நிவர் புயலால் புதுச்சேரியில் எவ்வளவு சேதம் தெரியுமா? - முதல்வர் நாராயணசாமி என்ன சொல்கிறார்?

நிவர்
பிரசுரிக்கப்பட்டது

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

நிவர் புயலால் புதுச்சேரியில் விளை நிலங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுவரை செய்த மதிப்பீட்டின்படி சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு சேத மதிப்பீடு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிவர் புயலானது புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, குடியிருப்புகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிவர்
படக்குறிப்பு, அரசுத்துறை உயரதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டம்

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ''நிவர் புயலின் போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தது, பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த புயலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 3,397 பேர் வெளியேற்றப்பட்டு, 2,652 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய 95 சதவீதம் மழைநீர் கடலுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மழைநீரும் இன்று வடிந்து விடும். 90 சதவீத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. மிதமுள்ள பகுதிகளில் உடனடியாக வழங்கப்படும்," என்றார்‌ அவர்.

"முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 55 ஹெக்டேர் வாழைத் தோட்டங்களிலிருந்து வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உத்தேசமாக ரூபாய் 400 கோடி அளவுக்குச் சேதம் இருக்கலாம் எனக் கணக்கெடுத்துள்ளோம். இருப்பினும் முழு சேதத்தையும் அனைத்துத் துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 50 கோடி வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுத உள்ளேன். முழு கணக்கெடுப்பு முடிந்ததும், மத்திய அரசிடம் மொத்த இழப்பீடு கேட்கப்படும். முழு கணக்கெடுப்பு முடிந்ததும், மக்களுக்கு நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும்," என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பும் மத்திய அரசு - மத்திய உள்துறை, சிஆர்பிஎஃப் டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ் எம்.பி

பட மூலாதாரம், SU. VENKATESAN

தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், அலுவல் மொழித்துறை இணைச் செயலர், சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்றதத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், அலுவல் மொழித்துறை இணைச் செயலர், சிஆர்பிஎப் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மத்திய ரிசர்வ் படையில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 5 வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களில் இரு இடங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலனுக்காக இரு பகுதிக்கும் சேர்ந்து குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம் மற்றும் சி.ஆர்.பி.எப் பொது இயக்குனருக்கு அக்டோபர் 9-ல் கடிதம் அனுப்பினேன். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நவம்பர் 9-ல் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால் அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும் என்று வெங்கடேசன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை இணை அமைச்சருக்கு நவம்பர் 19-ல் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. இந்தியில் அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறவோ, ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கும் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும், 1963ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.

எனவே, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அனுப்பிய இந்தி கடிதத்தில் ஆங்கில வடிவத்தை உடனே வழங்கவும், விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வெங்கடேசன் கூறியிருந்தார்.

உதயநிதி எல்லாம் எங்களுக்கு பொருட்டே இல்லை - எல் முருகன்

முருகன் பாஜக

பட மூலாதாரம், BJP TN

படக்குறிப்பு, பாஜகவில் சமீபத்தில் இணைந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்

உதயநிதி ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லி வந்துள்ள எல். முருகன் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோரை பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக அறிவித்திருந்த வேல் யாத்திரை நிவர் புயல் தாக்கம் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த வேல் யாத்திரை வரும் டிசம்பர் 3 அல்லது 4ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் வேல் யாத்திரையை நடத்தி வருவதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நிவர் புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு நேரலாம் என அஞ்சிய வேளையில், மாநிலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று முருகன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று இரு கட்சி மேலிட தலைவர்களும் அறிவித்துள்ளதால் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என கேட்டதற்கு, அது குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்று முருகன் பதிலளித்தார்.

பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரைக்கு நிகராக திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ள பிரசார நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் எல்லாம் பாஜகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது. வேல் யாத்திரையால் பாஜகவுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அக்கட்சியினர் பிரசாரம் தொடங்கியிருக்கிறார்கள் என்று முருகன் தெரிவித்தார்.

வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போடுவதா? வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் கேள்வி

வங்கி கடன்

பட மூலாதாரம், Getty Images

எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றன என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பான மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், "வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என கருத்து தெரிவித்தனர்.

பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாய மற்றது என்று கூறிய நீதிபதிகள், எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றன" என்றும் கேள்வி எழுப்பினர்.

தனியார் நிறுவனங்கள், குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிப்பது பற்றி குறிப்பிட்ட நீதிபதிகள், இப்படி செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்காமலேயே இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

1ஸ000 கோடிகள் கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள், பணம் வசூலிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவு காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் கூறும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வங்கி மேலாளர் காணொளி காட்சி மூலமாக நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

என்ன வழக்கு?

இது தொடர்பாக பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஃபெடரல் பாங்க்) நீண்ட கால கடனாக 50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக 15 லட்சம் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டது. இதில் வீட்டுக் கடனுக்காக 18 லட்சமும் நீண்ட கால கடன் தொகையில் 25 லட்சமும் செலுத்தப்பட்டுள்ளது தொழில் நிலைமை சரியில்லாததால் வங்கியில் சரிவர பணம் கட்ட முடியாத காரணத்தினால் எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை தனியார் வங்கி மேற்கொண்டது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விவசாய நிலத்தை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ 75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 75 லட்சத்திற்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள தனியார் வங்கி மேலாளர் இடம் கொடுப்பதற்காக அக்டோபர் 7ஆம் தேதி வங்கிக்கு சென்றபோது வங்கி மேலாளர் அதனை வாங்க மறுத்து எங்கள் மீது வீசி எறிந்தார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வரும் வேளையில் விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க கோரி தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ஜெயராஜ் கேட்டுக் கொண்டிருந்தார்.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை தொடரும்

சென்னை வரதராஜபுரத்தில் மழை நீர் தேங்கியிருக்கும் காட்சி.

பட மூலாதாரம், Jayakumar/BBC

படக்குறிப்பு, சென்னை வரதராஜபுரத்தில் மழை நீர் தேங்கியிருக்கும் காட்சி.

நிவர் புயலை அடுத்து, தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது என்றும் இதன் காரணமாக, அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்ன மாறுதலை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரான பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

''வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவருகிறது. இது தமிழக கடற்கரையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நிவர் புயல் தற்போது வலுவிழந்துவிட்டது என்றும் கரையை கடந்த அந்த புயல் தற்போது தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது என்றும் கூறினார்.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை பகுதியில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை காலத்தில், தமிழகத்தின் வடமேற்கு மற்றும் தென் பகுதியில் மழை பொழிவு இயல்பாக இருந்ததாகவும், மத்திய தமிழகத்தில் மழை பொழிவு குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :