கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் காணொளிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து இன்று துவக்கிவைத்தார்.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில் மேலும் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

வைகை நதி நாகரிகத்தை முழுமையான முறையில் ஆய்வு செய்யும் பொருட்டு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 7818 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன.

நான்காம் கட்ட அகழாய்வு முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஆறாம் கட்ட அகழாய்வில் 913 தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு, மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி, எடைக்கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன.

கீழடி அருகே அமைந்துள்ள கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அகரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் நுண் கற்காலத்தை சார்ந்த கத்திகள், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயம், கரிமமயமான நெல், புகைப்பான் ஆகியவையும், மணலூரில் கட்டுமான அடையாளங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை அறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த அகழாய்வில் தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, புவிசார்வியல் மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, தொல்லியல் கோட்பாடு மற்றும் முறைகள், உலோகவியல் ஆய்வுகள், தொல் மரபணு பகுப்பாய்வு, பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியல், மகரந்த பகுப்பாய்வு, எலும்புகளுக்கான AMS காலக்கணக்கீடு ஆகிய பணிகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

கீழடி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தா? உள் துறை அமைச்சர் அமித் ஷா பதில்

இன்று (பிப்ரவரி 13, சனிக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், மத்திய உள் துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் 2021-ஐ தாக்கல் செய்து, மக்களவை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு கொடுத்து சட்டமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்தப் புதிய சட்டம் வழியாக, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா என மக்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மக்களவையில் பதிலளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டத்துக்கும், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறினார். ஆனால் சரியான நேரத்தில், அவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் எனக் கூறினார் அமித் ஷா.ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேச கேடரில் பணி புரியும் சிவில் அதிகாரிகளை, AGMUT என்றழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம், போன்ற யூனியன் பிரதேசங்களின் சிவில் பணியாளர்கள் கேடரில் இணைக்கத் தான் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் 2021-ஐ மத்திய அரசு கொண்டு வருவதாக பிடிஐ செய்தி முகமையில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் செளத்தரி கடுமையாக எதிர்த்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: