You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆம்பன் சூறாவளி: கொரோனா வைரஸ் மத்தியில் மற்றொரு அபாயம் - விரிவான தகவல்
வங்கக் கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் ஆம்பன் சூறாவளி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது "மிகக் கடுமையான" புயலாக தீவிரமடையவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் புதன் கிழமை அன்று தீவிரமாகச் சூறாவளி வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இரண்டு மாநிலங்களிலும் 20 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஆலோசனை
இரண்டு மாநிலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நகரங்களிலிருந்து கிராமங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி சென்றுள்ள இந்த நேரத்தில் இந்த தீவிர புயல் மையம் கொண்டுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள்
குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு பல தொழிலாளர்கள் வெளி மாநிலங்களிலிருந்து நடந்தே சென்று கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லும் முன்பே சூறாவளியில் சிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்திய வானிலை மையம் இந்த சூறாவளிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணிநேரத்திற்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20ம் தேதி வரை வங்கக் கடலில் வட எல்லையில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அன்று மதியம் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தை புயல் கடக்கும்போது மிக தீவிரமான சூறாவளி காற்றுடன் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை 200-250 மி.மீ அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரம் பேர் பணியில்
வங்கக் கடலில் புயல் மையம் கொண்டுள்ள ஆம்பன் சூறாவளி இந்தியாவின் கிட்டக்கு கடலோர பகுதியில் கரையில் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கரையோர மக்களை காப்பாற்றும் பணியில் ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உதவி செய்து வருகிறது.
ஆம்பன் சூறாவளி தொடர்பான மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் இந்திய வானிலை மையம் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கப்பட்டது.தேசிய பேரிடர் மேலாண்மை படையின் தலைமை இயக்குநர் இது குறித்து கூறுகையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு போதுமான அளவில் என்டிஆர்எஃப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தற்போது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியிலும், இந்த சூறாவளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார். அதேபோல் மத்திய உள்துறை செயலாளரும் மேற்குவங்க மற்றும் ஒடிசா மணிலா அரசுகளை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறார். இது தொடர்பாக ஒடிசா மாநில தலைமை செயலாளர் கூறுகையில், ''இந்த சூறாவளி கரையை கடக்கும்போது பாதிப்பை தடுக்கும் வண்ணம், கரையோரத்தில் வாழும் கிட்டத்தட்ட 50-50 ஆயிரம் பேரை அங்கிருந்து நாங்கள் வெளியேற்ற வேண்டும். ஒடிசா மாநில பேரிடர் தடுப்பு விரைவு பாதுகாப்பு படையினர் 1000 பேர் இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: