டி.ஆர்.கார்த்திகேயன், வி.எஸ் சிர்புகர், ரேகா.எஸ்.பல்டோடா: ஹைதராபாத் என்கவுன்டர் தொடர்பாக விசாரிக்க 3 பேர் குழு

பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துகொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட என்கவுன்டர் குறித்து முறையே விசாரிக்க மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு நடத்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், தெலங்கானா காவல்துறையின் தரப்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். இன்றைய விசாரணையின் முடிவில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ் சிர்புகர், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா.எஸ்.பல்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார்.

இந்த குழு ஹைதராபாத்தில் தங்கி இருந்து தங்களின் விசாரணையை நடத்தும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பாதுகாப்பை தெலங்கானா அரசு உறுதிசெய்யும் என்று அவர் கூறினார்.

மேலும், விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளதால், இதே என்கவுன்டர் குறித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 29ஆம் தேதி, ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். அவரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை, சில நாட்களுக்குப் பிறகு, அவரின் கொலையில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்தது. டிசம்பர் 6ஆம் தேதி, அவர்கள் காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

இது குறித்து அப்போது விளக்கமளித்த தெலங்கானா காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்று, நடந்தவற்றை விளக்குமாறு கேட்டதாகவும், இறந்த மருத்துவரின் கைபேசி, பவர்பேங் ஆகியவற்றை சம்பவ இடத்திலிருந்து எடுத்துதருமாறு கூறிய போது, காவல்துறையினரிடமிருந்த துப்பாக்கிகளை அவர்கள் கைப்பற்றி தாக்கியதாக கூறினர்.

இதில் இரு அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதிகாரிகள் திரும்பி தாக்கும்போது, அவர்கள் நால்வரும் இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :