ஜம்மு காஷ்மீரில் இருந்து 10,000 படையினர் விலக்கல் - இந்திய அரசு உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - ஜம்மு காஷ்மீரில் 10,000 படையினர் விலக்கல்
ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள சுமார் பத்தாயிரம் துணை ராணுவப் படையினரை உடனடியாக விலக்கிக் கொள்ள இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370இந்த கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஒன்றிய பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு படைகள் விலக்கப்படுவதில் இதுவே பெரிய எண்ணிக்கையாகும்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 7,000 துணை ராணுவப் படையினர் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். எனினும் ஜூலை 2020இல் 10,000 பேர் மீண்டும் அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'அயோத்தி ராமர் கோயில் 1000 ஆண்டு இருக்கும்'

பட மூலாதாரம், PIB
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்படும் என்றும் அது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என்றும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி மற்றும் மத்திய கட்டட ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களும் இந்த கட்டுமான பணிகளின் பங்காற்றுவார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரான அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோயில் கட்டுமான பணிகளுக்கு பொறுப்பாக உள்ளது.
கோயில் கட்டப்படும் இடத்தில் உள்ள மண்ணின் வலுவைப் பரிசோதிக்க சென்னை ஐஐடியிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது; கோயில் கட்டடம் நிலநடுக்கத்தை தாங்குவது எப்படி என்பது குறித்து மத்திய கட்டட ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி - சென்னை வருபவர்களைத் தனிமைப்படுத்த உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
முன்னர் அவசரத் தேவைக்காக மட்டும் வழங்கப்பட்டு வந்த 'இ-பாஸ்' எளிமையாக்கப்பட்டு, தகுந்த காரணங்கள் இருந்தால் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனி வருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 18,823 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:




























