சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ’கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது'

நீதிமன்ற தீர்ப்பு சித்தரிப்பு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இன்று (19.02.2021) வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கை தமிழரான சந்திரகுமார், பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-தேதி முதல் 24-ந்தேதி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை பூந்தமல்லி போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கை புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையையும் போலீசார், சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சந்திரகுமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார். அதில், "கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது. இந்திய தண்டனை சட்டம் 309-ன் கீழ் (தற்கொலை முயற்சி) மனுதாரர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றத்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை தான்.

எனவே, இந்த குற்றப்பத்திரிகையை ஓர் ஆண்டுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பூந்தமல்லி கோர்ட்டு, 3 ஆண்டுகளுக்கு பின்னர், எந்த ஒரு காரணமும் கூறாமல், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால், எந்த பயனும் இல்லை. வழக்கை ரத்து செய்கிறேன்," என்று கூறியுள்ளார் என தினத்தந்தி செய்தி பிரசூரித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.12.65 லட்சம் ஊறுகாய் நன்கொடை

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.12.65 லட்சம் மதிப்புள்ள ஊறுகாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு குண்டூா் மாவட்டம் சிராபூரைச் சோ்ந்த தனியார் புட் ப்ராடெக்ட்ஸ் உரிமையாளா் ராமு, ரூ.12.65 லட்சம் மதிப்புள்ள ஊறுகாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

அதில் 4,500 கிலோ 7 ரக ஊறுகாய்கள், 300 கிலோ மஞ்சள் பொடி, 200 கிலோ மிளகாய் காரம், 300 கிலோ புளியோதரை அடக்கம். இதை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அன்னதான கூடத்தில் அளித்தார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொகுதிக்கு வெளியே இருக்கும் வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு?

தங்கள் தொகுதிக்கு வெளியே இருக்கும் வாக்காளர்களும் தபால்மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மனுவை எஸ். சத்யன் என்பவர் வழக்கறிஞர் காளீஸ்வரன் ராஜ் என்பவர் மூலம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தபால்மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமை மாணவர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும், தங்கள் தொகுதியைவிட்டு வெளியே தொழில் நிமித்தமாக, வேலை காரணமாக வந்துள்ள மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

தங்கள் தொகுதியை விட்டு வெளியே வசிக்கும் மக்களுக்குத் தபால் வாக்களிக்கும் வசதி, மின்னணு மூலம் வாக்களிக்கும் வசதி போன்றவை வழங்கப்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வருவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சுதந்திரமாக, நியாயமாகத் தேர்தல் நடத்துவதற்கு எதிரானதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 60-ன்படி, தகுதியுள்ள வாக்காளர்களைத் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்," எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, " என்ன மாதிரியான மனு இது. இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பீர்களா. உங்கள் தொகுதி குறித்து எந்த கவலையும், கவனமும் செலுத்தாதபோது, எவ்வாறு சட்டம் உங்களுக்கு உதவும்" எனக் கேள்வி எழுப்பினர்.

இதுபோன்று தொகுதிக்கு வெளியே இருப்பவர்கள் வாக்களிக்க ஏதேனும் இடத்தை நிர்ணயிக்கமுடியுமா. அதற்கு நாடாளுமன்றம், மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா எனக் கேட்டனர்.

இதையடுத்து இந்த மனுமீது மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர் என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: