விவசாயிகள் போராட்டம்: சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு - அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் 35ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளில் முக்கியமானதாக கருதப்படும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்பதில் இந்திய அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிவரை நீடித்தது.
இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயிகள் முன்வைத்த 4 பிரச்னைகளில் 2க்கு கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது," என்று கூறினார்.
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று ஆரம்பம் முதலே அரசு தொடர்ந்து பேசி வருகிறது என்று கூறிய அவர், அந்த விலை நிர்ணய கொள்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தேவை என விவசாயிகள் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக விவாதிக்க அரசு தொடர்ந்து தயாராக உள்ளது என்பதால் வரும் ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடி பேச தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் தோமர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
விவசாயிகள் முன்வைத்த வேறு சில பிரச்னைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவை குறித்து அமைச்சர் தோமர் விளக்கவில்லை.
இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் விவசாயிகள் அமைப்புகள் உறுதியாக உள்ளன. ஆனால், அவற்றை திரும்பப் பெறாமல் திருத்தங்களை செய்யலாம் என்று மத்திய அரசு கூறி வருவதால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை நிலவுகிறது.
முன்னதாக, புதன்கிழமை பேச்சுவார்த்தை தீர்க்கமானதாக இருக்கும் என்றும் விவசாயிகளின் போராட்டம் முடிவடையும் என்றும் பேச்சுவார்த்தையில் அரசு சார்பில் பங்கெடுத்த அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்ற இந்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார்.
அனைத்து விஷயங்களும் புதன்கிழமை விவாதிக்கப்படும் என்று அவர் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூறினார்.
விவாதிக்கப்படும் பிரச்னைகள்
இந்திய அரசு கடைப்பிடிக்கும் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) கொள்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images
முழு தீர்வை எட்டாத பேச்சுவார்த்தை
விவசாய போராட்டக் குழுவின் (பஞ்சாப்) இணைச் செயலாளர் சுக்விந்தர் சிங் சப்ரா, "இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
"விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையில் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. பேச்சுவார்த்தை மூலம் அரசாங்கம் எங்களுக்கு எந்தவொரு தீர்வையும் தர முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் மூன்று சட்டங்களை திரும்பப் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை இந்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் "போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு விரும்புகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்தே புதன்கிழமை ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்றைய கூட்டத்தின்போது விவசாயிகள் தரப்பு கோரும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக அரசு தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டாலும், அது தொடர்பான சட்டப்பூர்வ அந்தஸ்தை விவசாயிகள் தரப்பு கோரியது.
இந்த விவகாரத்தில் ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையிலும் கருத்தொற்றுமை எட்டப்படாததால், 35 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மேலும் சில நாட்களுக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- "ரஜினி ஒரு கண், மோதி மற்றொரு கண்" - அர்ஜுனமூர்த்தி தரும் புதிய விளக்கம்
- சீன எல்லையில் படை குறைப்பை செய்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
- 'சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்': தமிழருவி மணியன்
- ரஜினி ரசிகர்கள்: "இதயத்தில் இடி இறங்கியுள்ளது"
- கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












