You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திருமண நாளைக் கொண்டாடுவோம்" - அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாலுமி, மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்
- எழுதியவர், லக்காஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"நான் பாதுகாப்பாக வீடு திரும்புவேன். நம்முடைய திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்" - இதுதான் கப்பல் பொறியாளர் பட்னாலா சுரேஷ் தனது மனைவியிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள்.
புதன்கிழமை அன்று ஓமன் அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலில் சுரேஷ் உயிரிழந்தார்.
பட்னாலா சுரேஷின் மனைவி பார்கவியிடம் பிபிசி பேசியது. "அவர் தினமும் காலையில் குட்மார்னிங் என்று செய்தி அனுப்புவார். வீடியோ கால் பேச வாய்ப்பு கிடைக்காத நாட்களிலும், அவருடைய குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இப்போது அவர் உயிரோடு இல்லை என்ற செய்தி தான் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 44 வயதான சுரேஷ் பட்னாலா, ஓமன் அருகே 'எம்டி செட்டபெல்லோ' என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவராவார்.
இந்த செய்தி வெளியானதை அடுத்து, விசாகப்பட்டினத்தின் ஸ்ரீஹரிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வீடே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.
வீட்டின் சுவர்களில் சுரேஷ் - பார்கவி குடும்பத்தினரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. வீட்டில் பொம்மைகள் நிறைந்திருக்கும் அலமாரிகள், இந்தத் தம்பதியினர் தங்களது குழந்தைகள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக விளங்குகின்றன.
எதிர்காலம் குறித்த கவலை
பட்னாலா சுரேஷின் மனைவி பார்கவி கூறுகையில், "நாங்கள் கடைசியாக ஜூன் 9 அன்று பேசினோம். தான் விரைவில் வீடு திரும்புவதாக அவர் கூறினார். ஆனால், அவர் இந்த கோலத்தில் தான் திரும்புவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" எனக் கூறி தனது இரு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
"புதன்கிழமை இரவு, கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் ஒரு செய்தியை அனுப்பினார். அதில் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தீப்பிடித்து எரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், என் கணவரையும் வேறு இருவரையும் காணமுடியவில்லை இருவர் மாயமாகியுள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார்" என்று பார்கவி மேலும் தெரிவித்தார்.
சுரேஷ்-பார்கவி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பார்கவியின் மூத்த சகோதரியும் அவரது கணவரும் இறந்த பிறகு, அவர்களது இரண்டு மகள்களையும் வளர்க்கும் பொறுப்பை சுரேஷின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். தற்போது, அந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் குடும்பத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
"முழுக் குடும்பமும் அவருடைய வருமானத்தையே நம்பி இருந்தது. இப்போது குழந்தைகளை எப்படி படிக்கவைப்பது, அவர்களை எவ்வாறு வளர்ப்பது என்று எனக்குப் புரியவில்லை. இந்தச் சூழலில் என்னால் வேலை தேடுவதும் கடினம்" என்று 39 வயது பார்கவி வேதனையுடன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால், இப்போது நான்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு உள்ளது. இந்த வயதில் வேலை தேடுவது எளிதல்ல. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவதற்கு அதிக செலவாகும். இந்தச் சுமையை நான் எவ்வாறு சுமக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு முன் என்ன நடந்தது?
சுமார் 15 ஆண்டுகளாகக் கப்பல் பொறியாளராக பணியாற்றி வந்த சுரேஷ், தனது பணி நிமித்தமாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாகப் பார்கவி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நாங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீடியோவில் அழைத்து பேசிக்கொள்வோம். கப்பலில் பணிபுரியும் பிறருடனும் பேசுவதுண்டு. ஆனால், ஜூன் 5 முதல் வீடியோ கால் சரியாக வேலை செய்யவில்லை. ஜூன் 9 அன்றோ அது முற்றிலும் நின்றுபோனது. கடலில் இருப்பதால் நெட்வொர்க் பிரச்னையாக இருக்கும் என்றே நாங்கள் நினைத்தோம்" என்று அவர் கூறினார்.
ஜூன் 10-ஆம் தேதிக்குப் பிறகு சுரேஷ் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
கப்பலின் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சுரேஷ் பரிசோதிக்கச் சென்றிருந்த போதுதான் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், அங்கிருந்து தப்பிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் கப்பல் நிர்வாகம் தங்களிடம் தெரிவித்ததாக பார்கவி கூறினார்.
"அவர் முதலில் மற்றொரு தலைமைப் பொறியாளருக்கு உதவுவதற்காக தற்காலிகப் பணியாளராகவே சென்றிருந்தார்; ஆனால், சூழ்நிலைகள் காரணமாக அவரது பணி நீட்டிக்கப்பட்டது" என்று பார்கவி கூறினார்.
'நாலாபுறமும் தாக்குதல்கள் நடக்கின்றன'
கடைசியாகப் பேசியபோது, அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக சுரேஷ் கூறியிருந்ததாகப் பார்கவி தெரிவித்தார்.
அவர் என்னிடம், 'நான் இருக்கும் இடத்தைச் சுற்றித் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் இறந்துவிட்டார்கள். ஆனால், நான் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்துவிடுவேன். நம்முடைய திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்' என்று பேசியதாக பார்கவி கூறுகையில் கூறினார்.
எதிர்வரும் ஜூன் 24 அன்று தங்களது 15வது திருமண நிறைவை கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருந்ததாக பார்கவி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர் ஆண்டின் பெரும்பகுதி நேரத்தைக் கடலிலேயே கழித்தார். ஆனால் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு கப்பலில் வேலை செய்வதே சரியாக இருக்கும் என்றும் அவர் கருதினார்" என்றார்.
'உயிரோடு இருக்கிறார் என்றே நினைத்தோம்'
சுரேஷின் தந்தை ராமகிருஷ்ணா கூறுகையில், அதிகாரிகள் தங்களுக்குச் சுரேஷின் மரணம் குறித்த தகவலைத் தெரிவித்திருந்த போதிலும், உடல் கண்டெடுக்கப்படாததால் அவர் இன்னும் உயிரோடு இருப்பார் என்று தங்களுக்கு நம்பிக்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
"பின்னர், மூன்று இந்தியர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதை அறிந்தபோது பார்கவி அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.
சுரேஷின் தந்தை ராமகிருஷ்ணா பிபிசியிடம் கூறுகையில், "சுரேஷ் கப்பலின் பொறுப்பாளராக, அதாவது கப்பலின் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஆறு மாதங்கள் விடுப்பு கிடைக்கும். ஆனால், அவருக்குத் தன் வேலை மிகவும் பிடித்திருந்ததால், பெரும்பாலான நேரத்தைக் கடலிலேயே கழிக்க விரும்பினார். ஓர் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே விடுப்பு எடுப்பார்" என்றார்.
தற்போது சுரேஷின் உடலை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரேஷின் தந்தை ராமகிருஷ்ணா கூறுகையில், "அவருடைய வருமானம் தான் எங்கள் குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அரசாங்கம் அவரது உடலைத் திரும்பக் கொண்டு வர வேண்டும், குடும்பத்திற்கு நிதி உதவியும் வழங்க வேண்டும்" என்றார்.
உடல் எப்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு கூறுவது என்ன?
சுரேஷ் பட்னாலா உட்பட மூன்று இந்தியர்களின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், 'எம்டி செட்டபெல்லோ' கப்பலில் நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட அந்த மூன்று இந்தியர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்குக் கொண்டு வரவும், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வருவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு