You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் அய்யாக்கண்ணு - போராட்ட பகுதிக்கு செல்ல விடாமல் தடுப்பதாக போலீஸ் மீது புகார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகருக்கு வந்தபோதும் அவரால் இன்னும் போராட்ட பகுதிக்கு செல்ல முடியவில்லை.
திருச்சியில் உள்ள தனது வீட்டில் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்த அவரும் அவரது சங்கத்தைச் சேர்ந்தவர்களும், மதுரை உயர் நீதிமன்றத்துக்கு செல்வதாகக் கூறி திங்கட்கிழமை இரவு மதுரை வழியாக டெல்லிக்கு விமானத்தில் வந்தனர்.
அவர்களை விமான நிலைய வளாகத்திலேயே வழிமறித்த காவல்துறையினர் கரோல் பாகில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரவைக் கழித்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் அந்த விடுதி முன்பாக உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சில காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
அப்போது தனது சக விவசாயிகள் சங்கத்தினருடன் வெளியே வந்த அய்யாக்கண்ணுவிடம், எங்கே செல்கிறீர்கள் என்று காவல்துறையினர் கேட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் விவரத்தை காண்பதற்காக டெல்லி வந்திருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இதையடுத்து எங்கு செல்ல வேண்டுமென்றாலும் நாங்களே அழைத்துச் செல்கிறோம் என்று காவல்துறையினர் நிர்பந்தித்தனர். பிறகு அவர்களுடைய வாகனத்திலேயே அய்யாக்கண்ணுவும் அவருடன் வந்தவர்களும் போலீஸ் வாகனத்தில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கேயும் அவர்களை காவல்துறையினர் கண்காணித்தனர். பிறகு அங்கிருந்து டெல்லி எல்லை பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற மாநில விவசாயிகள் இருக்கும் பகுதிக்கு செல்ல அய்யாக்கண்ணு திட்டமிட்டார். ஆனால், அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறிய காவல்துறையினர் பிறகு அய்யாக்கண்ணுவை கரோல் பாக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரது செல்பேசி இணைப்புகள் அணைக்கப்பட்டுள்ளன. அவருடன் இருந்தவர்களின் செல்பேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன.
கரோல் பாக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர், விவசாயிகளோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சிங்கு எல்லைப் பகுதிக்குச் செல்ல புறப்பட்டபோது, டெல்லி போலீஸ் தங்களைத் தடுப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
"தொலைக்காட்சிகள் படமெடுப்பதைக்கூட போலீசார் விடவில்லை. தள்ளிவிடுகிறார்கள்" என்று கூறினார் அய்யாக்கண்ணு.
முன்னதாக, காவல்துறையினர் வாகனத்தில் சென்றபோது பிபிசி தமிழிடம் செல்பேசி காணொளி வாயிலாக பேசிய அய்யாக்கண்ணு, "'டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வந்தோம். இங்கும் பல தடங்கல்களை காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர். என்ன ஆனாலும், டெல்லி போராட்டத்தில் என்ன விலையை கொடுத்தாவது நாங்கள் பங்கேற்போம்," என்று அய்யாக்கண்ணு கூறினார்.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: