கொரோனா வைரஸ்: கோவிட்-19 தொற்றால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த குடும்பம் - நடந்தது என்ன?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த முதியவர் ஒருவர், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் போது தன்னார்வலர்கள் மேற்கொண்ட உதவியால் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் என 65 பேரை மீட்ட தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வல அமைப்பினர் அவர்களை மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர்.
இதில் அழுக்கு உடையுடன், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவருக்கு முடிவெட்டி, புதிய ஆடைகள் அணிவித்தனர்.
பின்னர் புகைப்படம் எடுத்துகொண்ட தன்னார்வலர் ஒருவர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.அந்த புகைப்படம் மூலமாக 23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தனது அப்பா வேல்முருகன் என்பது ராமசந்திரன் என்பவருக்கு தெரியவந்துள்ளது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார் வேல்முருகனின் மூத்த மகன் ராமசந்திரன்.
"நான் தூத்துக்குடியில் வசித்து வருகிறேன். எனக்கு 38 வயதாகிறது. 1997ஆம் ஆண்டு எனக்கு 15 வயது இருக்கும்போது என் அம்மா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்; அம்மா இறந்தவுடன் என்னை என் மாமா கோயம்புத்தூர் அழைத்து சென்று அங்குள்ள லேத் பட்டறை ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தூத்துக்குடியில் உள்ள என் வீட்டுக்கு சென்று பார்த்த போது அப்பாவை காணவில்லை உறவினர்களிடம் விசாரித்ததில் அம்மா உயிரிழந்ததை தாங்க முடியாமல் அப்பா மனநலம் பாதித்த நிலையில் இருந்ததாக கூறினர். நானும் அவரை பல வருடங்களாக தேடினேன் அப்பா கிடைக்கவில்லை இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தேன். மூன்று நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் எனது அப்பாவின் புகைப்படம் பரவியதை நண்பரின் மூலம் தெரிந்துகொண்டேன். உடனடியாக என் அப்பா இருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டபத்துக்கு சென்று அவரை 23 ஆண்டுகளுக்கு பின் பார்த்தேன்," என்கிறார் ராமசந்திரன்.

"என் அப்பா மீண்டும் எனக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், தற்போது எனது அப்பா இருக்கும் மனநிலையில் அவரை எனது வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாது. அவருக்கு முறையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரணகுணமடைந்த பின் எனது அப்பாவை நான் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்." என்று மேலும் கூறினார் ராமசந்திரன்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இது குறித்து தன்னார்வலர் கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் தன்னார்வலர் அமைப்புச் சார்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலை ஓரங்களில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவு அளித்து வருகிறோம். தினசரி உணவு கொடுக்கும் போது அவர்களிடம் பேசி அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள். ஏன் இப்படி ரோடு ஓரங்களில் வசிக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் கேட்போம். அப்படி கிடைக்கும் தகவலை வைத்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்போம்,"

"அப்படி குடும்பத்துடன் சேர விருப்பாதவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்ப்போம். எங்களை பொருத்த வரை யாரும் சாலைகளில் தங்ககூடாது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் உணவின்றி சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களை கடந்த 12-ஆம் தேதி மாநகராட்சி மண்டபத்திற்கு அழைத்து வந்தோம். அனைவருக்கும் முடி வெட்டி, புது ஆடைகள் அணிவித்து புகைப்படம் எடுத்து அதனை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன். அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு வேல்முருகன் மகன் ராமசந்திரன் என்னை தொடர்பு கொண்டார். நான் உரிய ஆவணங்களுடன் வந்து உங்க அப்பாவை அழைத்து செல்லுங்கள் என்றேன்," என தந்தையை மகன் கண்டுகொண்ட தருணத்தை குறிப்பிடுகிறார்.
"செவ்வாய்க்கிழமை நேரில் வந்து அவர் அப்பாவை பார்த்து கண்ணீர் விட்டார். ஆனால் அவருக்கு மனநலம் பாதிக்கபட்டு இருப்பதால் தற்போது உள்ள சூழ்நிலையில் அவரை அழைத்து செல்ல முடியாது என்றார். அப்பா இங்கு தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்தவுடன் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அன்று முதல் கடந்த மூன்று நாட்களாக வேல்முருகனின் உறவினர்கள் பலரும் அவர் தங்கியுள்ள மண்டபத்துக்கு வந்து பார்த்து செல்கின்றனர். உறவினர்களை பார்த்ததில் இருந்து வேல்முருகன் மகிழ்ச்சியாக இருக்கிறார்." என அவர் தெரிவித்தார்.
மேலும் தங்களால் 23 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் தந்தை இணைந்து இருப்பது மன நிறைவை தருவதாக கூறுகிறார் கார்த்திக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:




























