இந்தியாவில் பங்குச் சந்தையில் மீண்டும் பெரு வீழ்ச்சி

பட மூலாதாரம், AFP/getty images
இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடந்த வீழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமையும், மீண்டும் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டது.
பங்குகளின் விலைகள் சட சடவென சரிந்ததால், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் திங்கள்கிழமை ஒரே நாளில் 2,700 புள்ளிகள் வீழ்ந்தது.
தேசியப் பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் குறைந்து 9,300க்கும் கீழே உள்ளது.
கொரோனா வைரஸ், பெட்ரோலிய விலை வீழ்ச்சி ஆகிய காரணிகளைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல நாட்டுப் பங்குச் சந்தைகள் மந்த நிலையில் இருந்துவந்தன. இந்தியாவில் ஏற்கெனவே நடந்துவந்த குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள், டெல்லி வன்முறை, யெஸ் பேங்க் நெருக்கடி போன்ற பிரச்சனைகள் தோற்றுவித்த மனநிலையும், உலகப் பிரச்சனைகளோடு இணைந்துகொண்டன.
இந்தப் பின்னணியில், கடந்த வாரம் திங்கள்கிழமை மும்பை பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு, சந்தை மூடும் நேரத்தில் 2,300க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்திருந்தன.
மீண்டும், வெள்ளிக்கிழமை சந்தை தொடங்கிய சிறிது நேரத்தில் 3,000 புள்ளிகள் வீழ்ந்த நிலையில், உடனடியாக 45 நிமிடம் பங்கு வணிகம் நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் வணிகம் தொடங்கியபோது, சந்தை வீழ்ந்த வேகத்தில் சட்டென்று உயர்ந்து, தொடக்கத்தில் இருந்ததைவிட சற்று உயர்ந்த புள்ளிகளுடன் அன்றைய வணிகம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று திங்கள்கிழமை மீண்டும் ஒரே நாளில் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சுமார் 2,700 புள்ளிகள் குறைந்து 31,377 என்ற அளவில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












