தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன?

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு
படக்குறிப்பு, ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் நேற்று (ஜனவரி 31, திங்கட்கிழமை) இரவு குடிபோதையில் ஏரல் பஜார் பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் முருகவேலை கண்டித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

முருகவேல் வாழவல்லான் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர்கள் முருகவேலை வீட்டுக்கு போகும்படி மீண்டும் கண்டித்துள்ளனர்.

இதனால் மதுபோதையில் இருந்த முருகவேல், உதவி ஆய்வாளர் பாலு மற்றும் மற்றுமொரு காவலர் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறியரக லாரியை கொண்டு மோதியுள்ளார்.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த உதவி ஆய்வாளர் பாலு நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இறந்த உதவி ஆய்வாளர்க்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற காவலர், பலத்த காயத்துடன் ஏரல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் காவலர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறியரக லாரியை கொண்டு மோதிய முருகவேலை காவல்துறையினர் தனி படை அமைத்துதேடி வந்தனர்.

காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள முருகவேலின் படம்
படக்குறிப்பு, காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள முருகவேலின் படம்

இந்த நிலையில், விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகவேல் சரண் அடைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக ஏரல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற மதுரை டிஐஜி ராஜேந்திரன், விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியான வல்லநாடு காட்டுப் பகுதியில், சாயர்புரம் பண்டாரவிளையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காவலர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது சிறியரக லாரியை கொண்டு உதவி காவல் ஆய்வாளரை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஏரல் அடுத்த வாழவல்லான் பகுதியை சேர்ந்தவர் முருகவேல், அந்த பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று இரவு ஏரல் பஜார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தகராறு செய்த முருகவேலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

முருகவேல் வாழவல்லான் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட போது, அங்கு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் ஒருவர், முருகவேல் மது போதையில் இருந்ததால் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பெற்று கொண்டு நாளை காவல்நிலையம் வரும்படி எச்சரித்து சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

முருகவேல் மீண்டும் நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் அவருக்கு சொந்தமான மெக்கானிக் கடையை திறக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த உதவி ஆய்வாளர் பாலு நள்ளிரவில் கடையை திறக்கக் கூடாது என கூறி சென்றுள்ளார்.

இதனால் மதுபோதையில் இருந்த முருகவேல், அவரது முதலாளிக்கு சொந்தமான சிறியரக லாரியை கொண்டு உதவி ஆய்வாளர் மற்றும் மற்றுமொரு காவலர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் உதவி ஆய்வாளர் பாலு உயிரிழந்தார். உடனிருந்த காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறியரக லாரியுடன் தப்பி சென்ற முருகவேலை பிடிக்க 10 தனி படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு வாகனத்துடன் அவர் தப்பியுள்ளாரா என தூத்துக்குடி - மதுரை, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று கூறினார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகவேல் விரைவில் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: