பாலியல் வல்லுறவு குறித்த ராகுல் காந்தியின் கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி

பட மூலாதாரம், Getty Images
ஜார்ண்ட் மாநிலத்தில், இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் கூறியதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, "இந்திய வரலாற்றில், முதல் முறையாக ஒரு தலைவர் இந்தியாவில் உள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்." என்றார்.
அதனை தொடர்ந்து பல பாஜக உறுப்பினர்களும் ஆக்ரோஷமாக தங்கள் ராகுல் காந்திக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பாஜக உறுப்பினர்களுக்கு பதலளித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, "பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அதைதான் ராகுல்காந்தி சொல்ல விரும்பினார். துரதிஷ்டவசமாக மேக் இன் இந்தியா சிறப்பாக நடைபெறவில்லை அதற்கு பதிலாக, நாட்டில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்," என தெரிவித்தார்.
ஆனால் கனிமொழி பேசிக் கொண்டிருக்கும்போதே பாஜக உறுப்பினர்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
என்ன பேசினார் ராகுல்காந்தி?
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமையன்று ஜார்கண்ட்டில் உள்ள கோடாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'பிரதமர் நரேந்திர மோதி 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற கோஷத்தை முன்பு முன்வைத்தார். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் 'ரேப் இன் இந்தியா' (நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள்) என்ற நிலையே உள்ளது' என்றார்.

பட மூலாதாரம், LS TV
உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோதியின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார். பின்னர் அந்த பெண் ஒரு விபத்தையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் நரேந்திர மோதி கூறவில்லை என்று ராகுல்காந்தி மேலும் தெரிவித்தார்.
நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு தொடர்பான சம்பவங்கள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றும் ராகுல்காந்தி மேலும் கூறினார்.
மோதியின் வீடியோவை பகிர்ந்த ராகுல்
இந்நிலையில், தான் மன்னிப்பு கோரமாட்டேன் என தெரிவித்திருந்த ராகுல்காந்தி, டெல்லியை `ரேப் கேபிடல்` என்று மோதி பேசிய காணொளியை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
வடகிழக்கு பற்றி எரிகிறது அதற்காகவும், இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்ததற்கும், நான் பகிர்ந்த காணொளியில் மோதியின் பேச்சுக்காகவும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












