You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: கோவிட் 19 பாதுகாப்பு உபகரணங்கள் கண்டுபிடிப்பில் களமிறங்கியுள்ள கோவை இளைஞர்கள்
கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களும், ஸ்டார்டப் நிறுவனத்தினரும் இணைந்து பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் குறைந்த விலையிலான செயற்கை சுவாசக் கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் பரவிவரும் நிலையில், முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகத்தை முழுவதுமாக பாதுகாக்கும் முகக்கவசத்திற்கான வடிவமைப்பை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
"மூக்கு மற்றும் வாயில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகளின் மூலம் தான் கொரோனா வைரஸ் அருகில் இருப்பவர்களுக்கு பரவுகிறது. இதனை தடுப்பதற்கான முகக்கவசத்தின் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், மூக்கு மற்றும் வாய் பகுதியை பாதுகாப்பதோடு முகம் முழுவதையும் கவசம் அணிந்து பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் பல்வேறு வடிவமைப்புகளை ஆராய்ந்து ஓரு புதிய முகக்கவச வடிவமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,"
"இந்த வடிவமைப்பை 3D பிரின்டர் கருவியை பயன்படுத்தி மிக எளிதாக தயாரிக்கலாம். நாங்கள் கண்டுபிடித்துள்ள வடிவமைப்பை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வழங்கியுள்ளோம். இதனால், முகக்கவசம் தேவைப்படுபவர்கள் 3D பிரிண்டரில் எளிய முறையில் முகக்கவசத்தை தயாரிக்க முடியும். குறிப்பாக, கொரோனா தடுப்பு பணிகளில் முன்னிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முகத்தை முழுவதுமாக பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்காகவே, தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்களை தயாரித்து வழங்கியுள்ளோம்" என்கின்றனர் இந்த பணியில் ஈடுபட்டு வரும் மாணவர் குழுவினர்.
ஜே.கே டேட்டா சிஸ்டம்ஸ் எனும் ஸ்டார்டப் நிறுவனம் மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இவர்களோடு இரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து குறைந்த விலையிலான செயற்கை சுவாசக் கருவியை வடிவமைத்துள்ளனர்.
"கொரோனா நோய்தொற்று தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அதன் விலையும் பல மடங்காக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மிகக் குறைந்த அளவில் எளிய வடிவமைப்பிலான செயற்கை சுவாசக் கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டோம்,"
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
"உலக அளவிலான செயற்கை சுவாசக் கருவியின் அடிப்படை வடிவமைப்பில் மிகக் குறைந்த விலையிலான கருவியை நான்கு நாட்களில் உருவாக்கினோம். இந்த கருவியின் மூலம் சுவாசம் குறித்த அனைத்து தகவல்களையும், கட்டுப்பாடுகளையும் கண்காணிக்க முடியும். இந்த கருவியின் விலை ரூ.25000க்கும் குறைவு தான். இதுபோன்று, குறைந்த விலையிலான செயற்கை சுவாசக் கருவிகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை பாதுகாக்க முடியும்." என தெரிவிக்கிறார் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எபின்.
இக்குழுவினர் வடிவமைத்துள்ள செயற்கை சுவாசக் கருவி குறித்து மாநில சுகாதாரத்துறையிடம் தெரிவித்துள்ளனர். முறையான பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த கருவிகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளதாக எபின் தெரிவிக்கிறார்.
இந்த குழுவினர் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
"கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள நீண்டகால ஊரடங்கு காரணமாக பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் மனதளவில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மன அழுத்தம், தூக்கமின்மை, பயம், கோபம் போன்ற உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இப்படி மனதளவில் பாதிக்கப்படுபவர்களுக்கு தொலைபேசி, வாட்சப் மற்றும் ஆன்லைன் மூலம் இலவசமாக ஆலோசனைகள் வழங்க 'கோவிட் மைண்ட் சப்போர்ட்' என்ற குழுவை உருவாக்கி தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உளவியல் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்." என்கிறார் ஒருங்கிணைப்பாளர் எபின்.
அச்சுறுத்தலான காலகட்டங்களில், பொறுப்பில்லாமல் நேரத்தை கழிப்பதை தவிர்த்து, கல்வியால் பெற்ற அறிவை பயன்படுத்தி மக்களை பாதுக்காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர் இந்த இளம் குழுவினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: