திருநங்கை சங்கீதா கொலை: பொதுவெளியில் திருநங்கைகள் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவையில் 'டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் உணவகம் தொடங்கி அதன்மூலம் ஆதரவில்லாத திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய திருநங்கை சங்கீதா, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து பொதுவெளியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு குறித்த விவாதம் எழுந்துள்ளது.

ஆதரவில்லாதவர்களுக்கு நிதி உதவி செய்வது, படிப்பில் ஆர்வமுள்ள திருநங்கைகளுக்கு உதவுவது, திருநங்கைகளுக்காக நடமாடும் உணவகங்கள் உருவாக்கியது போன்று திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுத்தவர் சங்கீதா. இருபது ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா இறுதிவரை சுய உழைப்பில் வாழ்ந்து வந்தவர் என அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் திருநங்கை அனுஷியா.

"சமையல் வேலைக்காக சென்றிருந்தபோது தான் சங்கீதாவை சந்தித்தேன். முதல்சந்திப்பிலேயே என்னிடம் மிகவும் அன்பாக பழகினார். அவர் நடத்திய சமையல் நிறுவனத்தில் பல திருநங்கைகள் வேலை செய்தனர். வீட்டை விட்டு வெளியேறினாலும் சொந்தமாக தொழில் செய்து உழைத்து வாழ்வது குறித்து அவரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி உதவி பெற்று வாழ்வாதாரமின்றி தவித்து வந்த பல திருநங்கைகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கியவர்."

"2019ம் ஆண்டு இருபது நடமாடும் உணவக வண்டியும், அதற்கான சமையல் பாத்திரங்களையும் இலவசமாக வழங்கினார். தையல் கலை தெரிந்த திருநங்கைகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கியுள்ளார். விபத்து ஏற்பட்டு கால் உடைந்த நிலையிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு 'டிரான்ஸ் கிச்சன்' தொடங்கினார். சமையல் படிப்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ததோடு எங்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கி தந்தார். அவரது இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்டிப்பும் கனிவுமாய் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் தான் நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது," என கலங்குகிறார் அனுஷியா.

குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டபோதும் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு சுயமரியாதையோடு வாழ்ந்தவர் சங்கீதா என்கிறார் இவர்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

"சங்கீதாவும் நானும் பாட்டி பேத்தியைப் போல் தான் பழகுவோம். முன்கோபம் அதிகமென்றாலும் அடுத்த நிமிடம் அன்பாக அரவணைத்துக் கொள்வார். ஆங்கிலம் சரளமாக பேசுவார், சமையல், தட்டச்சு, கணினி வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் தனது குடும்பம் பற்றியும், வாழ்வின் சோகங்கள் குறித்தும் இதுவரை யாரிடமும் அவர் பகிர்ந்து கொண்டதில்லை. அவரது இறுதிச்சடங்குக்காக உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். குடும்பத்தினரின் அரவணைப்பு கிடைத்திருந்தால் சங்கீதா இன்னும் பல சேவைகளை செய்திருப்பார். வாழும் போது பிரபலமாக அறியப்பட்டவர், இறப்பிலும் மர்மமமான செய்தியாகவே மறைந்துள்ளார். ஒருவேளை சங்கீதாவின் உயிர் இயற்கையாக பிரிந்திருந்தால் திருவிழாவைப் போல் ஆடிப்பாடி கொண்டாடியிருப்போம். திருநங்கை சமூகத்தில் சங்கீதா தனித்துவமிக்கவர்," என கூறுகிறார் இவர்.

28 வயதாகும் அனுஷியா, கோவையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சங்கீதாவின் உணவகத்திலும் பகுதி நேரமாக இவர் வேலை செய்து வந்துள்ளார்.

புறக்கணிப்புதான் கொலைகளுக்கு காரணம்

சங்கீதா

திருநங்கை என்ற காரணத்தால் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் திருநங்கைகளுக்கு பொதுவெளியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என கூறுகிறார் சமூகசெயற்பாட்டாளரான திருநங்கை தஸ்லீமா நஸரீம்.

"கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கைதாகி சிறையிலிருக்கும் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளை வெளியே கொண்டுவந்து பெருமையோடு குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்தினால் புறக்கணிப்பது தான் அவர்களுக்கான பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்குகிறது. அக்கம்பத்தினரின் விமர்சனம், அவமானம், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு திருமணத்தடை போன்ற காரணங்களினால் திருநங்கைகள் குடும்ப கட்டமைப்புகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டுதலும் இல்லாமல் தனித்துவிடப்படும் திருநங்கைகளின் வாழ்க்கை பெரும்சோகத்தில் முடிகிறது. அப்படித்தான் சங்கீதாவின் மரணத்தையும் பார்க்கிறேன்."

"திருநங்கைகள் ஆசிரியர்களாகவும், மருத்துவராகவும், வழக்கறிஞராகவும், காவலராகவும் உருவாகியிருப்பது பெரியவிஷயமில்லை. பேருந்துகளில் அவமானப்படுத்தப்படுகிறோம், காவல்நிலையத்தில் சுயமரியாதையை இழக்கிறோம், பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறோம். இவ்வாறு பொதுவெளியில் எந்தவித பாதுகாப்புமின்றி திருநங்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள், பெண்கள் மீதான தாக்குதலுக்கு குரல் கொடுக்கும் சமூகம் எங்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு," என்கிறார் இவர்.

தஸ்லீமா நஸரீம்

சமூக அங்கீகாரம் மட்டுமே கிடைத்துள்ளது

இன்றைய காலகட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைத்துள்ளபோதும் சமூகப்பாதுகாப்பில்லை என்பதையே சங்கீதாவின் கொலை உணர்த்துவதாக தெரிவிக்கிறார் திருநர் உரிமை கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானு.

"2016 ம் ஆண்டு சென்னையில் திருநங்கை தாரா உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். தற்கொலை என அந்த வழக்கு முடிக்கப்பட்டது. சென்ற ஆண்டு துத்துக்குடியில் கோவில் பூசாரி ராஜாத்தியை பட்டப்பகலில் கொலைசெய்து, அவரின் தலையை துண்டாக்கி கோவில் முன் வைத்து சென்றனர். இந்த வரிசையில் திருநங்கைகளின் நலனுக்காக செயல்பட்டு வந்த சங்கீதா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவை தான் இச்சமூகத்தில் திருநங்கைகளின் பாதுகாப்புக்கான எடுத்துக்காட்டு. அவமானம், இழிசொல், புறக்கணிப்பு என பல போராட்டங்களையும் தாண்டி பொதுச்சமூகத்தில் சுயமரியாதையோடு அங்கீகாரம் பதித்துவரும் திருநங்கைகளுக்கு இந்த கொலைகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது," என்கிறார் இவர்.

கிரேஸ் பானு.

"குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் போக்சோ வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. பட்டியலின மக்களுக்காக பாதுகாப்பு சட்டம் உள்ளது. பெண்கள் மீதான வன்முறைக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், திருநங்கைகளை வன்கொடுமை அல்லது சித்ரவதை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை தான் வழங்கப்படுகிறது. கடுமையான தண்டனைகள் இல்லையென்றால் திருநங்கைகள் மீதான தாக்குதல்கள் எப்படி குறையும்?" என கேள்விகேட்கிறார் கிரேஸ் பானு.

"மற்ற நாடுகளில் கறுப்பின திருநங்கை இப்படி கொலை செய்யப்பட்டிருந்தால் சர்வதேச அளவில் விவாதங்கள் நடந்திருக்கும். உலக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி இருக்கும். ஆனால், நமது நாட்டில் அப்படியில்லை. திருநங்கை சமூகத்திற்காக உழைத்தவர் சங்கீதா. அவரின் கொலையை எத்தனை அரசியல் தலைவர்கள் கண்டித்தனர்? எந்த அரசியல் கட்சி கண்டனம் தெரிவித்தது? பொதுச்சமூகம் எங்களுக்காக எப்போது குரல் கொடுத்தது? ஆனால், மக்கள் பிரச்சனைக்கான எல்லா போராட்டங்களிலும் நாங்கள் முன்வரிசையில் நின்றுள்ளோம். திருநங்கைகள் மீதான வன்முறைகளை கண்டிக்காமல் நம் பொதுச்சமூகம் காட்டும் இந்த அமைதியையும் ஒருவித தீண்டாமையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்," என்கிறார் இவர்.

குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கவேண்டும்

திருநங்கைகளை குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளாத வரை அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என கூறுகிறார் சகோதரி அமைப்பைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்புரமணியம்.

கல்கி சுப்புரமணியம்

"குடும்பத்தினரின் பாதுகாப்பு இல்லாததே சங்கீதா உயிரிழந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். தனித்துவிடப்பட்டு, ஆதரவின்றி வளர்ந்து, கேள்விகேட்க ஆளில்லாமல், வன்முறைக்கு உள்ளாகி திருநங்கைகள் கொலை செய்யப்படும் நிலை மாறவேண்டும் என்றால் முதலில் நமது குடும்ப கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும். திருநங்கைகளை சாதாரணமாக குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாக வேண்டும். இதைத்தடுப்பதும் ஆணாதிக்க மனநிலை தான். இதை சீர் செய்வது மிகவும் முக்கியம். திருநங்கைகளை குடும்பத்தில் இருந்து புறக்கணித்து, அவர்களின் உரிமையை பரிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,"

"மேலும், திருநர் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019ன் படி திருநங்கைகள் மீதான வன்முறை, சித்ரவதை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துபவர்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்," என கோரிக்கை வைக்கிறார் கல்கி சுப்புரமணியம்.

இவரது ஒருங்கிணைப்பில் திருநங்கைகள் அனைவரும் இணைந்து திருநங்கை சங்கீதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளனர்.

பி.காம் பட்டம் பெற்ற சங்கீதா கோவை நகரில் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கொரோனா பொது முடக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் பத்து திருநங்கைகளை ஒருங்கிணைத்து செப்டம்பர் மாதத்தில் திருநங்கைகள் பணியாற்றும் 'கோவை டிரான்ஸ் கிச்சன்' உணவகத்தை துவங்கினார். அப்போது பிபிசிக்கு பேட்டியளித்த சங்கீதா, 'குடும்பங்களை விட்டு பிரிந்தாலும் சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு வாழ்வது தான் எனது குறிக்கோள். மனிதர்கள் அனைவரும் சுய உழைப்பில் தான் வாழ வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

சாய்பாபாகாலனி பகுதியில் வசித்து வந்த சங்கீதாவின் இல்லம் ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் தண்ணீர் பிடித்துவைக்கும் ட்ரம் ஒன்றில் திருநங்கை சங்கீதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இக்கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை தேடிப்பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். முதற்கட்ட விசாரணையில் சங்கீதாவின் உணவகத்தில் பணிபுரிந்த இருவர் தலைமறைவாகியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சொத்து பிரச்சனை காரணமாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தலைமறைவாகி இருந்த பணியாளர் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சங்கீதாவை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 23 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தவர், சங்கீதாவின் வீட்டில் தங்கி உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் திருநங்கை சங்கீதாவிற்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுப்பேன் என சங்கீதா மிரட்டியதால் அவரை கொலை செய்ததாகவும், வீட்டிலிருந்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை திருடி செல்போன் வாங்கியதாகவும் ராஜேஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: