You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IPL 2020: மிரட்டிய CSK: RCB, DC, KKR, SRH - பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம்?, இரண்டு மேட்ச்களின் விரிவான ரிவியூ
- எழுதியவர், பு. விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தொடர் சொதப்பல்களைச் சந்தித்தவர் தற்போது ஹாட்ரிக் அரை சதம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியிருக்கிறார். அவரது பெயர் ருதுராஜ் கெய்க்வாட் .
பெங்களூரு அணி எளிதில் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தடுத்த சென்னை அணி, கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பையும் சிக்கலாக்கியது, இந்நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை தவிடுபொடியாக்கியிருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கடைசி கட்ட ஓவர்களில் சென்னை பந்துவீச்சாளர்களை தீபக் ஹூடா வெளுத்துக்கட்டினாலும் பஞ்சாப் அணியால் மிகப்பெரிய ரன்களை குவிக்க இயலவில்லை. இன்றைய தினம் லுங்கி நிங்கிடியின் முதல் மூன்று ஓவர்களில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர், தாஹீர் கெயில் விக்கெட்டை வீழ்த்தினார். சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடினர். ஃபாப் டு பிளசிஸ் அபாரமாக விளையாடினார். ஆனால் அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் ராயுடு - ருதுராஜ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. சென்னை அணி தனது லீக் சுற்றில் ஏற்கனவே பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது, தற்போது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யம்
ஒரு சுவாரஸ்யாமான விஷயம் என்னவெனில் இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை சேசிங்கில் வெற்றிபெற்ற மூன்று அணிகள் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே. இந்த மூன்று அணிகளுமே தலா ஐந்து முறை சேஸிங்கில் வென்றுள்ளன.
பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றாக மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டிருந்தார். சென்னை அணியில் டுபிளசிஸ், தாஹீர் உள்ளிட்டோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்று பீலடிங்கை தேர்ந்தெடுத்த சென்னை அணி பஞ்சாப் நிர்ணயித்த 154 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து இந்த ஐபிஎல் சீசனில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடினமான தொடர்
போட்டி முடிந்தபிறகு பேசிய தோனி, இது எங்களுக்கு கடினமான தொடராக அமைந்தது, நாங்கள் முழு ஆற்றலையும் செலவிட்டு விளையாடினோம் என நான் நினைக்கவில்லை. 6-7 போட்டிகள் மிக கடினமாக அமைந்தன. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என பார்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வீரர்கள் குழுவில் கொஞ்சம் மாற்றம் செய்யவேண்டும். ஐபிஎல்லின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு அணியை உருவாக்கினோம் அது நன்றாக செயல்பட்டது. தற்போது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ருதுராஜை பொறுத்தவரை அவர் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குணமான பிறகும் கூட 20 நாட்களுக்கு கழித்தும் அவர் உடல்திறன் முழுமையாக சரியாகவில்லை. அவருக்கு போதிய பயிற்சி செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் தான் வாட்சன் மற்றும் டு பிளஸிஸுடன் நாங்கள் விளையாடவேண்டியதாக இருந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை. ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி என்னவெனில் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம், அதற்குத் தான் நாங்கள் பெயர்பெற்றவர்கள் என்றார்.
மேலும் இந்த ஆண்டு கடினமாக இருந்தது. நிறைய அணிகள் நன்றாக விளையாடிய ஒரு சீசன் இது. மும்பை அணி அபரமாக் விளையாடியது. நாங்கள் புள்ளிபட்டியலில் கடைசியில் இருக்கிறோம் ஆனால் 14 புள்ளிகள் எடுத்திருந்தால் பிளே ஆஃபுக்கு திருத்தி பெற்றிருப்போம் என்றார் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வழியாக இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிக்கான சூத்திரத்தை கண்டறிந்ததது. முதல் 12 போட்டிகளில் ஒருமுறை கூட தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை வெல்ல முடியாமல் தவித்த சென்னை அணி, ஐபிஎல் லீக் சுற்றுகள் கடைசி மூன்று போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது.
அடுத்தடுத்து வென்றாலும் நூலிழையில் பிளேஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டிருக்கிறது என்பதே உண்மை. இந்த ஐபிஎல் சீசனில் குறைந்தது இரண்டு அணிகள் 14 புள்ளிகளோடு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை அணி 12 புள்ளிகள் எடுத்திருந்தபோதிலும் கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டிக்கு முந்தைய சூழல் வரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் கிட்டத்தட்ட மூன்று போட்டிகளில் கடைசிகட்டங்களில் தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐதராபாத் அணியுடனான ஒரு போட்டியில் மிடில் ஓவர்களில் மந்தமாக விளையாடியதால் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டியபோதும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதே போல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான சூழலில் தோனி மற்றும் சாம் கரண் விக்கெட்டை இழந்ததால் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியுடனான போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் இருந்தது டெல்லி. பிராவோ காயம் காரணமாக பெவிலியன் திரும்பியதால் ஜடேஜாவை கடைசி ஓவர் வீசச் சொன்னார் தோனி. அக்சர் படேலின் மூன்று அபாரமான சிக்ஸர்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது தோனி அணி.
இந்த மூன்று போட்டிகளில் எதாவது ஒன்றில் வென்றிருந்தால் கூட சென்னை தற்போது பிளேஆஃப் வாய்ப்பை பெற்றிருக்கும். ஒருவேளை இரண்டில் வென்றிருந்தால் இந்நேரம் நேரடியாக குவாலிபயர் 1 சுற்றில் மும்பை அணியுடன் மோதும் வாய்ப்பு கூட கிடைத்திருக்கக்கூடும்.
தோனி இந்த ஐபிஎல் சீசனில் தங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று சுத்தமாக வீசவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற எந்த ஐபிஎல் அணிகளுக்கும் கிடைக்காத ஒரு பெருமையாக விளையாடிய அனைத்து சீசன்களிலும் ஐபிஎல் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்ற ஒரே அணி ஆக சென்னை இருந்தது. ஆனால் இந்த சீசனில் பிளே வாய்ப்பு மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பிடிக்கும் சூழல் உருவாகிவிட்டது.
பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டிக்கும் முன்னர் டேனி மாரிசன் தோனியிடம் இதுதான் நீங்கள் மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா என கேட்டார்? அதற்கு தோனி அளித்த பதில் நிச்சயமாக இல்லை.
ஆகவே அடுத்த சீசனிலும் அந்த அணியை தோனியே வழிநடத்தக்கூடும்.
KKR vs RR: பட்டைய கிளப்பிய பாட் கம்மின்ஸ்: கொல்கத்தா அணி அபார வெற்றி
அபாரமான சில வெற்றிகரமான சேசிங் மூலம் இந்த ஐபிஎல்லில் கவனம் ஈர்த்த ஒரு அணி எதுவென்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஆனால் பிளே ஆஃபுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில் டாஸ் வென்று சேசிங் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் முழுமையாக சரணடைந்தது.
இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. அது எப்படி? இந்த போட்டியில் நடந்தது என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
அதிர்ச்சி
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு வழக்கம் போல முதல் ஓவரிலேயே அதிர்ச்சி தந்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் வீசிய இரண்டாவது பந்தில் தொடக்க வீரராக களமிறங்கிய நிதிஷ் ராணா கோல்டன் டக் அவுட் ஆனார்.
அதன்பின்னர் திரிபாதி - கில் ஜோடியை பிரித்தார் ராகுல் தீவாத்யா. ஒன்பதாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. தீவாத்யாவின் அசத்தலான பந்துவீச்சில் கொல்கத்தா வீரர்கள் விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்தனர். 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. அப்போது கேப்டன் மோர்கனும், ரசலும் களத்தில் இருந்தனர். 14வது ஓவரில் இரண்டு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் மோர்கன். ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என மோர்கன் வெளுத்துவாங்க கொல்கத்தாவுக்கு 24 ரன்கள் கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 192 ரன்கள் எடுத்தது. மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
சரிந்த விக்கெட்டுகள்
சேஸிங்கில் சிக்சருடன் ஆட்டத்தை துவங்கியது ராஜஸ்தான். முதல் ஐந்து பந்துகளிலேயே 19 ரன்கள் எடுத்து மிரட்டியது. ஆனால் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் உத்தப்பா அவுட் ஆனார். அங்கிருந்து ராஜஸ்தான் வேகமாக சரிந்தது. எந்தவொரு வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.
ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அதில் நான்கு விக்கெட்டுகளை கம்மின்ஸ் வீழ்த்தியிருந்தார். அந்த அணியில் அதிகபட்சம் பட்லர் 22 பந்துகளில் 35 ரன்கள் விளாசியிருந்தார். ராஜஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பிளே ஆஃப் இழப்பு
கொல்கத்தாவின் இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் பிளே ஆஃப் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே சென்னை, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிட்டது. இப்போது பெங்களூரு, டெல்லி, ஹைதரபாத், கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு பற்றி பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் கொல்கத்தா அணி புல்லிபட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.ராஜஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தற்போது நான்காவது இடம் பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா அணிகள் 14 புள்ளிகளை பெற்றுள்ளன, ஹைதரபாத் 12 புள்ளிகளை பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தை பிடிக்கும் சூழலில் இருந்து தப்பியுள்ளது. ராஜஸ்தான் எட்டாமிடமும், சென்னை ஏழாமிடமும், பஞ்சாப் ஆறாமிடமும் பிடிப்பது உறுதியாகிவிட்டது.
திங்கட்கிழமை டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக பிளே ஆஃப் தகுதி பெறும். அதுமட்டுமல்ல புல்லிபட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து மும்பை அணியுடன் குவாலிபியர் 1 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுவிடும். அந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும், ஆகவே இந்த போட்டி ஒரு காலிறுதி போட்டி போல நடைபெறும். இந்த இரு அணிகளுக்கும் ரன்ரேட்டில் பெரிய வித்தியாசம் இல்லை.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் ஹைதரபாத் தோற்றுவிட்டால் 12 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும் என்பதால் பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா என மூன்று அணிகளும் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிடும்.
ஒருவேளை ஹைதராபாத் வென்றுவிட்டால் ரன்ரேட் குறித்த எந்த சிக்கலுமின்றி புள்ளிப்பட்டியலில் மூன்றாயிடம் பிடித்து அந்த அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிடும். அப்போது டெல்லி - பெங்களூரு மோதும் போட்டியில் தோற்கும் அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் ரன்ரேட் பார்க்கப்படும். அதில் முன்னிலையில் இருக்கும் அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிடும்.
தற்போதைய நிலவரப்படி, கொல்கத்தா பெங்களூரு, டெல்லி அணிகளை விட ரன்ரேட்டில் பின்தங்கியுள்ளது. ஆனால் அதிக வித்தியாசமில்லை. ஆகவே திங்கட்கிழமை நடக்கவுள்ள டெல்லி - பெங்களூரு போட்டியில் தோற்கும் அணி மிக சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் பட்சத்தில்,
கொல்கத்தாவை விட ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கும். இதனால் அந்த அணிக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
அதாவது ஹைதரபாத் அணி மும்பையை வென்றாலும் கூட கொல்கத்தாவை விட நல்ல ரன்ரேட் இருப்பதன் காரணமாக பிளே ஆஃபுக்குள் தகுதி பெற்றுவிடும்.
கொல்கத்தா அணி ரசிகர்களை பொறுத்தவரை டெல்லி - பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் ஏதாவதொரு அணி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என காத்திருக்க வேண்டும் அல்லது மும்பை அணி ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டும் என விரும்ப வேண்டும்.
ஆகவே ஐபிஎல்லின் விறுவிறுப்பான கட்டம் இன்று முதல் தொடங்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :