ஆன்லைன் வகுப்பு: மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்ஃபோன் வழங்க பஞ்சாப் அரசு திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்:பஞ்சாப் அரசு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

"அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் - இந்து தமிழ் திசை

பஞ்சாப் மாநிலத்தில் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதத்துக்குள் 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள தகவலில், ''நவம்பர் மாதத்துக்குள் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க உள்ளோம். முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு போன்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களில் டச் ஸ்கிரீன், கேமரா, அரசு செயலிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான இ-பாடங்கள் ஆகியவை இருக்கும்.

இரண்டாவது கட்டமாக ஸ்மார்ட் போன்கள் அரசால் விரைவில் வாங்கப்பட உள்ளன. நவம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, 12-ம் மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

கொரோனாவால் 2020-21 ஆம் கல்வியாண்டில் 4 மாதங்கள் ஏற்கெனவே வீணாகி விட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியை அணுகுவதில் உள்ள சிரமத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

"கோவாக்சின் தடுப்பு மருந்து:இரண்டாம் கட்ட பரிசோதனை தொடக்கம்" - தினமணி

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்புமருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு மீண்டும் இரண்டாம் கட்டமாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு தன்னார்வலர்களின் உடல் நலம் கண்காணிக்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் கோவாக்சின் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

"கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு" - தினத்தந்தி

அரசு பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்:பஞ்சாப் அரசு

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டை விட தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் ஆர்வம் காட்டும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21-ம் ஆண்டு) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் ஒருவாரத்திலேயே மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின்னர், சற்று வேகம் குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிக்க அதிக மாணவர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் மொத்தமாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பப்பதிவு செய்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டனர். இதில் 83 ஆயிரத்து 396 பேர் கல்லூரிகளில் சேர்த்து படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டில் இன்னும் விண்ணப்பிக்க 10 நாட்கள் காலஅவகாசம் இருக்கும் நிலையில், கடந்த 5-ந்தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

விண்ணப்பப்பதிவு செய்ய வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசிநாள் ஆகும். இந்த ஆண்டு 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: