ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் இல்லை: சகோதரிகளுடன் தகராறு – தற்கொலை செய்துகொண்ட மாணவி

பட மூலாதாரம், Getty images
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, ஒரு செல்போன் மூலம் மூன்று சகோதரிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில், மூத்த சகோதரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
கடந்த 5 நாட்களாக தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ஆறுமுகம். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில், செவிலியருக்கான பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆறுமுகத்தின் மூன்று மகள்களும் பள்ளி மற்றும் கல்லூரி படித்து வருவதால், அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆகவே, மகள்களின் ஆன்லைன் வகுப்பிற்காகத் தந்தை ஆறுமுகம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக, கடும் சிரமத்திற்கு மத்தியில் இந்த ஒரு ஸ்மார்ட்போனை அவர்களது மகள்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். குறிப்பாக, மூன்று மகள்களுக்கும் ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே வாங்க முடிந்த காரணத்தினால், மகள்களிடம் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து படிக்கும்படி தந்தை அறிவுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், மூவரில் ஒருவர் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, ஆன்லைன் வகுப்பு கவனிக்க முடிந்தது. இதனால், ஒருவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது, மற்ற இருவர் ஆன்லைன் வகுப்பு கவனிக்க முடியாத சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில், தங்களுக்கும் தனித்தனியே ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க வேண்டும் என மகள்கள் தந்தையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், வறுமையின் காரணமாக மேலும் இரண்டு ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையில், மூத்த மகளை அவரது இரண்டு சகோதரிகளிடம் அனுசரித்துக் கொண்டு மூன்று பேரும் ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்திப் படிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் மூத்த மகளுக்கும், தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தந்தை கடுமையாகப் பேசியதாகக் கூறி, மன உளைச்சலுக்கு ஆளான மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஆன்லைன் வகுப்பிற்காக, ஒரு ஸ்மார்ட்போனை ஆறுமுகத்தின் மூன்று மகள்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி, மூத்த மகள் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது மகளுக்கு, அவருடைய ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இரண்டாவது மகள் அவரது தந்தையிடம், மூத்த சகோதரியிடமிருந்து தனது ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது மகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்காமல், நீ மட்டுமே ஏன் பயன்படுத்தி வருகிறாய் என்று மூத்த மகளிடம் தந்தை கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தந்தை தன்னைத் திட்டிவிட்டதாக கூறி மன உளைச்சலில் மூத்த மகள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, அவரை உளுந்தூர்பேட்டை மருந்துவனைக்கு அழைத்துவந்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிறகு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று(ஆகஸ்ட் 30) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்," எனக் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, "இது போன்ற ஆன்லைன் வகுப்புகளால் வறுமையில் உள்ள ஏழை குடும்பத்தினர், அவர்களது பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்க முடியாமல், இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த ஆன்லைன் வகுப்புகளைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்," என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பிற செய்திகள்:
- பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
- கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
























