டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் மேலும் மூன்று பேர் கைது

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் மேலும் மூன்று பேர் கைது

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய க்ரூப் - 4ல் நடந்த முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக பணம் கொடுத்து, தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேர் இதுவரை மத்திய குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் மூன்று பேரை திங்கட்கிழமையன்று காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குரூப் - 4 எனப்படும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியானது.

அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். அவர்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அந்த மையங்களைத் தேர்வுசெய்திருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கூடுதலாக இந்த இரு இடங்களையும் தேர்வுசெய்திருந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்த இரண்டு மையங்களில் இருந்தும் 57 பேர் அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 40 பேர், சென்னை முதல் கன்னியாகுமரி வரை வேறு மாவட்டங்களில் இருந்துவந்து, இந்த இரண்டு ஊர்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பலர் புகார் அளித்ததும், இந்த விவகாரம் குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரிக்க ஆரம்பித்தது. விசாரணையின் முடிவில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு, பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற முயன்ற 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் மேலும் மூன்று பேர் கைது

பட மூலாதாரம், Getty Images

இந்த 99 பேரும் தலா தேர்ச்சி பெறுவதற்காக 9 லட்ச ரூபாயிலிருந்து 15 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்திருந்தனர். பள்ளிக் கல்வித் துறை ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு இந்த விவகாரம் மத்திய குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் இதுவரை ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ராணிப் பேட்டையைச் சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரைச் சேர்ந்த வினோத் குமார், கடலூரைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் ஆகிய 3 பேர் இப்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஸ்ரீநிவாசன் இடைத்தரகராகச் செயல்பட்டு, நான்கு பேரிடம் தலா ஐந்து லட்ச ரூபாயை வாங்கியவர் என்றும் சிபிசிஐடி தெரிவிக்கிறது.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருந்த ஒன்பது பேரில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ரமேஷ், எரிசக்தித் துறையில் பணியாற்றும் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றும் ஓம் கந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: