கொரோனா வைரஸ் தடுப்பு: போராளிகளின் கூட்டு முயற்சியால் கோவிட்-19-ஐ வென்ற ஈரோடு - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மு ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 230 நபர்களில், 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 70 நபர்களில், 69 பேர் குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். ஒரு முதியவர் மட்டுமே கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளார்.
கொரோனா சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் வீடு திரும்பிய செய்தியும், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா நோய்தொற்று ஏற்படவில்லை என்ற தகவலும் ஈரோடு மக்களுக்கு மனநிம்மதியை அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் கடந்த இரண்டு மாதங்களாக அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் முக்கிய அதிகாரிகள் சிலர், கடினமான இந்த பயணத்தின் அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஐந்து வயது மகனை தனது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு காலை முதல் இரவு வரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் துணை இயக்குநரான மருத்துவர். சவுண்டம்மாள்.
"காலை 8.30 மணிக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும், மீண்டும் வீட்டுக்கு செல்ல இரவு 9 மணி ஆகிவிடும். இதற்குள், எனது மகன் தொடர்ச்சியாக கைப்பேசியில் அழைத்துக்கொண்டே இருப்பான். 'எப்ப வருவீங்க அம்மா?' என்பது மட்டுமே அவனது கேள்வியாக இருக்கும்.
வேலை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்று குளித்து முடித்து அவனை பார்க்கப்போகையில் அயர்ந்து தூங்கி கொண்டிருப்பான். காலையில், அவன் தூங்கி எழுவதற்குள் நான் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றுவிடுவேன். எனது அம்மா தான் அவனை கவனித்துக்கொள்கிறார். என்னைப் போன்றே பலர் வீட்டை மறந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அர்ப்பணிப்பின் பலனாகத் தான் ஆரம்பத்தில் அதிக கொரோனா பாதிப்புகளோடு இருந்த ஈரோடு மாவட்டத்தில், தற்போது ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது" என தெரிவிக்கிறார் சவுண்டம்மாள்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்தவர்கள் தான் முதலில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையில் உச்சத்தில் இருந்த சென்னைக்கு அடுத்த நிலையில் ஈரோடு மாவட்டமும் இருந்தது.
"கோவையில் இறந்த தாய்லாந்து நாட்டினருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தாலும், அவரோடு பயணித்து ஈரோடு வந்த மற்ற தாய்லாந்து நாட்டினரை பரிசோதித்தோம். அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
பின்னர், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய முயற்சித்தபோது, யாருமே முன்வரவில்லை. கொரோனா நோய்த்தொற்றின் தன்மைகள் குறித்து விளக்கியும் யாரும் பரிசோதனைக்கு முன்வரவில்லை. 'தாய்லாந்து நாட்டினரோடு நாங்கள் யாரும் பேசவில்லை, நாங்களும் தனித்து தான் இருக்கிறோம்' என பரிசோதனைக்கு சென்றவர்களிடம் அவர்கள் கூறினர். பின்னர், சிசிடிவி கேமராக்களை பொருத்தி தாய்லாந்து நாட்டினர் வசித்த பகுதியை கண்காணித்தபோது, கொரோனாவின் தன்மையை உணராமல் தாய்லாந்து நாட்டினர் வசித்த இடத்திற்கு சிலர் சென்று வருவதை கண்காணித்தோம்.
உடனடியாக, அவர்களிடம் கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பரிசோதனை செய்யத் துவங்கினோம். அதில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கையும் அதிகமானது."
"கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களை தனிமைப் படுத்த தேவையில்லை என்று தான் அப்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிகுறிகள் இல்லாத சிலரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்தோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்படவர்களோடு தொடர்பிலிருந்த பலரை தனிமைப்படுத்தினோம். அதனால் தான் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்தது." என்கிறார் சவுண்டம்மாள்.
சில குடும்பங்களில் பெரியவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்து, அவர்களின் குழந்தைகளுக்கு பாதிப்பில்லாமல் இருந்துள்ளது. இதனால், சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் பல சிக்கல்களை சந்தித்ததாக கூறுகிறார் இவர்.
"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண், இரண்டு சிறியவர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் கொரோனா இல்லை. அந்த குழந்தையை மட்டும் தனித்துவிடவும் முடியாது. இதுபோன்று, பல குடும்பங்களில் சிக்கலான நிலை ஏற்பட்டது. ஆலோசனை செய்து அனைவரையும் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். நோய்தொற்று இல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பராமரித்து பாதுகாக்க ஏற்பாடுகள் செய்தோம்."
"சிகிச்சைக்கு வர மறுத்த பலர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டபோது, கண்ணீரோடு எங்களுக்கு நன்றிகளை தெரிவித்துச் சென்றனர். அதுவே, நாங்கள் செய்த பணிக்கான பரிசு" என பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் சவுண்டம்மாள்.

பட மூலாதாரம், Getty Images
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனக்கு பதவி உயர்வோடு சேர்த்து, கடினமான பல சவால்களும் காத்திருந்ததாக தெரிவிக்கிறார் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர். ஆர். மணி.
"1991 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணியில் இருக்கிறேன். இதுவரை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை. பதவி உயர்வுக்காக காத்திருந்த நிலையில் மார்ச் 6ஆம் தேதி, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் என்ற பதவியோடு, கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய கடினமான பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில், அனைவருக்கும் கொரோனா நோய்தொற்று குறித்த பயம் மிகவும் அதிகமாக இருந்தது. சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினரே பயத்தோடு தான் நோயாளிகளை கையாண்டனர். நாளடைவில், எண்ணிக்கைகளும் அதிகமானது.
கொரோனா பரிசோதனை, தீவிரமான சிகிச்சை, அதிகரிக்கும் நோயாளிகள் என 24 மணி நேரமும் பதட்டமான சூழலில் பணிபுரிந்து வந்தோம். மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவலர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பினால் தான் அப்படிப்பட்ட கடினமான சூழலை வென்று, கொரோனா தாக்கத்திலிருந்து வெளிவர முடிந்தது" என கூறுகிறார் மருத்துவர். மணி
"பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றாகவும், ஆண்களை தனியாகவும் தங்க வைத்திருந்தோம். தாய்க்கு கொரோனா இருந்தால், அவரிடம் குழந்தையை நெருங்கவிடுவதில்லை. இதனால், குழந்தைகளுக்கு மனரீதியிலான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பொம்மைகள், கேரம்போர்டு ஆகியவற்றை வாங்கி வைத்தோம்.
ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கினோம். ஒரு கட்டத்தில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டனர்."
"இதில், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொண்ட தூய்மை பணியாளர்களின் பணி மிகவும் உயர்ந்தது. மருத்துவர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றுபவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லாமல், இந்த சூழலை சமாளிக்கவே முடியாது.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடை ஆகியவற்றை அணிந்து கொண்டு எங்கள் அருகில் கிருமிகள் நெருங்காதவாறு தூய்மை பணியாளர்கள் பார்த்துக்கொண்டனர். மேலும், சளி மற்றும் ரத்த மாதிரிகளை ஆராய்ச்சி செய்யும் திறமையான பரிசோதனையாளர்கள் எங்களது குழுவில் உள்ளனர்.
நாங்கள் கேட்ட மருத்துவக் கருவிகள் அனைத்தும் உடனடியாக அரசு சார்பில் வழங்கப்பட்டது. எங்கள் அனைவரின் குறிக்கோளும் கொரோனா பாதிப்பிலிருந்து நோயாளிகளை மீட்பது மட்டுமாகவே இருந்தது. குணமடைந்தவர்கள் வீடுகளுக்கு திரும்புகையில், எங்கள் அனைவருக்காகவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர். அந்த தருணத்தை என்னால் என்றும் மறக்கமுடியாது" என தெரிவிக்கிறார் மருத்துவர் மணி.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஏற்படுத்திய கடுமையான கட்டுப்பாடுகள்.
"ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினோம். அலட்சியமாக வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதங்கள் விதித்தோம்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளை முற்றிலுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். மேலும், கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தோம். ஆரம்பத்தில், பொதுமக்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துழைக்க தொடங்கினர்.
தற்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்திருப்பதையடுத்து கட்டுப்பாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளது. இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்" என தெரிவிக்கிறார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன்.
கடந்த இரண்டு வாரங்களில் புதிதாக கொரோனோ பாதிப்பு ஏற்படாத நிலையில், ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:




























