பாஜக, டிஎம்சி மோதலால் பிரிந்த தம்பதி – கண்ணீருடன் விவாகரத்து கேட்கும் மேற்கு வங்க எம்.பி

பட மூலாதாரம், BAPI BANERJEE
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
மேற்கு வங்கத்தில் இரு வேறு அரசியல் கட்சிகளிடையே நிலவும் போட்டி, பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தம்பதி பிரியும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவை சேர்ந்த எம்.பி. செளமித்ரா கான், அதே கட்சியில் இருந்த தனது மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணமூல் காங்கிரஸில் கடந்த செவ்வாய்க்கிழமை இணைந்த காரணத்துக்காக அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தை போலவே மேற்கு வங்க மாநிலமும் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜகவும், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸும்தான் போட்டிக் கட்சிகளாக பார்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பல காரணங்களால் தான் பாஜகவை விட்டு விலகுவதாக சுஜாதா மொண்டல் தெரிவித்தார்.
பாஜக தன்னிடம் எந்த மரியாதையையும் காட்டவில்லை என்றும், போட்டி கட்சிகளை சேர்ந்த "ஊழல் தலைவர்களை" கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக கட்சி வாக்குறுதி அளித்துள்ளது என்றும் சுஜாதா கூறினார்.
"பாஜக திரிணமூல் காங்கிரஸின் பி டீம். எனவே நான் ஏன் இந்த கட்சியில் இருக்க வேண்டும் நான் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே ஏன் செல்லக்கூடாது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 40 வயதாகும் கான், கண்ணில் நீருடனும், ஆற்றாமையுடனும், கோபமாக தனது மனைவியை பிரியும் முடிவை அறிவித்தார்.
மேலும் தனது மனைவியிடம்," தயவு செய்து உங்கள் பெயருக்கு பின்னால் கான் என்ற பெயரை பயன்படுத்தாதீர்கள். உங்களை செளமித்ரா கானின் மனைவி என்று கூறிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எந்த அரசியல் கட்சியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்," என பிடிஐ செய்தி முகமையிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் தனது குடும்பத்தை அழித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், BAPI BANERJEE
"திரிணமூல் காங்கிரஸ் எனது மனைவியை பறித்துக் கொண்டு விட்டது. எனது காதலை என்னிடமிருந்து பிரித்துவிட்டது," என்று அவர் குற்றம்சாட்டினார்.
"இந்த தம்பதியின் செயல், நாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு அரசியல் நாடகமாக இருந்தது" என்கிறார் கொல்கத்தாவின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். மேலும் "இந்த திருமணம் முறிவு அறிவிப்பு சம்பவம்" செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.
திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு அந்த தம்பதி தனித்தனியாக பல நேர்காணல்களை கொடுத்து விட்டனர். அவர்களின் அரசியல் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைந்து சிக்கிக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
"அவள்தான் எனது காதல். அவள் ஒரு நல்ல மனைவி. அவள்தான் எனது பலவீனம். நான் உணர்ச்சிவசப்படுபவன். நாங்கள் பத்து வருடம் இணைந்து வாழ்ந்திருக்கிறோம்." என பத்திரிகையாளர் ஒருவரிடம் தெரிவித்தார் கான்.
கடந்த வருடம் தேர்தலில் வெற்றி பெற்றதில் தனது மனைவி ஆற்றிய பங்கு குறித்தும் அவர் குறிப்பிட்டார். குற்றவியல் வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்று கூறி தனது தொகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டபோது அவருக்காக அவரது மனைவிதான் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். மேலும் தொலைதூர கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.
"எங்களின் கதை முடிந்துவிட்டது. எனக்கு அவளுடன் எந்த தொடர்பும் இல்லை." என்கிறார் கான். மேலும் "சுஜாதா என்னை பொறுத்தவரை உயிருடன் இல்லை." என்றும் தெரிவித்தார்.
மற்றொருமொரு பேட்டியில், அவரது மனைவி பாஜகவில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறியது குறித்து கேட்டபோது, மோதி அவரை சகோதரி என்று அழைக்கிறார். அதற்கு மேல் என்ன வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BAPI BANERJEE
சுஜாதா மொண்டல் அழுது கொண்டே பல நேர்காணல்களில் பேசினார். தனது கணவர் கடந்த 10 மாதங்களாக தன்னை புறக்கணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"அவர் அரசியலில் பிஸி ஆக உள்ளார். அவரால் எனக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. பல மாதங்களாக நான் தூங்கினேனா சாப்பிட்டேனா என்றுகூட அவர் கேட்கவில்லை." என்கிறார் அவர்.
மேலும் பாஜக தலைவர்கள், "திருமணத்தை முறிக்க எனது கணவரை தூண்டுகிறார்கள்" என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
சில முக்கிய சேனல்களில் கண்ணீருடன் பேசிய சுஜாதா, "அவர் என்னை விவாகரத்து செய்வேன் என்று அச்சுறுத்தும் நிலைமை வருவதற்கு யார் காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.
செளமித்ரா கான் தனது அரசியல் பயணத்தை காங்கிரஸில்தான் தொடங்கினார். பின் 2013ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் 2019ஆம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார்.
"தந்தை, மகன், சகோதரர்கள், மாமன், மச்சான் என பல உறவுகள் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர். அங்கெல்லாம் யாரும் யாரையும் விவாகரத்து செய்யச் சொல்வதில்லை," என்கிறார் சுஜாதா.
"இது பாஜகவின் வேலை. அவர்கள் என்னவிட்டு விடும்படி செளமித்ராவிடம் சொல்கின்றனர்." என ஒரு நேர்காணலில் கூறிய சுஜாதா, "வீட்டு விவகாரத்தையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















