You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமாவின் செல்போன் குறித்த தடயவியல் அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீஃபின் மொபைல் போனில் செய்யப்பட்ட தடயவியல் ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பிறகு அந்த மாணவியின் செல்போனில், தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எழுதப்பட்டது போன்ற குறிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.
ஃபாத்திமாவின் செல்போனில் இரண்டு குறிப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஐஐடி பேராசிரியர்கள் சிலரும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் ஊடகங்களுக்குக் கிடைத்தன.
ஃபாத்திமா லத்தீஃப் இறந்த பிறகு அந்த வழக்கை விசாரித்துவந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்தான் இந்த செல்போன் இருந்தது. செல்போன் கைப்பற்றப்பட்டபோது, அந்த போன் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. ஃபாத்திமாவின் உடலைப் பெறுவதற்காக வந்த உறவினர்களிடம் இருந்து சார்ஜர் பெறப்பட்டு, அந்த ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டது.
இந்த நிலையில், காவல் நிலையத்திலிருந்து அந்த செல்போனை உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டனார். ஃபாத்திமா மரண வழக்கில் இந்த செல்போன் முக்கிய ஆதாரம் என்பதால், அந்த செல்போனை திருப்பி அளிக்கும்படி காவல்துறை பெற்றோரிடம் கூறியது.
இதற்கிடையில், அந்த செல்போனில் இருந்த குறிப்புகளை குடும்பத்தினர் வெளியிட்டனர். செல்போன் குடும்பத்தினரிடம் சென்ற பிறகுதான் இதுபோல வெளியானது என்பதால், இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டா அல்லது உண்மையான தகவலா என ஆராய வேண்டியிருந்தது.
கடந்த வாரம் சென்னை வந்த ஃபாத்திமாவின் பெற்றோர் அந்த போனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த ஃபோன் சென்னை மையலாப்பூரில் இருந்த தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.
அந்த ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2006ஆம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மரணங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
கேரளாவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரான சலீம் மடவூர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதுதான் ஃபாத்திமாவின் செல்போன் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
ஃபாத்திமாவின் வழக்கை தற்போது சென்னை குற்றப் பிரிவு (சிசிபி) விசாரித்துவருகிறது. இந்நிலையில், "இந்த வழக்கை ஏன் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பின் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்