நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு: அரசு ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு பயன் தரும்?

    • எழுதியவர், அலோக் ஜோஷி
    • பதவி, முன்னாள் ஆசிரியர், சி.என்.பி.சி ஆவாஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

திங்கட்கிழமை பொருளாதாரத்திற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது, அதே நாள் இந்திய நிதியமைச்சர் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். இது தற்செயலான ஒன்றுதான். ஆயினும் கூட இந்த அறிவிப்பானது கடந்த ஆண்டு இதே விருதை வென்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அபிஜீத் பேனர்ஜியையும், அவரது உதவியாளரும் துணைவியுமான எஸ்தர் டுஃப்லோவையும் எனக்கு நினைவூட்டியது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைவார்கள். எல்லா கடைக்காரர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தொழிலதிபர்கள் மற்றும் பெருவணிகர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணத்தை நேரடியாக மக்களிடம் கொண்டுசெல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வரும் பொருளாதார வல்லுநர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்,

அரசு ஊழியர்களுக்கு இரண்டு வசதிகள் வழங்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

ஒன்று, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும். இரண்டாவதாக, விடுப்பு எடுத்து பயணம் செல்வதற்கான தொகை, அதாவது, அவர்களின் விடுப்பு பயண சலுகை அல்லது எல்.டி.சி, இந்த முறை அவர்கள் எங்கும் பயணம் செல்லாமலேயே அவர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் இந்த இரண்டு நன்மைகளையும் பெற ஒரு நிபந்தனை உள்ளது. அது என்னவென்றால், அவர்கள் இந்த பணத்தை 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலவிட வேண்டும். மேலும் ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதம் அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்கும் பொருட்களில் மட்டுமே செலவிட வேண்டும்.

கொரோனா காலத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம்

இந்த வாங்குதலுக்கு டிஜிட்டல் முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. ரொக்கப்பணம் கொடுத்து வாங்கும்போது இந்த நன்மை கிடைக்காது. முன்கூட்டிய தொகை அல்லது வட்டி இல்லாமல் பத்தாயிரம் ரூபாய் கடனை ப்ரீபெய்ட் 'ரூபே கார்டு' மூலமாக அரசு வழங்கும்.

அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் மார்ச் 31 க்கு முன்னர் இந்த அட்டையிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்களை வாங்கலாம். மேலும் கார்டில் செலவிடப்பட்ட பணம், அடுத்த நிதியாண்டில் பத்து சம தவணைகளில் சம்பளத்திலிருந்து கழிப்பதன் மூலம் மீட்கப்படும்.

கொரோனா நெருக்கடி மற்றும் பொதுமுடக்கத்திற்குப் பிறகு இது முதல் நல்ல செய்தி. இது நடுத்தர மக்களுக்கு நிவாரணம் தருவது மட்டுமல்லாமல் அவர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. எல்.டி.சிக்கு பதிலாக இந்த பண வவுச்சர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊழியர் அல்லது அதிகாரிக்கும், எத்தனை எல்.டி.சி தொகை கிடைக்குமோ அதற்கு ஈடான வவுச்சர்கள் வழங்கப்படும்.

இந்த தொகை எல்.டி.சி தகுதிக்கு சமமாக இருக்கும் அல்லது பயண கட்டணத்தின் மூன்று மடங்குக்கு சமமாக இருக்கும். இங்குள்ள நிபந்தனை என்னவென்றால், நீங்கள் பெறும் வவுச்சரின் மூன்று மடங்கு தொகையை செலவழித்திருப்பதற்கான ரசீதை இணைக்கவேண்டும். அப்போதுதான் வருமான வரி விலக்கு பெற முடியும். இங்கேயும் ப்ரீபெய்ட் கார்டு போன்ற அதே நிபந்தனைகள் பொருந்தும்.

அதாவது மார்ச் 31 க்கு முன் செலவுசெய்யப்படவேண்டும், டிஜிட்டல் முறையில் அது இருக்க வேண்டும் மற்றும் 12 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான ஜிஎஸ்டி உள்ளவைகளாக மட்டுமே அது இருக்க வேண்டும்.

லாபமா நஷ்டமா

கேள்வி என்னவென்றால், இந்த திட்டத்தின் நன்மை என்ன, தீமை என்ன?

முதலாவதாக, மிகப் பெரிய நன்மை - அனைத்து அரசு ஊழியர்களும் எல்.டி.சி திட்டத்தை சாதகமாகப் பயன்படுத்த நினைத்தால், 5675 கோடி ரூபாய் அரசு கருவூலத்திலிருந்து ஊழியர்களின் கணக்கிற்குச் செல்லும். அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் சேர்க்கப்பட்டால், இந்தக் கணக்கில் மேலும் 1900 கோடி ரூபாய் சேர்ந்துவிடும்.

திட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த பணம் முழுவதும் மார்ச் மாதத்திற்குள் சந்தையில் செலவிடப்பட வேண்டும். நீங்கள் நிபந்தனைகளை இன்னும் உன்னிப்பாகப் பார்த்தால், சந்தையில் செலவிடப்படும் தொகை இதைவிட அதிகமாக இருக்கும் என்பதை காண்பீர்கள்.

எல்.டி.சி யில் பெறப்படும் தொகையில் இரண்டு பகுதிகள் உள்ளன என்பதை அத்திட்டத்தைப் பயன்படுத்தி வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது, விடுமுறைக்கு பதிலாக கிடைக்கும் விடுப்பு என்காஷ்மென்ட். இதற்கு வருமானவரி செலுத்தவேண்டும். இரண்டாவது பகுதி, விடுமுறையில் செல்ல பயண கட்டணம். இதற்கு வரி விலக்கு உண்டு.

ஊழியர் பயண கட்டணத்தின் மூன்று மடங்கு தொகையைச் செலவிட்டால்தான் வரிவிலக்கு பெறமுடியும் என்ற நிபந்தனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

எல்.டி.சி உரிமைகோரலை சமர்ப்பிக்கும் நேரத்தில் ஒரு டிக்கெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில், ஊழியர்கள் பயணம் செல்ல முடியாது என்பதால் அவர்கள் எங்கும் செல்லாமலேயே டிக்கெட் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அரசு அளித்துள்ளது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில், எங்கிருந்து எங்கு செல்ல டிக்கெட் பெறுவது என்ற கேள்வி எழும்.

அரசு, அதற்கான பதிலையும் அளித்துள்ளது. வெவ்வேறு சம்பளம் உள்ளவர்களுக்கு பயண கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் வகுப்பு விமான கட்டணம் பெறுபவர்களுக்கு ரூ .36 ஆயிரம், இக்கானமி வகுப்பில் உள்ளவர்களுக்கு ரூ .20 ஆயிரம், ரயில் மூலம் எந்த வகுப்பிலும் பயணிப்பவர்களுக்கு பிரதி நபருக்கு ரூ .6000 என்ற முறையில் பயணகட்டணம் கிடைக்கும்.

ஆனால் இந்த திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்த, அவர்கள் வவுச்சரின் விலையை விட மூன்று மடங்கு செலவிட வேண்டியிருக்கும்.

அரசு சுற்றறிக்கையில் ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. அதில் கணக்கிட்டு காட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் பெறும் ஒரு அதிகாரி, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தனது குடும்பத்துடன் பயணம் சென்றால், அவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை கட்டணம் ரூ 54,015 ஆக இருக்கும். ஆனால் இருபதாயிரம் என்ற பயண கட்டணம் இருந்தால், நான்கு உறுப்பினர்களுக்கு எண்பதாயிரம் அதாவது அவர் இப்போது மொத்தமாக ரூ .1,34.015 ஐ பெறுவார். ஆனால் வரிச்சலுகை பெற அவர் மூன்று மடங்கு பயணகட்டணத்தை அதாவது இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயையும், விடுமுறை சலுகையின் முழு கட்டணமான 54,015 ரூபாயையும் செலவிட வேண்டும். அதாவது அவர் செலவிட வேண்டியிருக்கும் மொத்த தொகை ரூ 2,94,015.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

அரசு ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை குறிவைத்துள்ளது என்பது தெளிவாகிறது. தனது சட்டைப் பையில் பணம் வரும் என்று கேட்டு ஊழியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த கணித முறைப்படி பணம் அளித்தால், அவர்களின் ஊழியர்களுக்கும் வரி விலக்கு கிடைக்கும் என்று தனியார் துறையிடமும் கூறப்பட்டுள்ளது.

எல்.டி.சிக்கான நான்கு ஆண்டு தொகுதி பலருக்கும் அடுத்த மார்ச் மாதத்தில் முடிவடைந்தால், அவர்கள் தங்கள் எல்.டி.சியை எடுக்க விரும்புவார்கள். இப்போது அவர்கள் வரிவிலக்கு பெறவிரும்பினால், தாங்கள் பெறுவதை விட அதிக மடங்கு பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

வட்டி இல்லாத கடனை அடுத்த ஆண்டு அனைவருமே திருப்பித் தந்தாக வேண்டும். எனவே அரசு தான் கொடுத்ததை விட அதிகமாக உங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொள்ளும் ஏற்பாடுகளையும் கூடவே செய்துவிட்டது.

இதோடு கூடவே, இரண்டாவது நிபந்தனை மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், உங்கள் செலவுகள் அனைத்தும் டிஜிட்டலாக இருக்க வேண்டும் கூடவே குறைந்தபட்சம் 12% ஜி.எஸ்.டி. உள்ளவைகளுக்கு அந்த செலவு இருக்கவேண்டும். அதாவது, நீங்கள் மிக முக்கியமான விஷயங்களுக்கு செலவிட்டால், உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு அல்லது வேறுவிதமாகக் கூறினால் ஆடம்பரப் பொருட்களுக்கான செலவுகளை அல்லது விருப்புரிமை செலவுகளை அதிகரிக்க அரசு விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

அதாவது, உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத அந்த விஷயங்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதுவும் மக்கள் தங்கள் சேமிப்பின் ஒவ்வொரு பைசாவையும் கவனமாக கருத்தில்கொண்டு, முக்கியமான விஷயங்களுக்கு செலவழிப்பதில் கூட பலமுறை சிந்திக்கும் இந்த நேரத்தில் அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த இதுபோன்ற ஆலோசனைகள்

பொதுமுடக்கம் ஆரம்பமானதற்குப் பிறகு, அரசு ரொக்கப்பணத்தை நேரடியாக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் மக்கள் அதை தங்களிடமே வைத்திருக்காமல் செலவு செய்யும் வகையில் அதை கொடுக்கவேண்டும் என்றும் அபிஜீத் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பல முறை அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.

முதல் பார்வையில், அரசும் அதையே செய்துள்ளது போலத்தெரிகிறது. எத்தனை அதிக செலவோ அத்தனை அதிக நன்மை என்பதும் காட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்கள்/அதிகாரிகளுக்கானது . அதாவது பொதுவாக வேலையை இழக்கும் ஆபத்து இல்லாதவர்கள் அவர்கள்.

எனவே, ஏராளமான மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் தைரியம் காண்பிப்பார்கள். அரசிடமிருந்து கொஞ்சம் பணம் பெறுவார்கள், தங்கள் சட்டைப் பையில் இருந்து சிறிது எடுப்பார்கள். தீபாவளி முதல் ஹோலி வரை மனம் திறந்து ஷாப்பிங் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அரசாங்க நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே நன்மை!

இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்காக எதையும் செய்யவில்லை என்ற புகாரையும் ஓரளவிற்கு அரசு நீக்கியுள்ளது.

இந்த திட்டம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நன்மைதருவதாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்த நன்மை அரசாங்க நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே. தனியார் துறை பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதில் எதுவுமே இல்லை. எனவே அரசு அவர்களுக்காக எதுவும் செய்யாது என்று நாம் கருத வேண்டுமா?

கடன் தவணைகளை காலம் தாழ்த்தி அளிப்பதான திட்டத்தில், கூட்டு வட்டி மீதான வட்டி, தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் நன்மை தரும் என்பதை இதற்கான பதிலாக கணக்கிடலாம்.

ஆனால், அரசு வேலையில் இல்லாதவர்கள், கடன் வாங்காதவர்கள், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஆகியோருக்கு அரசின் நிவாரணம் கிடைக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.

இது ஒரு பெரிய கேள்வி. ஆனால் பதில் எளிதானது அல்ல.

ஒன்று, ஒவ்வொரு குடிமகனின் கணக்கிலும் பாகுபாடின்றி ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கும் விதமான சில திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். இதனால் எல்லா மக்களும் செலவு செய்ய ஆரம்பிப்பார்கள்.

ஆனால் எல்.டி.சி யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள், தனியார் துறையில் வேலைகளின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பலர் முன்வருவார்கள் என்று தோன்றவில்லை.

இப்போது நிதியமைச்சர் சில காலம் காத்திருப்பார் என்று மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும்.

இந்த நடவடிக்கைகள் ஏதேனும் நல்ல விளைவை அளித்தால், சந்தையில் உயிர் திரும்பினால், வரி வசூல் அதிகரித்தால், அப்போது அரசு வேறு சில பெரிய நடவடிக்கைகளை எடுக்க நினைக்கலாம். அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அந்த முகங்களிலும் இதன் காரணமாக புன்னகை மலரக்கூடும்.

கொரோனா விவகாரம் காரணமாக முந்தைய பட்ஜெட்டின் அனைத்து புள்ளிவிவரங்களும் பயனற்றதாகிவிட்டதால், இப்போது அடுத்த பட்ஜெட்டின் காத்திருப்பும் தொடங்கக்கூடும். ஆனால் நிலைமை விரைவாக முன்னேறத் தொடங்கினால், மீதமுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிவிலக்கில் சில நல்ல செய்திகளை, அடுத்த பட்ஜெட் கொண்டு வரக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: