You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மரணம் - கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சையில் இருந்தவர்
(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் திங்கட்கிழமை (நவம்பர் 23) காலமானார். அவருக்கு வயது 84.
காங்கிரஸ் கட்சியின் பழுத்த அனுபவம் வாய்ந்த தலைவராக அறியப்பட்ட அவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், நோய்க்குப் பிந்தைய சிகிச்சையை குவாஹட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உயிர் திங்கட்கிழமை மாலை 5.34 மணியளவில் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குவாஹட்டியில் உள்ள ஷங்கர்தேவ் கலாக்ஷேத்ரா அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் செவ்வாய்க்கிழமை வைக்கப்படவுள்ளது. அதன் பிறகு முழு அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.
மக்கள் அபிமானம் பெற்ற தலைவராகவும் தேர்ந்த நிர்வாகியாகவும் விளங்கியவர் தருண் கோகோய் என்று அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
அசாம் மக்களின் ஒற்றுமைக்காக கடைசி வரை உண்மையாக உழைத்து தனது வாழ்வை அர்ப்பணித்தவர் தருண் கோகோய் என்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தருண் கோகோய் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயோதிகம் காரணமாக அவருக்கு பல்வேறு உடல் பிரச்னைகள் இருந்தன. இதனால், வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை முடிந்த பிறகு, தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த இரு தினங்களாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் திங்கட்கிழமை காலையில் அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து அசாம் முதல்வர் சர்பானந்த சேனோவால் மருத்துவமனைக்கு சென்று தருண் கோகோயை பார்வையிட்டார். அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமந்தா பிஸ்வாஸ் சர்மாவும் மருத்துவமனையிலேயே இருந்து நிலைமையை கவனித்து வந்தார். இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.
1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தின் தேயிலை தோட்டத்தில் வாழ்ந்து வந்த அசாமிய இனவாத குழுவான டாய் அஹோமைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் தருண் கோகோய். அவரது தந்தை தொழில்முறை மருத்துவர். அவரதுதாய் அசாமின் புகழ்பெற்ற கவிஞர் கணேஷ் கோகோயின் சகோதரி.
அங்குள்ள ஜகநாத் பரூவா கல்லூரியில் இளங்கலையும் குவாஹட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் முடித்தார் கோகோய். 1972ஆம் ஆண்டில் டோலி கோகோய் என்பவரை திருமணம் செய்தவருக்கு சந்திரிமா என்ற மகளும், கெளரவ் என்ற மகனும் உள்ளனர். இதில் கெளரவ் மக்களவை காங்கிரஸ் எம்.பி ஆக இருக்கிறார்.
அசாம் மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவர் தருண் கோகாய்.
கொரோனா தடுப்பூசி: ஏழை நாடுகளின் நிலை குறித்து கவலைப்படும் ஜெர்மனி அரசு
கொரோனா வைரஸ்: ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது குறித்து தன் கவலையை வெளிப்படுத்திய ஜெர்மனி
ஜெர்மனியின் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கல், உலகின் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து பெறுவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக, தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏங்கலா மெர்க்கல் பங்கெடுத்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்கள், கொரோனா தடுப்பு மருந்தின் நியாயமான விநியோகத்துக்கு உறுதி அளித்து இருக்கின்றனர்.
ஆனால், இந்த விஷயத்தில், செயல்பாடுகள் மெதுவாக நகர்வதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல். அதோடு, உலக கொரோனா தடுப்பு மருந்து கூட்டமைப்பான கவியிடம் இது குறித்து பேச இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல்.
உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது தொடர்பாக, எப்போது பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என கவியிடம் பேச இருக்கிறோம். இதுவரை அது தொடர்பாக எதுவும் செய்யப்படவில்லை என எனக்கு கவலையாக இருக்கிறது எனக் கூறி இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல்.
இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை செளதி அரேபியா நடத்தியது. கொரோனா பெரும் தொற்றால், இந்த மாநாடு காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில், ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்கிற விவரங்களும் விவாதிக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் சோதனை, சிகிச்சை மற்றும் நியாயமான தடுப்பு மருந்து விநியோகம் போன்ற பணிகளுக்கு உடனடியாகத் தேவையாக இருக்கும் பணத்தை வழங்கவும் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
ஏழை நாடுகள், மலிவு விலையிலும், சமமாகவும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற, எந்த ஒரு வழியையும் விட்டு வைக்கமாட்டோம் என, ஜி20 மாநாடு முடியும் தருவாயில், ஜி20 குழு கூறி இருக்கிறது.
ஏதாவது ஒரு நாட்டை நாம் பின்தங்க விட்டுவிட்டால், நாம் அனைவருமே பின்தங்கிவிடுவோம் என்கிற ஒருமித்த கருத்து, ஜி 20 நாடுகளுக்கு மத்தியில் இருக்கிறது என, சௌதியின் நிதி அமைச்சர் மொஹம்மது அல் ஜடான், ஒரு செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதிலும், தொழில்துறைக் கூட்டாண்மையை உருவாக்குவதிலும், அறிவுசார் சொத்துக்களை பகிர்ந்து கொள்வதிலும், இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவெல் மக்ரூன் ஜி 20 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துச் செல்லும், கொரோனா சோதனைகள், சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்துகளை உறுதிப்படுத்தும் ACT என்கிற திட்டத்தில், 4.5 பில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்ய நிறைய பணம் வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்.
சாத்தான்குளம் வழக்கு: 3 காவலர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளத்தில் செல்பேசி ரீசார்ஜ்கடை உரிமையாளர் ஜெயராஜும் அவரது மகன் பெனிக்ஸும் நீதிமன்ற காவலில் சிறையில் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
இதில், சாத்தான்குளம் காவலர் முருகன் வெயில் முத்து தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கின்றோம். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து முடித்துவிட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை ,சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும. கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தானர்.
இந்த மனுவை திங்கட்கிழமை நீதிபதி இளந்திரையன் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, "மூத்த வழக்கறிஞர்கள் வர உள்ளதால் அதன் மீதான வாதத்தை தொடங்க அவகாசம் தேவை" என மனு தாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கபட்டது, இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: தமிழக அரசிதழில் வெளியீடு
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சமீபத்தில் தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அடுத்து, தற்போது அந்த சட்டம் தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்யும் சட்டத்தின்கீழ், ரம்மி சூதாட்டத்தை நடத்தினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபடும் நபருக்கு ஆறு மாதம் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைனில் ரம்மி என்பது கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் விளையாடும் பழக்கத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. இந்த விளையாட்டு இணையத்தில் நடைபெறுவதால், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதில் ஈடுபட்டிருந்தனர்.
சிலர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துவிட்டதாக புகார் கொடுத்திருந்தனர். ஒரு சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.
தொடர் புகார்கள் வரவே, இணையத்தில் ரம்மி விளையாட்டுக்கு தடை கொண்டுவரவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதோடு, இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவாயின.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில், நீதிபதி என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, திரை பிரபலங்கள் ரம்மி விளம்பரங்களில் நடித்து அதனை ஊக்குவிக்கிறார்கள் என்றும், இந்த விளையாட்டால் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும் திரை பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதோடு இந்த விளையாட்டுக்கு தடை தேவை என்றும் குறிப்பிட்டனர்.
எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆன்லைன் ரம்மிக்கு தடை வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த வாரம், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை பிறப்பிக்க அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதற்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஒப்புதல் அளித்ததை அடுத்து, தற்போது அந்த சட்டம் தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
'காங்கிரஸ் 5 ஸ்டார் கலாசாரத்தில் மூழ்கி இருக்கிறது'
`காங்கிரஸ் 5 ஸ்டார் கலாசாரத்தில் மூழ்கி இருக்கிறது, பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியவில்லை` - குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் அமைப்பை, வட்டம், மாவட்டம் முதல் மாநிலங்கள் வரை தேர்தல் நடத்தி அவசரமாக மாற்றியமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தங்களின் ஐந்து நட்சத்திர கலாசாரத்தை, குறைந்தபட்சம் தேர்தலின் போதாவது கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.
வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு மத்தியில் ஒரு தொடர்பு இல்லை. கட்சி, மக்களோடு தொடர்பில் இருப்பது, தேர்தல் காலத்தில் மட்டுமின்றி தொடர்ந்து நடக்க வேண்டிய செயல்பாடு எனத் தெரிவித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வேண்டும் எனக் கடிதம் எழுதிய 23 நபர்களில், குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் கலவரக்காரர்கள் அல்ல, சீர்திருத்தவாதிகள். நாங்கள் கட்சித் தலைமைக்கு எதிரானவர்கள் அல்ல. சொல்லப் போனால், நாங்கள் கட்சியின் தலைமையை வலுப்படுத்தத் தான் இந்த சீர்திருத்தங்களைச் சொல்கிறோம் எனச் சொன்னது நினைவுகூரத்தக்கது.
கலாசார விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு
வரும் நவம்பர் 25, 2020 முதல், தமிழகத்தில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 200 பேருக்கு மிகாமல் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளது தமிழக அரசு.
அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தடை தொடரும் என, தெளிவுபடுத்தி இருக்கிறது தமிழக அரசு. இந்த தடைக்கு, கொரோனா வைரஸ் பரவுவதைக் காரணமாகச் சொல்கிறது தமிழக அரசு.
கலாசார நிகழ்ச்சிகள், மூடிய அரங்குகளில் நடக்கிறது என்றால், ஒட்டுமொத்த கொள்ளளவில் 50 சதவீதத்தினர் உடன், 200 நபர்கள் மிகாமல் நடத்த அனுமதி கொடுத்து இருக்கிறது தமிழ்நாடு அரசு.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது, தெர்மல் ஸ்கேனிங், சானிட்டைசர் பயன்படுத்துவது போன்ற நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது தமிழக அரசு.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: "ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து 70% பாதுகாப்பானது" - எந்த அளவுக்கு நம்பலாம்?
- நடிகை ஊர்வசி: 'ஸ்கிரிப்ட் கொடுக்காமல் நடிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி" - ஏன் தெரியுமா?
- அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
- நிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்
- மூக்கின் உதவியோடு காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பது எப்படி?
- சென்னையில் பாஜக தொண்டர்களிடம் தமிழக அரசியல் குறித்து என்ன பேசினார் அமித் ஷா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: