சீமான் பதிலடி: "சூர்யா அளவுக்காவது விஜய் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம், NAAM TAMILAR
நடிகர் சூர்யா அளவுக்காவது மக்களுக்காக விஜய் குரல் கொடுக்க வேண்டும்; அவரது புகழ் வெளிச்சத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவனுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார் சீமான்.
"இதுதான் பாதை என அடையாளம் காட்டியவர் தொ.ப. சிவனுக்கு மூத்தவர் முருகன் என சொல்லி வளர்த்தவர். அவருக்கு நாம் தமிழர் கட்சி, மதிப்பு மிக்க புகழ் வணக்கத்தை செலுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், "நேற்று முன்தினம் விஜய் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக விஜய் ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்களே" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சீமான், "கோபமாக இருந்தால் என்ன ஆகிவிடும்? என் தம்பிகள்தான் அவர்கள். அவர்கள் அரசியல்படுத்தப்படவில்லை. ஒரு நடிகர் நடிப்பதாலேயே நாடாள தகுதி வந்துவிடுகிறது என்பதை நான் ஏற்கவில்லை. எங்களுடைய கோட்பாடு ஏற்கவில்லை. தியாகங்களை திரைக் கவர்ச்சியில் மூடுவதை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆரை நாங்கள் தொடாமல் பயணித்தது ஏன் என உங்களுக்குத் தெரியும். அவருக்கு முன்பாக, காமராஜர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். நல்லக்கண்ணு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவர்களை விட்டுவிட்டு, எம்ஜிஆர் வரணும், ரஜினி வரணும்னா வெறுப்பாகுமா, ஆகாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "தொடக்க காலத்தில் இருந்து தம்பி விஜய்யை எந்த அளவுக்கு தற்காத்து நின்ற அண்ணன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் மேல எனக்குப் பேரன்பு உண்டு. குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவது அவர் குரல் கொடுக்க வேண்டும். அவர் புகழ் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக நிற்க வேண்டும். அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வந்து அரசியல் செய்யுங்கள். களத்தில் நின்று மக்களுக்காகப் போராடி, நன்மதிப்பைப் பெற்று வரட்டும். வெறும் திரைக்கவர்ச்சியை வைத்து நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்கிறேன். அதை விஜய்க்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்" என்றார்.
நாம் தமிழர் கட்சி மக்களுக்காக நிற்கிறது என்றபோதும் மக்கள் நிராகரித்து விட்டார்களே, உள்ளாட்சித் தேர்தலில்கூட போதுமான இடங்கள் கிடைக்கவில்லையே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், "இது பைத்தியக்காரத்தனமான கேள்வி. 12 விழுக்காடு வாக்குகளை மக்கள் செலுத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்களை வென்றிருக்கிறோம். எளிய மக்கள் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். நான் இந்த வேலையைச் செய்வதில் மன நிறைவு அடைகிறேன். என்னை அங்கீகரி, அங்கீகரிக்காமல் போ.. அதில் என்ன இருக்கிறது? நான் பிறந்த கடனைச் செய்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

பா.ஜ.கவில் இணைந்த கமல் கட்சியின் ஆரம்ப கால நிர்வாகி

பட மூலாதாரம், ANI
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம், அதிலிருந்து விலகி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் இன்று இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் துவங்கப்பட்டதிலிருந்தே அக்கட்சியில் இருந்தவர் என்பதோடு, கமல்ஹாசனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துவந்தார் ஏ. அருணாசலம். இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொலைநோக்கு சிந்தனையுடன் விவசாயச் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஒரு விவசாயியாக இவை பயனுள்ள சட்டங்கள். இந்தப் புதிய விவசாயச் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்திருக்கிறேன். விவசாயிகளின் நலன் கருதி பா.ஜ.கவில் சேர்ந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது முதலே, அக்கட்சியில் அருணாச்சலம் பொறுப்பை வகித்து வந்தார்.
இதற்கிடையில், அருணாச்சலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோட்பாடுகள், வழிகாட்டுதல்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தினால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்
- கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்துவின் உண்மையில் எப்படி இருப்பார்?
- இஸ்லாமியர்களின் பார்வையில் இயேசு கிறிஸ்து -அரிய தகவல்கள்
- ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - எங்கே? என்ன பிரச்சனை?
- தொ.பரமசிவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிக்கை
- இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?
- கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி
- புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























