எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பிரசுரிக்கப்பட்டது

காவல்துறை சார் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேக்தாவூத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் சமீம் பண பரிவர்த்தனை செய்ய உதவியதாக குற்றம்சாட்டப்படும் சேக்தாவூத் ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டிணத்தில் இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி தேவிபட்டிணம் பள்ளி மைதானத்தில் போலீசார் சுற்றி வளைத்தபோது சேக் தாவூத் தப்பி சென்றார். அமீர், பிச்சைக்கனி, முகமது அலி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

சேக் தாவூத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று (31.01.2020) இரவு ராமநாதபுரம் அடுத்த சித்தார்கோட்டையில் உள்ள தோட்டம் ஒன்றில் அவர் மறைந்து இருப்பதாக தனிப் படை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சேக்தாவூத் போலீசாரால் கைது செய்யப்பட்டு

ராமநாதபுரம் சிறப்பு பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சேக்தாவூத்தை விசாரணை செய்த நீதிபதி ராதாகிருஷ்ணன் வரும் 14ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தனிப் படை போலீஸ்காரர் ஒருவர் 'கைது செய்யப்பட்ட சேக் தாவூத்திடம் இருந்து கூரிய வாள், தீவிரவாத அமைப்புகள் தொடர்புடைய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: