You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி திட்டவட்டம் - "ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவின் அவசியம்"
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது விவாதிக்கும் விஷயம் அல்ல, அது இந்தியாவின் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருக்கிறார்.
இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மாநில சட்டமன்றங்களின் சபாநாயகர்கள், பேரவை செயலாளர்கள், மக்களவை, மாநிலங்களவை செக்ரட்டரி ஜெனரல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட 80ஆவது அகில இந்திய வருடாந்திர மாநாடு குஜராத் மாநிலம் கேவடியா என்ற இடத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இந்தியாவில் எங்காவது எப்போதாவது ஒரு இடத்தில் தேர்தல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அவை நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.
இந்த தருணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாம் விவாதித்து வருவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் நடக்கிறது. இது விவாதம் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது என்று மோதி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து ஆழமாக சிந்திக்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையில் மக்களவை தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஒரே வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியல் நடைமுறையில் இருந்தால், தேவையற்ற மனித ஆற்றல் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று மோதி யோசனை வழங்கினார்.
இதுபோன்ற விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படும்போது சட்டமியற்றும் அமைப்புகள், அரசு அதிகாரிகள், நீதித்துறையில் இருப்பவர்கள் தேச நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நரேந்திர மோதி வலியுறுத்தினார்.
மக்களையும் தேசத்துக்கு முன்னுரிமை தரும் நடவடிக்கைகளையும் மீறி, "அரசியல்" ஆதிக்கம் செலுத்துமானால், அதற்கான எதிர்மறை விளைவுகளை நாடு சந்திக்க நேரிடலாம் என்று அவர் எச்சரித்தார்.
இதற்கு உதாரணமாக சர்தார் சரோவர் அணை பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் வெகு சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதை மோதி நினைவுகூர்ந்தார். அத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தடைபடக்கூடாது என்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முந்தைய அரசுகள் செயல்பட்டிருக்குமானால், அது நடந்திருக்காது என்றும் மோதி குறிப்பிட்டார்.
21ஆம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தேச நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய மோதி, அரசியலமைப்பின் அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- மெரினாவுக்கு வெளிநாட்டு கப்பல்களை வரவழைத்த புயல் - 50 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
- விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி நுழைவு போராட்டம், பதற்றம்
- மாரடோனாவும் கால்பந்தும்: சாகச வீரரின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை
- பூட்டானின் சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு சீனா ஏன் உரிமை கோருகிறது?
- உலகப் பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை வீழ்த்தி 2ம் இடம் பிடித்த ஈலான் மஸ்க்
- கத்துவா பாலியல் வல்லுறவு: சிறுமி குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :