தமிழ் மொழியில் இனி விமான அறிவிப்பு: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

பட மூலாதாரம், TWITTER
தமிழ்நாட்டு விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும், தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்களிலும் அறிவிப்புகள் இனி தமிழில் முதலாவதாக இடம் பெறும் என்று தமிழ்நாடு தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகளையும் சந்தித்த பிறகு பத்திரிகையாளரிடம் அவர் இதை அறிவித்ததாக ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விமான சேவை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், இதற்காக அமைச்சர் மற்றும், அதிகாரிகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருவிழாவுக்குள் தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இறங்கும் விமானங்களில் இத்தகைய அறிவிப்புகள் தமிழ் மொழியில் முதலாவதாக ஒலிக்கும் என்று தன் நம்பிக்கையையும் அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்திக்கு இணையாக செம்மொழியான தமிழுக்கும் தகுதிநிலை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய துறைச் செயலாளர்களை சந்தித்து வலியுறுத்தியதாகவும் இதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஹிந்தி சொல்லுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பொருள் எழுதி காட்சிப்படுத்தி வரும் நடைமுறையைப் போலவே மற்றொரு விளம்பர பலகையிலும் ஒவ்வொரு ஒரு தமிழ் சொல்லுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பொருள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்ததாகவும் இதை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என இத்துறையின் கூடுதல் செயலாளர் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார் பாண்டியராஜன்.
தமிழ் உட்பட பல்வேறு மாநில மொழிகளுக்கு பின்னடைவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பது தங்கள் பொறுப்பு என இத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குறிப்பிட்ட அமைச்சர், ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய மென்பொருளை உருவாக்கும் திட்டத்தினை வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் வெளிவந்த ஒரு நாளுக்குள் 16 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்ற யோசனை செயல்வடிவம் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் உடனே மொழி பெயர்க்கப்படுவதற்கும் மத்திய அரசு மேற்கொண்டுவரும் மென்பொருள் திட்டம் உதவும் என அவர் குறிப்பிட்டார்.
செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க சமீபத்தில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், 74,000 சதுர அடி பரப்பில் அந்நிறுவனத்திற்கான கட்டடம் விரைவில் தயாராகிவிடும் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்நிறுவனத்திற்கு 43 அதிகாரபூர்வ பணியாளர் பதவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- இறுதி ஆட்டத்தில் மும்பை - புயல்வேக பந்துவீச்சில் சாய்ந்த டெல்லி
- டிரம்ப் Vs பைடன்: 'அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்'
- தமிழகத்தில் யாத்திரை அரசியல் பா.ஜ.கவுக்கு பலன் தருமா?
- அமெரிக்க தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்
- வாட்ஸ் ஆப்பில் 7 நாட்களில் மெசேஜுகள் தானாக அழிந்துவிடும் ஆப்ஷன் அறிமுகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
























