"30 ஆண்டுகளாகவே அச்சுறுத்தலை சந்தித்து வருகிறேன்": எஸ். குருமூர்த்தி

குருமூர்த்தி

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, குருமூர்த்தி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த முப்பது ஆண்டுகளாகவே அச்சுறுத்தலை சந்தித்துவருவதாக துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த விவகாரத்தில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துக்ளக் இதழின் ஆசிரியரான எஸ். குருமூர்த்தி மைலாப்பூரில் தியாகராஜபுரத்தில் வசித்துவருகிறார். ஜனவரி 26ஆம் தேதியன்று அதிகாலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், பெட்ரோல் குண்டு வீச முன்றதாகவும் காவலுக்கு இருந்த காவலர்கள் விரட்டியவுடன் அவர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, தப்பி ஓடியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சசிகுமார் என்பவர் உட்பட எட்டு பேரை காவல்துறை கைதுசெய்துள்ளது. இதில் சசிகுமார் மீது சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் ஹோட்டல், சத்யம் திரையரங்கு ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், தான் கடந்த 30 ஆண்டுகளாகவே அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாக குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்களை வெளியிட்டிருக்கும் குருமூர்த்தி, தாக்குதல்காரர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தைரியமும் வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டில் போலீஸ் ஃபக்ருதீன் என்பவரைக் காவல்துறை கைதுசெய்தபோது, அவர் தன்னைச் சுடுவதற்குத் திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்ததாகவும் அதற்குப் பிறகு துப்பாக்கியுடன் கூடிய காவலரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார். இதன் பிறகுதான் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் பின், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சி நடந்திருப்பது தெரியவந்ததாகக் கூறியிருக்கும் குருமூர்த்தி, சிசிடிவியை பார்த்தபோது அதிகாலை ஒன்றரை மணி முதல் மூன்று மணிவரை யாரோ ஒரு முகமூடி அணிந்த நபர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தது தெரியவந்ததாகக் கூறியிருக்கிறார்.

இதற்குப் பிறகு, குருமூர்த்தியின் வீட்டிற்கு போலீஸ் காவல் போடப்பட்டது.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஜினிகாந்த்

"சிசிடிவி காட்சிகளைப் பார்த்த என்னுடைய நண்பர் அஜீத் தோவல் (தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) என் வீட்டிற்கு வந்து பார்வையிட்டார். எப்படி பாதுகாப்பைப் பலப்படுத்தலாம் என ஆலோசனை தந்தார். மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த இணை இயக்குனர் ரவிசந்திரனும் அவ்வப்போது வந்து பார்த்து ஆலோசனைகளைத் தருவார்" என்று கூறியிருக்கிறார் குருமூர்த்தி.

மேலும், தங்களுடைய வாழ்க்கை முறைக்கு நாய் வளர்ப்பது பொருந்தாது என்பதால், நீண்ட கால நண்பர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதுகாவலர் ஒருவருடன் நாய் ஒன்றை காவலுக்கு அனுப்பி வைப்பதாகவும் அந்த நாய் குலைத்ததன் பேரிலேயே பாதுகாவலர்கள் உஷாராகி தாக்குதலைத் தவிர்த்ததாகவும் குருமூர்த்தி கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, துக்ளக் இதழின் பொன் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: