'கோஸ்ட் சிம்': உங்கள் பெயரில் மோசடி சிம் உருவாக்க முடியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

    • எழுதியவர், ஷேக் அன்சாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இணையவழி மோசடிக்கு காரணமானதாக கூறப்படும் 'கோஸ்ட் சிம்' (ghost SIM) வலையமைப்புகளைக் குறிவைத்து 'ஆபரேஷன் ஆக்டோபஸ் 3.0' என்ற நடவடிக்கையை ஹைதராபாத் நகர காவல்துறையின் இணையவழி குற்றப் பிரிவு போலீசார் கடந்த மாதம் இறுதியில் மேற்கொண்டனர்.

சைபர் குற்றங்களில் ஈடுபடும் இந்த 'கோஸ்ட் சிம்' வலையமைப்பைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அச்சமயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், 75 வழக்குகளில் தொடர்புடைய 1,194 கோஸ்ட் சிம் கார்டுகள் கண்டறியப்பட்டு, 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் கோஸ்ட் சிம் கார்டுகளைப் பயன்படுத்தியவர்கள், 20 பேர் விற்பனை முகவர்கள் அல்லது டெலிகாம் விளம்பரதாரர்கள், இருவர் சிம் கார்டு விநியோகஸ்தர்கள் என்று ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விவரித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 554 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'கோஸ்ட் சிம்' என்றால் என்ன? குற்றவாளிகள் இதனை எப்படிப் பெறுகிறார்கள்?

'கோஸ்ட் சிம்' என்றால் என்ன?

"ஒருவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை, மற்றொருவர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தினால் அது 'கோஸ்ட் சிம்' என அழைக்கப்படுகிறது" என்று ஹைதராபாத் சைபர் க்ரைம் டிசிபி அரவிந்த் பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.

அத்துடன் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

சிம் கார்டுகளை மோசடியாக எப்படிப் பெறுகிறார்கள்?

'ஆபரேஷன் ஆக்டோபஸ் 3.0' நடவடிக்கை குறித்த புலனாய்வு விவரங்களை ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் பகிர்ந்து கொண்டார்.

"வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டு வாங்க வரும்போதோ அல்லது மொபைல் போர்ட்டபிலிட்டி, கேஒய்சி (KYC) புதுப்பிப்புக்காக வரும்போதோ, அவர்களுக்குத் தெரியாமலேயே கூடுதல் சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்கிறார்கள்."

"வாடிக்கையாளர்களிடம் பயோமெட்ரிக் பதிவு பெறும் போது, நெட்வொர்க் சரியாக இல்லை, சர்வர் டவுன் ஆகிவிட்டது, கைரேகை சரியாக விழவில்லை என்று கூறி நம்பவைத்து, இரண்டு அல்லது மூன்று முறை பயோமெட்ரிக் பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்."

"தொலைதூர கிராமங்களிலும், பழங்குடியினப் பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை அமைத்து, ஏழை எளிய மக்களையும், படிக்காதவர்களையும் இலக்காகக் கொண்டு, அவர்களின் ஆதார் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் பெற்று, அவர்களின் பெயரில் இரண்டு சிம் கார்டுகளை வழங்குகிறார்கள்."

"இலவச இணைய சேவை வழங்குவதாக ஆசை காட்டியும், அப்பாவி மக்களின் பெயர்களில் சிம் கார்டுகளை உருவாக்கி வருவது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது."

குற்றவாளிகளின் கைகளில் 'கோஸ்ட் சிம்' கிடைத்தால் என்ன செய்வார்கள்?

"சட்டவிரோதமாக ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டுகளை, சைபர் குற்றவாளிகள் நேரடியாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், சாதாரண சிம் கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்பட்ட உடனேயே, அவை 'இ-சிம்'களாக மாற்றப்படுகின்றன."

"வெளிநாடுகளில் இருக்கும் பெரிய அளவிலான இணையக் குற்ற கும்பல்களுக்கு இந்த விவரங்கள் நொடிப் பொழுதில் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம், அந்தந்த நாடுகளில் இருக்கும் கும்பல்கள் எந்தவொரு நேரடி சிம் கார்டும் இல்லாமலேயே, நமது நாட்டின் மொபைல் எண்களைத் தங்களின் போன்களில் தடையின்றிப் பயன்படுத்தி வருகின்றன." என்று காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

இ-சிம்களைப் பயன்படுத்தி இழைக்கப்படும் குற்றங்கள்

"இந்த இந்திய எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப், டெலிகிராம் கணக்குகளைத் தொடங்குவதுடன், மேட்ரிமோனியல் தளங்கள் மற்றும் பிரபல டேட்டிங் செயலிகளில் போலி சுயவிவரங்களை உருவாக்கி, அப்பாவி மக்களை இணையக் குற்றத்துக்கு பலியாக்குகின்றனர். பின்னர் அவர்களிடமிருந்து பணத்தைச் சூறையாடுகின்றனர்."

"சில சமயங்களில், ஆபாச வீடியோ கால்கள் செய்து மிரட்டும் 'செக்ஸ்டார்ஷன்' கும்பல்களும், சிபிஐ அல்லது காவல்துறை அதிகாரி என்று கூறி பயமுறுத்தும் 'டிஜிட்டல் கைது' கும்பல்களும் கூட 'கோஸ்ட் சிம்' எண்களையே பயன்படுத்துகின்றன. தொலைபேசி எண் நமது நாட்டினுடையதைப் போன்றே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் நம்பி ஏமாந்துவிடுகின்றனர்."

இவை அனைத்தும் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு நடக்கின்றன. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டும் வகையில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்யும் செயல்முறை முடிந்தவுடன், அந்த சிம் கார்டுகளை வழங்கிய உள்ளூர் முகவர்கள் ஒரே இரவில் தங்களது கடைகளை மூடிவிட்டு, எந்தத் தடயமும் இல்லாமல் தலைமறைவாகி விடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இணையக் குற்றத்துக்குப் பலியானால் என்ன செய்வது?

"ஒருவேளை நீங்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், 'கோல்டன் ஹவர்' எனப்படும் முதல் ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே 1930 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்; அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்."

"பாதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் புகார் அளித்துவிட்டால், இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பொதுமக்கள் அனைவரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அறிவுறுத்துகிறார்.

இந்த 'கோஸ்ட் சிம்' நெட்வொர்க் விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஏர்டெல், ஜியோ , வோடஃபோன் ஐடியா போன்ற டெலிகாம் சேவை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்யவும், 'கே.ஒய்.சி' சரிபார்ப்பு நடைமுறையை இன்னும் கடுமையாக்கவும் கோரி, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை (ட்ராய்) ஆகிய நிறுவனங்களை அணுகத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இத்தகைய சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சைபர் க்ரைம் துணை காவல் ஆணையர் அரவிந்த் பாபு பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

"பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயரில் வேறு ஏதேனும் சிம் கார்டுகள் இருந்தால், அவற்றை உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

"புதிய சிம் கார்டு வாங்கும் போதோ அல்லது ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாறும் போதோ கவனமாக இருக்க வேண்டும். இந்தச் செயல்முறையின்போது, ​​அங்கீகரிக்கப்படாத கூடுதல் சிம் கார்டு ஒன்று உருவாக்கப்படுவதற்கான ஆபத்து உள்ளது."

"எனவே, உங்கள் பயோமெட்ரிக் தரவுகளை (கைரேகை போன்றவை) இரண்டாவது முறையாக வழங்குமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், அதாவது, ஏற்கெனவே ஒருமுறை உங்கள் கைரேகையைப் பதிவு செய்த பிறகு, மீண்டும் அதை வழங்குமாறு அவர்கள் கோரினால் கவனமாக கையாள வேண்டும். அது எதற்காகத் தேவைப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். இல்லையெனில், உங்கள் சிம் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகும்" என்று அவர் கூறினார்.

மேலும் அவர், "இலவச சலுகைகள் என்றோ, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்றோ அல்லது லாட்டரி விழுந்திருக்கிறது என்றோ கூறி யாராவது தொலைபேசியில் உங்களை அழைத்துச் சொன்னாலோ அல்லது குறுஞ்செய்தி வந்தாலோ அதை நம்பாதீர்கள்."

"சமூக ஊடகங்களிலும் இது போன்ற பல விளம்பரங்கள் வருகின்றன, அவை குறித்தும் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யப்பட்டிருப்பாதக் கூறி யாரேனும் உங்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்தால் பதற்றமடைய வேண்டாம். அதற்கு மாறாக, உடனடியாக உங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சைபர் குற்றங்களுக்குப் பலியாவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு