You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவிஷீல்ட் பரிசோதனையால் பாதிப்பு என்ற நபரிடம் 100 கோடி நஷ்ட ஈடு கோர சீரம் இன்ஸ்டிடியூட் முடிவு
இன்று (30 நவம்பர் 2020, திங்கட்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கொரோனா தடுப்பு மருந்தால் எந்த பின் விளைவுகளும் எற்படவில்லை என்றும், வழக்கு தொடுத்தவருக்கு எதிராக, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் சீரம் இன்ஸ்டிடியூட் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட், ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 01 2020 அன்று, சென்னையில் ஒரு நபருக்கு சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்யும் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.
அவருக்கு கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் போது கொடுக்கப்பட்ட பங்கேற்பாளர் விவரத்தில் (Participant Information Sheet) கோவிஷீல்ட் முற்றிலும் பாதுகாப்பானது எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே தான், தன் கட்சிக்காரர் தடுப்பு மருந்து சோதனைக்கு ஒப்புக் கொண்டார் என, சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு கடந்த 21 நவம்பர் 2020 அன்று அனுப்பி இருக்கும் சட்ட ரீதியிலான நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருப்பாதக் கூறுகிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இந்த நோட்டீஸ், சீரம் இன்ஸ்டிடியூட்டைத் தொடர்ந்து, ஐசிஎம்ஆர், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர், அஸ்ட்ராஜெனரா, ஆக்ஸ்டோர்ட் பல்கலைக்கழகம் என பலருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
கொரோனா மருந்து எடுத்துக் கொண்ட முதல் 10 நாட்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை. அதன் பின் கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அதன் பின் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவரின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. அவரால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை, பேச முடியவில்லை, என்ன செய்வது என்றே தெரியாத அளவுக்கு தன் சுய நினைவை அவ்வப் போது இழக்கிறார் (Disoriented) என நோட்டீஸில் கூறப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இத்தனை பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் குறிப்பிட்டு இருந்தால், தன் கட்சிக்காரர் தடுப்பு மருந்து சோதனைக்கு சம்மதித்து இருக்கமாட்டார் என நோட்டீஸ் குறிப்பிடுகிறது.
அதோடு, தன் கட்சிக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், இதுவரை அனுபவித்த சிரமங்கள் மற்றும் இனி எதிர்காலத்தில் அனுபவிக்க இருக்கும் சிரமங்களை எல்லாம் கருத்தில் கொண்டு, தன் கட்சிக்காரருக்கு, குறைந்தபட்ச நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாயை, இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனஅதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் விதத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் ஒரு ஸ்டேட்மெண்டை வெளியிட்டு இருக்கிறது. சட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருப்பது மலிவானது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது, கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு முன் வந்தவர், தன்னுடைய மருத்துவ பிரச்னைகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் மீது பழி கூறுகிறார். தடுப்பு மருந்து சோதனையில் பங்கெடுத்தவர் எதிர்கொள்ளும் மருத்துவ பிரச்னைகளுக்கும், கொரோனா தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனி மருத்துவக் குழு மூலம் விளக்கமளிக்கப்பட்டது. அதற்குப் பிறகும், அவர் பொது வெளியில் நிறுவனத்தின் பெயரை பாதிக்கும் வகையில் குற்றம்சாட்டுகிறார் என சீரம் இன்ஸ்டிடியூட்டின் அறிக்கை கூறுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.
மேலும், சீரம் இன்ஸ்டிடியூட், நோட்டீஸ் அனுப்பியவருக்கு எதிராக, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விவரிக்கிறது அச்செய்தி.
விவசாயிகள் போராட்டத்தை அரசியல் என கூறவில்லை: அமித் ஷா விளக்கம்
விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் என ஒருபோதும் கூறவில்லை, கூறவும் மாட்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக தினமணியின் செய்தி தெரிவிக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா "புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அடைப்பட்ட அமைப்பு முறையிலிருந்து விவசாயிகள் வெளியேறவுள்ளனர். அரசியல் ரீதியாக இதை எதிர்க்க நினைப்பவர்கள் எதிர்க்கட்டும். நான் விவசாயிகள் போராட்டத்தை அரசியல் என்று ஒருபோதும் கூறவில்லை, கூறவும் மாட்டேன்" என்றார்.
முன்னதாக, போராட்டத்தை டெல்லி புராரி மைதானத்துக்கு மாற்றியவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா, விவசாயிகளிடம் தெரிவித்தார். ஆனால், அமித் ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர் என குறிப்பிட்டு இருக்கிறது தினமணி.
பிரம்மபுத்திரா நதியின் கீழ்நிலையில் முதல் அணையைக் கட்ட சீனா திட்டம்
பவர் சீனா என்கிற சீன அரசு நிறுவனம், திபெத் நாட்டுடன், கடந்த மாதம் ஒரு முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, பிரம்மபுத்திரா நதியின் (திபெத்தில் யார்லங் சாங்போ நதி) கீழ்நிலையில் நீர் மின் நிலையத்தை அமைக்கப் போகிறார்கள். இது 2021 - 2025 ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என இந்து வலைதள செய்தி குறிப்பிடுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தான் சாங்போ நதியில், சாங்மூ எனும் இடத்தில் தன் முதல் நீர் சக்தி திட்டத்தைச் செயல்படுத்தியது சீனா. டாகு, ஜெக்ஸு, ஜியாசா போன்ற இடங்களில் இன்னும் மூன்று நீர்சக்தி நிலையங்களை கட்டமைத்துக் கொண்டு இருக்கிறது சீனா. இவை எல்லாமே நதியின் மேல் மற்றும் நடு நிலைகளில் தான் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தான் சாங்போ நதியின் கீழ்நிலையில் அமைய இருக்கும் முதல் நீர்சக்தி நிலையம் என்கிறது அந்த செய்தி.
இந்த திட்டம் க்ரேட் பெண்ட் என்றழைக்கப்படும் பகுதியில் சீனாவின் நீர் மின் நிலையம் அமையலாம் என பவர் சீனாவின் தலைவர் யான் சியாங் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நீர்சக்தி திட்டம் மூலம் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த கிரேட் பெண்ட் எனப்படும் பகுதி, அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைக் கடந்த உடனேயே வருகிறது. இந்த பகுதியில் நீர் மின் நிலையத்தை அமைப்பது, புதிய பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்கிறது இந்து வலைதள செய்தி.
சாங்போ நதியின் (இந்தியாவில் பிரம்மபுத்திரா நதி) மேல் மற்றும் நடுநிலையில் சீனா நான்கு அணைகளைக் கட்டி வருவது குறித்து, இந்தியா, சீனாவிடம் தன் கவலையைத் தெரிவித்து இருக்கிறது.
சீனாவின் புதிய அணைக்கட்டுகளால், பிரம்மபுத்திராவுக்கு வரும் நீர் வரத்து குறையாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் இந்திய தரப்பு அதிகாரிகள். மேலும் பிரம்மபுத்திரா நதியின் நீர் வரத்து முழுமையாக மேல் நிலை நீரை நம்பி இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பிரம்ம புத்திரா நதியின் 35 சதவீத நீர் பிடிப்பு பகுதிகள் இந்தியாவில் உள்ளது என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள் :
- டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்
- மாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும்? ஓடிடி-யா? தியேட்டரா?
- மூன்று பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள்: கடுமையான சட்டம் நீதியைப் பெற்றுத் தருமா?
- கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து: 'நடுத்தர பயணிகள், தொழில்களை பாதிக்கும்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்