விவசாயிகள் போராட்ட நாள் 44: 8வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது, வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இந்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வரும் 15ஆம் தேதி நடத்தலாம் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த், "அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஒருபோதும் நாங்கள் பணிய மாட்டோம். மீண்டும் 15ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருவோம். நாங்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். அரசாங்கம், சட்டத்திருத்தம் பற்றி பேசுகிறது. ஆனால், அது பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

ஆனால், இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "சட்டத்தை எதிர்க்கும் இதே விவசாயிகள் சங்கங்களில் பல, அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை ஏற்பதாக கூறியுள்ளன. எனவே, சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கங்களுடன் தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். சட்டத்தை ஆதரிப்போருடனும் தொடர்ந்து அரசு பேசி வருகிறது," என்று கூறினார்.

டெல்லியின் எல்லைகளில் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகரில் கடும் குளிர் மற்றும் கடந்த இரு வாரங்களாக பொழியும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான அரசு தரப்பு குழுவுடன், விவசாயிகள் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். டெல்லி விஞ்ஞான் பவனி்ல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, முந்தைய சுற்றுகளில் தெளவுபடுத்தியதை போலவே, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் மத்திய அரசு உறுதிகாட்டியதாக விவசாயிகள் கூறினார்கள். அதில் திருத்தம் செய்வது பற்றியும் அதன் அம்சங்கள் குறித்தும் அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு கூட்டத்தில் விளக்க அமைச்சர்கள் முற்பட்டனர். ஆனால், அதை விவசாயிகள் தரப்பு ஏற்கவில்லை. தங்களின் பிரதான கோரிக்கையே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை எட்டப்படாத நிலையில், இரு தரப்பும் பேச்சுவார்த்தையை நிறைவு செய்தனர்.

இதையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வரும் 15ஆம் தேதி நடத்திக் கொள்ள இரு தரப்பும் தீர்மானித்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த விவசாயிகள் தரப்பிடம், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு விவசாயிகள், "விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான பதில் அரசிடமே உள்ளது. நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம்" என்று கூறினர்.

"நாங்கள் அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தை ஆட்சேபிக்கவில்லை. மாறாக, அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களே தவறானவை என்று கூறுகிறோம். எனவே, அதில் ஒரு முடிவுக்கு அரசு வந்த பிறகே சட்ட வாய்ப்புகளை நாங்களை ஆராய்வோம் என்று விவசாயிகள் தரப்பினர் கூறினார்கள்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது, அப்போதும் சட்டங்களை திரும்பப்பெறும் யோசனையை அரசு ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :