You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதல் திருமணம் - மகளின் கருவை கலைத்த பெற்றோர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
சேலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கருவை கலைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக் கொலை செய்வதும், தாக்குதல் நடத்துவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆணவக் கொலை தொடர்பாக காவல் துறையும், நீதிமன்றமும் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் காதல் திருமணம் செய்த பெண்ணின் கருவை கலைத்து அவரது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி செல்வி (37). இவர்களின் 19 வயது மகள் ரேணுகா தேவி. இவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தஞ்சாக்கூர் பகுதியைச் சேர்ந்த பெருமாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மகளின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதல் திருமணம் செய்துகொண்ட தங்களுடைய பெண்ணை மீட்டுத் தர வேண்டும் என உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும் காதல் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து தனது கணவருடன் சென்றார் ரேணுகாதேவி.
இந்நிலையில் கடந்த மாதம் தனது காதல் கணவருக்கு தெரியாமல் பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார் ரேணுகாதேவி. இதைத்தொடர்ந்து சில நாட்களாக பெற்றோரின் வீட்டிலேயே தங்கினார். இந்த நிலையில் கர்ப்பமாக உள்ள தனது மகளின் கருவை கலைக்க ரேணுகாதேவியின் பெற்றோர் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து தனியார் நர்சிங் ஹோமில் மகளை அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். பெற்றோர் சூழ்ச்சி செய்து கருக்கலைப்பு செய்த விவரத்தைப் பெருமாளிடம் தெரிவித்துள்ளார் ரேணுகாதேவி.
அதன்பேரில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெருமாள் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் ஆத்தூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் ரேணுகாதேவியின் பெற்றோர் சுப்பிரமணியம், செல்வி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவைக் கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்கிறது இந்தியத் தண்டனை சட்டம்.
சட்டமும், கடுமையான தண்டனையும் இருந்தாலும் சட்டவிரோதமாக கருக்கலைப்புகள் நடந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் அருள் கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அருள் சரண்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சரண்யா மீண்டும் கருவுற்றார்.
சரண்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் குழந்தையின் பாலினம் குறித்துத் தெரிந்து கொள்ள முடிவு செய்துள்ளார் சரண்யாவும், அவரது அம்மாவான பூங்கொடியும். சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து சரண்யாவின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறிந்து கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்யும்போது சரண்யாவின் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை மூலமாக சரண்யாவின் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மல்லியகரை காவல்துறை சட்டவிரோத கருக்கலைப்பு ஈடுபட்ட சரண்யாவின் தாய் பூங்கொடி அவருக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கருக்கலைப்பு தடைச் சட்டம் கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு சம்பந்தமாகச் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இரண்டு நாளில் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
- "இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை மீட்காது": ஜோதி சிவஞானம்
- உதவிக்கு யாரும் இல்லாதவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ - குவியும் பாராட்டுகள்
- ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியது; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு
- மூளையில் பொருத்திய சிப் மூலம் வீடியோ கேம் விளையாடும் குரங்கு - ஈலோன் மஸ்கின் புதிய அறிவிப்பின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: