"உடலை பாதுகாக்கவும் வழியில்லை" ; ஓமன் அருகே கப்பலில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மரணம்

பட மூலாதாரம், FSUIINDIA
பதற்றமான சூழல் காரணமாக ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கிய கப்பலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடலை பாதுகாப்பதற்கான வசதிகள் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதனால், சக ஊழியர்கள் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை கொண்டு உடல் அழுகாமல் தடுக்க முயற்சிப்பதாக வெளியிட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவரது உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
அவருடைய குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை காரணமாக, பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், ஓமனில் எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற வணிகக் கப்பல் எங்கும் செல்ல முடியாமல் ஓமன் கடல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கப்பலில் இருந்த இரண்டாம் நிலை அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், பதற்றத்துக்கு மத்தியில் அவருக்கு தகுந்த மருத்துவ உதவி கிடைக்கவில்லை என கப்பலில் இருந்த சக ஊழியர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறுகின்றனர்.
இந்நிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 11 அன்று உயிரிழந்தாக இந்திய கடல் பணியாளர்களுக்கான சங்கம் (Forward Seamen's Union of India) கூறுகிறது . இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அழுகும் நிலையில் உடல்
இதுதொடர்பாக, இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான FSUI-யின் எக்ஸ் பக்கத்தில், "35 வயதான இரண்டாம் நிலை அதிகாரி நிஷாந்த் உயிர்த்தநாதன் (தமிழ்நாடு) ஜூன் 11 அன்று உடல்நிலை மோசமான நிலையில் உயிரிழந்தார். முறையான குளிரூட்டும் வசதி ஏதுமின்றி, அவரது உடல் இரண்டு நாட்களுக்கும் மேலாகக் கப்பலிலேயே உள்ளது. உடல் வேகமாக அழுகுவதை தடுக்க கப்பல் குழுவினர் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இது கொடூரமான மற்றும் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலாக உள்ளது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உதவிக்காக தொடர்ச்சியான அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவும் நிஷாந்தை அங்கிருந்து வெளியேற்றவும் தாமதமானதாக கூறப்படுகிறது.
மேலும்,"உயிரிழந்தவரின் உடலை பாதுகாக்கவும்/அவருடைய நாட்டுக்குக் கொண்டு செல்லவும், குழு உதவி கிடைக்கவும் மற்றும் இறந்த அதிகாரிக்கு உதவி கிடைக்காதது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவசரமாக கோருகிறோம்.
நிஷாந்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். அவருடைய குடும்பத்தினர் மற்றும் கப்பல் குழுவினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக FSUI நிஷாந்துக்கு உணவு கொடுக்கப்படும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த காணொளியில் அவர் உடல் நலிவுற்று இருப்பதை காண முடிகிறது. அந்த பதிவில், "ஓமனுக்கு அருகே நடைபெற்று வரும் பதற்றத்துக்கு மத்தியில் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் எம்டி செலஸ்டியல் கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் உயிரிழந்தார்" என பத்திரிகையாளர் நீதா கோல்ஹாத்கரின் தகவலை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது.

பட மூலாதாரம், MattooShashank/X
இந்திய தூதரகம் கூறுவது என்ன?
இதுதொடர்பாக, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை தன் எக்ஸ் பக்கத்தில், "மருத்துவ பிரச்னைகள் காரணமாக இந்திய குடிமகன் நிஷாந்த் உயிர்த்த நாதன் உயிரிழந்தார். துக்ம் துறைமுகத்தில் உள்ள எம்டி செலஸ்டியல் கப்பலில் அவருடைய உடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உன்னிப்பாக ஒருங்கிணைத்து வருகிறது. அவரது உடலை விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கடினமான காலகட்டத்தில் அவரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "நிஷாந்த் உயிர்த்த நாதனின் குடும்பத்தினர், கப்பல் குழுவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவரது உடலை மிக விரைவில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான FSUI எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், நிஷாந்தின் உடலை குளிர்ந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்டு பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பிபிசியால் அந்த காணொளியை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
மேலும் அந்த பதிவில், "எங்களின் இரண்டாம் நிலை அதிகாரியின் சடலம் இது. அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார், அவரின் உடல் அழுகிவருகிறது. நாங்கள் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டோம், ஆனால் எங்களுக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. எங்கள் நிறுவனம் எங்களிடம் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை." கப்பல் ஊழியர்கள் கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்

பட மூலாதாரம், Getty Images
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பகிர்ந்து, "சமரசம் செய்துகொண்ட பிரதமரின் ஆட்சியில், இந்தியராக இருப்பது முழுமையான வீழ்ச்சியைக் குறிக்கிறது.
வெளிநாட்டு சக்திகள் நமது குடிமக்களை கொல்கின்றன. நமது அரசு கீழ்ப்படியும் பணியாளரைப் போல அமைதியாக உத்தரவுகளை ஏற்கிறது. அதேவேளையில், நமது குடிமக்கள் கைவிடப்பட்ட நிலையில் விடப்படுகின்றனர்.
அவரது உடலை தாயகத்துக்கு உடனடியாக எடுத்து வாருங்கள்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் பக்கத்தில், "நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று நீங்கள் பேசினீர்கள்; ஆனால், இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தையும் இறையாண்மையையும் நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்பதற்கு இப்போது எந்தச் சான்றும் தேவையில்லை.
நமது தேசிய நலன்கள் நாள்தோறும் விட்டுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதை 'விஸ்வகுரு' (உலகுக்கே வழிகாட்டி) என்ற பிம்பத்தைக் கொண்டு மூடிமறைக்க நீங்கள் துணிகிறீர்கள்.
தன்னார்வத்துடனான மூலோபாய தன்னாட்சியையும் அணிசேராக் கொள்கையையும் இந்தியா கடைப்பிடித்த காலத்தில்தான் அது உண்மையான 'விஸ்வகுரு'வாகத் திகழ்ந்தது. எதற்கும் அடிபணியாத இந்தக் கொள்கையை முந்தைய அரசுகள் அனைத்தும் உறுதியாகப் பின்பற்றியபோது, உலகம் நமது குரலுக்குச் செவிசாய்த்தது.
வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் இந்தியர்களின் உயிர்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படாத நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காத சூழலில், மௌனம் என்பது பொறுப்புக்கூறலுக்கு மாற்றாகாது. இந்நாடு தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறது; பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதியை எதிர்பார்க்கின்றன." என பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், @FSUIINDIA
என்ன நடக்கிறது?
முன்னதாக, மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில், இந்தியர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஜூன் 9 அன்று ஓமன் கடற்கரைக்கு அப்பால் செடபெல்லோ (Satebello) என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அக்கப்பலில் 24 இந்தியர்கள் இருந்தனர்; அவர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.
மேலும், ஜூன் 8 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளில், வளைகுடா பகுதியில் இந்திய பணியாளர்களை கொண்ட மேலும் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன; எனினும், அவற்றில் உயிரிழப்புகள் ஏதுமின்றி அனைவரும் மீட்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஓமன் வளைகுடாவில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இதில் கோபமான தொனியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இந்தியா தகுந்த முறையில் எதிர்வினையாற்றவில்லை என்றும் காங்கிரஸ் இந்திய அரசை விமர்சித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























