மகாராஷ்டிராவில் ஆங்கிலேயரை அதிர வைத்த விவசாயிகளின் 6 ஆண்டுகள் வேலை நிறுத்தம்

    • எழுதியவர், நம்டியோ அஞ்சனா
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் கடும் குளிர் நிலவுகிறது. சராசரி வெப்ப நிலை 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கீழே இறங்கிவிட்டது. ஆனால் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நாட்டின் தலைநகர எல்லையில் உறுதியுடன் அமர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து 6 மாதங்கள் போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தங்களுடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர். போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட பிறகும் அவர்கள் பின்வாங்காமல் இருக்கிறார்கள். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில், போராட்டம் தொடரும் என்பது தான் விவசாயிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு போராட்டத்தைத் தொடருவதில் இந்த விவசாயிகள் உறுதியாக இருப்பார்களா என்பதில் பலர் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் மகாராஷ்டிராவில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நீடித்த விவசாயிகள் வேலைநிறுத்தம் பற்றி அறிந்து கொள்வது பலருக்கு நம்ப முடியாத விஷயமாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில் எந்த விவசாயியும், எந்த விளைச்சலையும் அறுவடை செய்யவில்லை. அதனால் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை.

மகாராஷ்டிர விவசாயிகளின் அந்தப் போராட்டம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அது `சாரி விவசாயிகள் வேலைநிறுத்தம்' என்று குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் கோட்டி நடைமுறையை எதிர்த்து அந்த விவசாயிகள் துணிச்சலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே சாரி கிராமத்தில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போராட்டம் தொடங்கியது. மகாராஷ்டிராவில் வேளாண் துறையில் பல முக்கியமான மாற்றங்களை ஏற்பட்ட அந்தப் போராட்டம் தூண்டியது.

பாரத ரத்னா டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார். சொல்லப்போனால், பாபாசாகிபின் சுதந்திர தொழிலாளர் கட்சிக்கான விதை இந்தப் போராட்டத்தில் தான் உருவானது.

பிரிட்டிஷ் அரசை இறங்கி வரும்படி செய்த அந்தப் போராட்டத்தை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைவர் நாராயண் நாகு பாட்டீல் முன்னெடுத்து நடத்தினார். அந்த வேலைநிறுத்தம் காரணமாகத்தான் மகாராஷ்டிராவில் குடிநில உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளின் போராட்டங்களில் மிக நீண்ட காலம் நடந்த அந்தப் போராட்டம் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கிறோம். ஆனால் அதற்கு முன்னதாக, இந்தப் போராட்டத்தை நன்கு புரிந்து கொள்ள வசதியாக, முதலில் கோட்டி நடைமுறை பற்றி அறிந்து கொள்வோம்.

கோட்டி நடைமுறை என்பது என்ன?

கோட்டி என்பது பெரிய நில உடமையாளர்களைக் குறிக்கும். பெஷாவாக்கள் காலத்தில் இருந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட நில உரிமையாளராக கோட்டிகள் இருந்தனர். விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலித்து அதை அரசுக்கு செலுத்துவது கோட்டிகளின் பிரதானப் பணியாக இருந்தது. கோட்டிகள் கட்டுப்பாடு செலுத்தும் கிராமங்கள் `கோட்டி கிராமம்' என அழைக்கப்பட்டன.

``கோட்டிகள் தங்களையே அரசாங்கம் என நினைத்துக் கொண்டார்கள். குத்தகைதாரர்களின் வருமானத்தை அவர்கள் கொள்ளையடித்தார்கள். இந்தக் குத்தகைதாரர்கள் ஆண்டு முழுக்க கடுமையாக உழைத்து விளைவித்தனர். ஆனால் எல்லா உணவு தானியங்களும் கோட்டிகளிடம் சென்றன. இது மட்டுமின்றி, தங்களுடைய சொந்த வேலைகளைச் செய்யவும், குத்தகைதாரர்களை கோட்டிகள் பயன்படுத்திக் கொண்டனர்'' என்று சாரி விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து ஆய்வு செய்த க்ருஷிவல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.எம். தேஷ்முக் கூறியுள்ளார்.

குத்தகைதாரர் அல்லது கூலி என்பது வேறு ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்யக் கூடியவர் அல்லது கூலி வேலை செய்பவர் என்று பொருள்.

``விவசாய தொழிலாளர்கள் எழுத்தறிவு இல்லாதவர்கள் என்பதால் அவர்களை கோட்டிகள் ஏமாற்றினர். இதற்காக ஒப்புதல் ஒப்பந்தம் என்ற `கபுலாயத்'- ஐ கோட்டிகள் உருவாக்கினர். நிலத்தின் குத்ததைக் காலம் 11 மாதங்கள் என்று அதில் எழுதப் பட்டிருக்கும். ஒரு ஏக்கருக்கு ஒரு காண்டி (சுமார் 74 கிலோ) அளவுக்கு அரிசியை தங்களுக்குத் தர வேண்டும் என்று கோட்டிகள் கூறினர். அந்த ஆண்டில் முடியாமல் போனால், அதற்கடுத்த ஆண்டில் ஒன்றரை மடங்காக வசூலிக்கப்படும். எனவே நிலத்தை உழுது, விளைவிக்க கடுமையாக உழைத்தாலும் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்காது என்ற நிலை இருந்தது'' என்று தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

``குத்தகை நில நடைமுறையில், விளைவிக்கப்படும் காய்கறிகள் கோட்டிகளுக்குச் சொந்தம் என குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஒரு விவசாயி மாமரம், தென்னை அல்லது பலா மரம் வளர்த்தால், அந்த மரங்களில் விளையும் காய்கள், கனிகளில் கோட்டிகளுக்கு உரிமை இருந்தது. அது எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது. கிராமத்தில் குத்தகையில் இருக்கும் நிலம், அந்த சமுதாயத்து மக்களுக்குச் சொந்தமானது என்றாலும், அதில் கோட்டிகள் உரிமை கோரினர். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களை கட்டாயப்படுத்தி தங்களுடைய வேலைகளை செய்து கொண்டனர். நிலத்தில் சாகுபடி செய்ய அவர்கள் கடுமையாக உழைக்கும் நிலையை உருவாக்கினர்'' என்றும் தேஷ்முக் குறிப்பிட்டுள்ளார்.

``ஒரு குத்தகை விவசாயி முறையாக தொகை செலுத்தாவிட்டால், சில நேரங்களில், அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் அடிமைகளாக பிடிக்கப்படுவார்கள். மனிதாபிமானம் இல்லாத அப்படியொரு நடைமுறை கொங்கன் பகுதியில் அமலில் இருந்தது'' என்று எஸ்.எம். தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல பகுதிகளில் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு உருவானது. சிலநேரம் ரட்னகிரியில் கேட் தாலுகாவில், சில நேரம் ராய்காட்டில் பென் தாலுகாவில் பிரச்சினைகள் எழும். ஆனால், அந்த எதிர்ப்புகள் முறியடிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

1921 முதல் 1923 வரையில் ராய்காட்டில் கோட்டிகளுக்கு எதிராக, பல்வேறு நிலைகளில் இந்தப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவை அனைத்துமே முறியடிக்கப்பட்டன. நாராயண் நாகு பாட்டீல் இந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனவே கோட்டி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவது என அவர் யோசித்தபோது, பல்வேறு கிராமங்களில் விவசாயக்

ஆறு ஆண்டு கால போராட்டத்தின் தொடக்கம்

கோட்டிகளுக்கு எதிராக 1927-ல் `கொங்கன் பகுதி விவசாயிகள் சங்கம்' தொடங்கப்பட்டது. பாய் அனந்த் சித்ரே என்பவர் அதன் செயலாளராக இருந்தார். ராய்காட், ரட்னகிரி மாவட்டங்களில் கோட்டி நடைமுறைக்கு எதிராக இந்தச் சங்கம் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியது.

போராட்டங்களை முறியடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. பல சமயங்களில் நாராயண் நாகு பாட்டீல், பாகு அனந்த் சித்ரே ஆகியோர் பொதுக் கூட்டங்களில் பேச தடை விதிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளின் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது.

இந்தப் போராட்டத்தில் மிக முக்கியமான மாநாடு பென் தாலுகாவில் 1930 டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெற்றது. அது கொலாபா மாவட்ட விவசாயிகள் மாநாடு என்று அழைக்கப் படுகிறது. அப்போது ராய்காட் மாவட்டம் கொலாபா மாவட்டமாக இருந்தது. மாநாட்டை நாராயண் நாகு பாட்டீல், பாய் அனந்த் சித்ரே ஆகியோர் முன்னின்று நடத்தினர். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அடுத்து வரக் கூடிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உத்வேகம் அளிப்பவையாக இருந்தன.

ஒரு தீர்மானத்தில் 28 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: கோட்டி நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், சாகுபடி செய்து கொண்டிருப்பவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக ஆக்க வேண்டும், உரிமை கேட்புகள் மற்றும் வட்டிகளை குறைக்க வேண்டும், கபுலாயத்தின் (வேளாண்மை ஒப்பந்தம்) ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டிருந்தன.

அந்த மாநாட்டிற்குப் பிறகு நாராயண் நாகு பாட்டீல், பாய் அனந்த் சித்ரே ஆகியோர் பேரணிகளில் உரை நிகழ்த்தி, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போதைய கொலாபா மாவட்டத்தில் கேட், டாலா, மன்காவன், ரோஹா, பென் என பல இடங்களில் பேரணிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோட்டி நடைமுறைக்கு எதிராக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தான் 1933-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் போராட்டத்தை உருவாக்கியது.

வரலாற்று முக்கியத்துவமான போராட்டத்தின் அறிவிப்பு

1931 முதல் 1933 வரையிலான காலத்தில் கோட்டி நடைமுறைக்கு எதிராக நாராயண் நாகு பாட்டீல், பாய் அனந்த் சித்ரே ஆகியோர் நடத்திய பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் போராட்டத்தின் வேகம் குறைந்தது. ஆனால் 1933-ல் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, சாரியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 25 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் பேரணி 1933-ல் நடைபெற்றது. சரியாகச் சொன்னால் 1933 அக்டோபர் 27 ஆம் தேதி அந்தப் பேரணி நடைபெற்றது.

அலிபாக்- வட்கல் சாலையில் உள்ள ஒரு கிராமம் தான் சாரி. வரலாற்று முக்கியத்துவமான போராட்டத்துக்கு அந்த கிராமத்தில் தான் அறிவிப்பு வெளியானது. சாரியில் நடைபெற்ற பேரணியை நாராயண் நாகு பாட்டீல் தான் முன்னின்று நடத்தினார்.

வேளாண் விளைபொருளுக்கு விவசாயிகளுக்கு நியாயமான வருமானம் கிடைக்காத காரணத்தால், அவர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போகிறார்கள் என அப்போது அறிவிக்கப்பட்டு, அதே நாளில் வேலைநிறுத்தம் தொடங்கியது. நில உரிமையாளர்களின் நிலங்களில் சாகுபடி செய்வதில்லை என்று குத்தகைதாரர்கள் முடிவு செய்தனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர கோட்டிகள் அழுத்தம் கொடுத்த போதிலும், விவசாயிகள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர். விவசாயம் நின்று போனால், இயற்கையாக எழக் கூடிய பசியை எப்படி சமாளிப்பது?

பட்டினி கிடந்தாலும் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்

அந்த வேலைநிறுத்தம் 1933 முதல் 1939 வரையில், அதாவது ஆறு ஆண்டுகள் நீடித்தது. சாரி கிராமத்தினருடன், 25 கிராமங்களும் சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்தன. அந்தக் கிராமங்களிலும் இதே பாதிப்புகள் இருந்தன.

போராட்ட காலத்தில் மிக மோசமான சூழ்நிலைகளை விவசாயிகள் சந்தித்தனர். காடுகளில் மரங்களை வெட்டுதல், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை எடுத்து விற்பதில் உயிரை காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.

`க்ரிஷிவல்' தொடக்கம்

கொலாபா சமாச்சார் போன்ற பத்திரிகைகள் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்பின.

``கொலாபா சமாச்சார் பத்திரிகையில் `நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையில் உறவைக் கெடுக்க முயற்சிக்கப்படுகிறது' என்று தலையங்கம் எழுதப்பட்டது. போராட்டத்தின் பின்னணி குறித்து சந்தேகங்களை எழுப்ப முயற்சித்தனர்'' என்று எஸ்.எம். தேஷ்முக் கூறியுள்ளார்.

முக்கிய பத்திரிகைகள் போராட்டத்தை ஆதரிக்காத நிலையில், மக்களின் பங்களிப்புடன் நாராயண நாகு பாட்டீல் தங்களுக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அந்த வகையில் 1937 ஜூலை 5 ஆம் தேதி க்ருஷ்வல் என்ற பத்திரிகையின் பயணம் தொடங்கியது. போராட்டம் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இந்தப் பத்திரிகை முக்கிய பங்கு வகித்தது.

இப்போது இந்தப் பத்திரிகைதான் ஷேட்கரி காம்கார் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக உள்ளது.

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் ஆதரவு

இந்தப் போராட்டத்திற்கு பாபாசாகிப் எப்படி ஆதரவு அளித்தார் என்பதை எஸ்.எம். தேஷ்முக் விரிவாக எழுதியுள்ளார். ``1934-ல் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. அதற்குத் தலைமை ஏற்கும்படி பாபாசாகிப் அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அவரை அழைக்க பாய் அனந்த் சித்ரே தாமே நேரடியாக மும்பை சென்றிருந்தார்'' என்று தேஷ்முக் எழுதியுள்ளார்.

`கோட்ஷாஹி முறையை ஒழியுங்கள், சௌகார்ஷாஹி முறையை ஒழியுங்கள்' என்பவை போன்ற கோஷங்கள் அந்த மாநாட்டில் எழுப்பப்பட்டன. விவசாயிகள் தொழிலாளர் கட்சி தொடங்கப்படுவதாக பாபாசாகிப் அறிவிப்பு வெளியிட்டார். ஷங்கர் ராவ் மோரே பிற்காலத்தில் தொடங்கிய ஷேட்கரி காம்கர் கட்சிக்கான தொடக்கம் சாரியில் நடந்த போராட்டத்தில் தான் உருவானது.

சௌகார்கள் எனப்படும் வட்டி கடைக்காரர்களுக்கு எதிராக உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆரம்பத்தில் இருந்து போராட்டத்தை எதிர்த்து வந்த கொலாபா சமாச்சார் பத்திரிகை `வட்டிக் கடைக்காரர்களை ஒழியுங்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியது.

ஆனால் பாபாசாகிப் வந்து சென்ற பிறகு பேச்சுவார்த்தைகளும் வேகமாக நடந்தன. 1935 ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோட்டிகள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையிலான சந்திப்புக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, போராட்டம் தொடர்ந்தது.

சில ஆண்டுகள் கழித்து, கோட்டி நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று சுதந்திர தொழிலாளர் கட்சியின் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது அரசாங்கம் விழித்துக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேசுவதற்கு மொரார்ஜி தேசாயை அனுப்பியது.

வருவாய் அமைச்சர் மொரார்ஜி தேசாய் பயணம்

மும்பை மாகாணத்தின் முதல்வராக பாலாசாகிப் கேர் இருந்தார். சாரி கிராமம் செல்ல வருவாய் அமைச்சர் மொரார்ஜி தேசாயை அவர் கேட்டுக்கொண்டார். நிலைமையை அறிந்து வரும்படி முதல்வர் கூறியிருந்தார். அப்போது மொரார்ஜி தேசாய் அளித்த வாக்குறுதியை நாராயண் நாகு பாட்டீல் ஏற்றுக் கொண்டார்.

ஒரு போராட்டத்தின் கதை என்ற தன்னுடைய சுயசரிதையில், ``மொரார்ஜியின் சமரசம் பாகுபாடு அற்றதாக, நான் எதிர்பார்த்ததைவிட சமன்நிலை கொண்டதாக இருந்தது. விவசாயிகளின் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. விவசாயிகள் வெற்றி பெற்றார்கள்'' என்று நாராயண் நாகு பாட்டீல் எழுதியுள்ளார்.

அதன்பிறகு போராட்டத்தின் தீவிரம் விலகத் தொடங்கியது. வேலைநிறுத்தம் காரணமாக விவசாயிகளும் சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். தங்களுக்கான உணவும் கிடைக்கவில்லை. வேறு பல நெருக்கடிகளையும் சமாளித்தனர். இருந்தாலும் வேலைநிறுத்தம் ஆறு ஆண்டுகள் நீடித்தது.

1939 ஆம் ஆண்டில், குத்தகைதாரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. எனவே 1933 அக்டோபர் 27ல் தொடங்கிய போராட்டம், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.

குத்தகைதாரர் சட்டத்தின் தொடக்கம்

இந்தப் போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் குத்தகைதாரர்களுக்கு 1939ல் அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு கிடைத்தது. `உழுபவனுக்கு நிலம்' என்ற கொள்கை ஏற்கப்பட்டு, உண்மையில் அதில் உழவு செய்து கொண்டிருந்த விவசாயிக்கே அதன் உரிமையை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டது.

முதலில் சட்டபூர்வ குத்தகைதாரர்களின் பெயர்கள் நிலத்தின் ஆவணங்களில் சேர்க்கப்பட்டது. பிறகு 1948-ல் குத்தகைதாரர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது குத்தகைதாரர்களுக்கு மேலும் உரிமைகள் கிடைத்தன.

குடியிருப்பவருக்கு வீடு, உழுபவருக்கு நிலம் என்பது தான் குத்தகைதாரர் சட்டத்தின் பிரதான அம்சமாக இருந்தது என்று வைஷாலி பாட்டீல் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நிலம் கிடைத்துவிட்டது. ஆனால் குடியிருப்பவர்கள் வீடுகளைப் பெற போராட்டம் தொடர்ந்தது.

ஆர்.வி. பூஷ்குட்டே போன்ற மூத்த சமூகப் போராளிகள் `குடியிருப்பவருக்கு வீடு' பெற்றுத் தர முயற்சி செய்தனர். 2000வது ஆண்டில் இந்தப் பிரிவை குத்தகைதாரர் சட்டத்தில் சேர்க்க அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது என்று வைஷாலி பாட்டீல் தெரிவிக்கிறார்.

எனவே 1933-ல் தொடங்கிய, அல்லது அதற்கு முன்னர் தொடங்கிய ஒரு போராட்டத்திற்கான இயக்கம் 2000வது ஆண்டில் நிறைவு பெற்றது.

இப்போதும் கூட மகாராஷ்டிராவில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு சாரி விவசாயிகள் வேலைநிறுத்தம் தான் அடித்தளமிட்டது என்று மூத்த வயதுடைய விவசாயிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :