You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயணிகளை தவிக்க விட்ட தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்
- எழுதியவர், பிரபு, மனோ, ஹரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க அரசு ஊழியர்களும், இதர அமைப்புகளும் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று, ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர் . இந்த போராட்டத்தால் வெளியூருக்கு இயக்க வேண்டிய பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை என பல்வேறு போக்குவரத்து கோட்டங்களில் 60 முதல் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கோவை கோட்டத்தைப் பொறுத்தவரையில் 3,000 நகர பேருந்துகளும், 1500 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று காலை கோவையில் 60 முதல் 70 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆளும் கட்சி ஆதரவு தொழிற்சங்கத்தினர் மற்றும் தாற்காலிக ஊழியர்களைக் கொண்டு குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. குறிப்பாக, நகரப் பேருந்துகள் இயங்கினாலும், வெளியூர் செல்லும் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
மதுரை மாநகர் போக்குவரத்து பணிமனைகளான பொன்மேனி, பைபாஸ் எல்லிஸ்நகர், புதூர், கே.கே.நகர், மற்றும் புறநகர்ப் பகுதிகளாகத் திருப்பரங்குன்றம், செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய பணிமனைகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள 1400பேருந்துகளில் ஐந்து சதவீத பேருந்துகள் மட்டுமே தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. மதுரையிலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 370 அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று அதிகாலை முதல் அரசு பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 12 மணி நேர நிலவரப்படி 33 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சுப முகூர்த்த காலம் என்பதால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரமாகக் காத்துக்கிடக்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மதுரை, திருச்சி, நாகர்கோவிலிருந்து ராமேஸ்வரம் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளை மட்டுமே நம்பி வருகின்றனர். இன்றைய போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால், வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகள்; சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பேருந்து நிலையத்தில் உடைமைகளுடன் காத்திருந்தனர்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயில் வரை இயக்கப்படும் நகரப்பேருந்துகளும், ராமேஸ்வரம் திருக்கோயிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் நகரப் பேருந்துகளும் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ராமேஸ்வரம் தீவு பகுதியிலிருந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்வோரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ராமேஸ்வரம் பணிமனை மேலாளர் ரத்தினத்திடம் கேட்ட போது, "பொதுவாக ராமேஸ்வரத்திலிருந்து தினசரி 150 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்று தீவு பகுதியிலிருந்து 15 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் பணிமனையில் உள்ள பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள், வெளியூர்களிலிருந்து வர வேண்டி உள்ளதால் பேருந்து வசதி இல்லாமல் இன்று பெரும்பாலோனோர் பணிக்கு வரவில்லை. இருப்பினும் பணிக்கு வந்துள்ள நடத்துநர், ஓட்டுநர்களை வைத்து தொடர்ச்சியாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
திருப்பூரிலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணி அனிதா, "நாங்கள் இரண்டு நாள் சுற்றுலாவிற்காக ராமேஸ்வரம் வந்திருந்தோம். சாமி தரிசனம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலா தலங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல இன்று காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்த போது பேருந்து இயங்க வில்லை. இதனால் நாங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் கடந்த ஐந்து மணி நேரத்துக்கு மேலாகப் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்டபோது விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி நாங்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருக்கிறோம்" என்றார்.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த கண்ணன், "கொரோனா தொற்று பாதிப்பினால் எங்களுடைய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வேளையில் இதுபோன்ற போராட்டங்கள் தேவைத்தானா என்பதை அரசுப் போக்குவரத்து சங்கங்கள் யோசிக்க வேண்டும். ஊழியர்களின் கோரிக்கையைத் தொழிற்சங்கங்கள் நேரடியாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம். அதை விட்டு பொது மக்கள் பாதிக்கும் வகையில் போராட்டத்தில் இறங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய வைப்பது எரிச்சலை உண்டாக்குகிறது" என்றார்.
அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தும் சங்கங்களில் ஒன்றான சிஐடியூ அமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுமுக நாயனாரிடம் பேசிய போது, "எங்களது கோரிக்கையை வலியுறுத்த நாங்கள் டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடத்த நோட்டீஸ் கொடுத்து வந்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை குறித்துச் செவிகொடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்து விட்டால் எங்களது கோரிக்கை குறித்து அரசு எதுவும் செய்ய முடியாது என்பதால் நாங்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நேற்று எங்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 ஊழிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், ஊழிய உயர்வை 1.1.2019 ஆம் ஆண்டிலிருந்து வழங்கிட வேண்டும். ஒய்வுப்பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பிடித்தம் செய்துள்ள பணத்தை உடனே வழங்க அரசு உத்தரவாதம் தர வேண்டும்" என்றார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் அன்பு சோழனிடம் பேசியபோது, "போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வைத்து சென்னை மாநகர கழகத்தில் 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன" என்றார். நாளையும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தால் வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுமா என்று கேட்டதற்கு, "பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக வண்ணம் பேருந்துகள் இயக்கப்படும்" என்று பதிலளித்தார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்... தவறினால் அடுத்து என்ன நடக்கும்?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா?
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: