தராகண்ட் மாநிலத்துக்கு பாஜக மேலிடம் அனுப்பி வைத்தது. அக்குழு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வருக்கு எதிரான மனநிலையில் இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிந்தது.

இதேவேளை, சட்டமன்ற தேர்தலையொட்டி உத்தராகண்டில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே கட்சியின் நிர்வாகிகள் அளவில் சில மாறுதல்களை பாஜக மேலிடம் மேற்கொள்ள பரிசீலித்து வந்தது. இதன் அங்கமாகவே ஆளும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக அக்கட்சியின் ஒரு பிரிவு தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தில் ஆளும் கட்சியின் அரசு தலைமையில் செய்யப்படும் மாற்றத்தின் மூலம் தான் விரும்பியதை செய்ய முடியாமல் போய் விட்டது பாஜக என்பதை அறிய முடிகிறது. எப்படியிருந்தாலும், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் பாஜகவால் ஆட்சியை தக்க வைக்க முடியாது என்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்துக்கு 2017ஆம் ஆண்டில் தேர்தல் நடந்தது. அதில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 50 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து திரிவேந்திர சிங் ராவத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ததன் அடிப்படையில் அவர் முதல்வராக பதவியேற்றார்.

உத்தராகண்ட் மாநில அரசியல் வரலாற்றில் என்.டி. திவாரி மட்டுமே முதல்வர் பதவியை முழு ஐந்து ஆண்டு காலம் வகித்து நிறைவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :