You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: 'பாஜக அதிகார பலம்; அதிமுக பண பலத்தை மீறி வெல்ல வேண்டும்' - மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி முதல் வாரத்தில் தமது நேரடித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கப் போவதாகவும், தேர்தல் ஒருவேளை முன்கூட்டியே வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று காலை தொடங்கி அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. இதில் ஆற்றிய உரையில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின்போது ஸ்டாலினின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 16,000 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல், 1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுக அடைந்த வெற்றியை போல வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றியை அடைய வேண்டும் என்று தொண்டர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
"மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கும் அதிகார பலத்தையும் மாநிலத்தில் அதிமுகவுக்கு இருக்கும் பணபலத்தையும் மீறி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும்," என்று தமது உரையில் ஸ்டாலின் கூறினார்.
16,000 கிராமசபை கூட்டங்கள்
தேர்தல் பரப்புரையின் போது தமிழகம் முழுவதும் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவற்றில் 1,500 கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் தமது உரையில் துரைமுருகன் குறிப்பிட்டார்.
தேர்தல் பரப்புரையின் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசவுள்ளார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பிடப்பட்ட திமுகவின் தேர்தல் பரப்புரை காணொளியும் இன்று வெளியிடப்பட்டது.
திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி தலைவர் மு.க. கனிமொழி ஆகியோர் ஏற்கனவே தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்