டெல்லியில் மீண்டும் பொது முடக்கமா? என்ன சொல்கிறார் மாநில சுகாதார அமைச்சர்?

அமித் ஷா

பட மூலாதாரம், PIB MHA

பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் தீபாவளிக்கு பிறகு அசாதாரண முறையில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதாக கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை டெல்லி அரசும் இந்திய அரசும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் தலைநகரில் வைரஸ் பரவல் தீவிரமானபோதும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் திங்கட்கிழமை முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் அவரும் டெல்லி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை முன்னெடுப்பது குறித்து கேஜ்ரிவாலுடன் சத்யேந்தர் ஜெயினும் டெல்லி அரசு அதிகாரிகளும் விவாதித்தனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யேந்தர் ஜெயின், "தற்போதுள்ள நிலையில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என நாங்கள் கருதவில்லை. முடிந்தவரை முக கவசம் அணிவதுதான் சாத்தியம் மிக்க பலனைக் கொடுக்கும். அதற்கான விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

டெல்லியில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உச்சத்தை கடந்து விட்டதாகவும் சத்யேந்ததர் ஜெயின் தெரிவித்தார்.

தலைநகரில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் புதிதாக 3,215 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, 4.85 லட்சத்தை கடந்திருக்கிறது.

12 அம்ச நடவடிக்கை

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதில் தீர்மானிக்கப்பட்ட 12 அம்ச நடவடிக்கையை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • டெல்லி தெளலா கானில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மையத்தில் 250-300 கூடுதல் படுக்கை வசதிகள் நிறுவப்படவுள்ளன. இங்கு ஏற்கெனவே 1000 படுக்கை வசதிகள் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளன.
  • டெல்லி சத்தர்பூரில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை முகாமில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்ட படுக்கை வசதிகள் வலுப்படுத்தப்படும்.
  • பிஏபிஏபி எனப்படும் நுரையீரலுக்குள் காற்றுப்பாதையை சீராக்க பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர் போன்ற சாதனங்களை அடுத்த 48 மணி நேரத்தில் டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • டெல்லியில் போதிய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் வெளி மாநிலங்களில் பணியாற்றும் துணை ராணுவப்படை மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வான் வழியாக அழைத்து வரும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அமித் ஷா

பட மூலாதாரம், PIB MHA

5, டெல்லியில் உள்ள கோவிட்-19 மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், நோயாளிகள் எண்ணிக்கை தொடர்பான நிலவர அறிக்கையை நேரலையில் கண்காணிக்கவும், அந்த மருத்துவமனைகளை மேற்பார்வையிட பல்நோக்கு மருத்துவ கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

6. டெல்லியில் மிதமான வைரஸ் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை சேர்ப்பதற்காக சில முனிசிபல் அரசு மருத்துவமனைகள், கோவிட்-19 மருத்துவமனைகளாக மாற்ற அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு போதிய படுக்கை வசதிகள், வென்டிலேட்டர் வசதிகள் போன்றவை உறுதிப்படுத்தப்படும்.

7. டெல்லியில் பிளாஸ்மா தெராப்பி செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு எத்தகைய மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதையே அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.

8. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் (கன்டெய்ன்மென்ட் பகுதி) வைரஸ் பரவியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோர், எளிதாக வைரஸ் தாக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் ஆகியோரின் உடல்நிலையை நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு, மருத்துவ உதவி தேவைப்படும்போது அவர்களை உடனடியாக அருகே உள்ள கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

10. எய்ம்ஸ், டெல்லி முனிசிபல் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மருத்துவர்கள் குழுக்கள் வீடு, வீடாகச் சென்று மக்களின் உடல்நிலை தொடர்பான ஆய்வை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

11. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக, முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு நகர காவல்துறை, டெல்லி அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

12. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலய பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் பரவல், கட்டுப்பாடு நடவடிக்கையை மத்திய அரசும், டெல்லி அரசும் இணைந்து மறுஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா

பட மூலாதாரம், PIB MHA

அமித் ஷாவுடன் கேஜ்ரிவால் ஆலோசனை

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாததை விட தீபாவளிக்குப் பிறகு மிகத் தீவிரமாகியிருக்கிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி முதலமைச்சர் அமித் ஷ சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து இருவர் முன்னிலையில் நடைபெற்ற மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தலைநகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது குறித்து கேஜ்ரிவால் விளக்கினார்.

தலைநகரில் உள்ள மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அடுத்து சேரவிருக்கும் நோயாளிகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்துக் கொள்வது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், டெல்லியில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப்பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் இல்லை என்று கேஜர்வால் தெரிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் கூடுதலாக 750 படுக்கை வசதிகள் செய்து தருவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருப்பதாக கேஜ்ரிவால் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: