You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: உத்தர பிரேதச மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்து - 24 பேர் உயிரிழப்பு
(இந்த பக்கத்தை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம். விரிவான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்)
உத்தர பிரேதச மாநிலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டிருந்த டிரக் ஒன்று, மற்றொரு டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.பலரும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராஜஸ்தானிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள் என ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆரயா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
"அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15ல் இருந்து 20 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலரும் பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்" என ஆரயா மாவட்ட நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் தெரிவித்ததாக ஏஎன்ஐ கூறுகிறது.
"24 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். 22 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாகக் காயமடைந்திருந்த 15 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ராஜஸ்தானிலிருந்து பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தார்கள்" என ஆரயா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததாக அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனீஷ் அஸ்வதி கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துகளில் செத்து மடியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்
இந்தியாவில் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கென இந்திய அரசு ஷர்மிக் ரயில்களை இயக்கினாலும், பல தொழிலாளர்களால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது.
இவ்வாறு விபத்து நடப்பது இது முதன்முறையல்ல. மத்தியப் பிரேதசம், பிகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் பல வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மே 8ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் ஒளரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 தொழிலாளர்கள் இறந்தனர்.
மே 9 ஆம் தேதியன்று மத்தியப்பிரேதசத்தில் உள்ள நர்சிங்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணித்த டிரக், சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: