மகாராஷ்டிர அரசியல்: பெரும்பான்மையை நிரூபிக்குமா பாரதிய ஜனதா கட்சி?

"மகாராஷ்டிர அரசியல்: பெரும்பான்மையை நிரூபிக்குமா பாரதிய ஜனதா கட்சி?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "மகாராஷ்டிர அரசியல்: பெரும்பான்மையை நிரூபிக்குமா பாரதிய ஜனதா கட்சி?"

மகாராஷ்டிர முதல்வராக நேற்று பதவி ஏற்ற பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசுக்கு, வருகிற 30ஆம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் 'கெடு' விதித்து உள்ளார்.

"மகாராஷ்டிர அரசியல்: பெரும்பான்மையை நிரூபிக்குமா பாரதிய ஜனதா கட்சி?"

பட மூலாதாரம், Getty Images

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அவருக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.

பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் இன்னும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவாருக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்று தெரியவில்லை. இதேபோல் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் எத்தனை பேர் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாரதீய ஜனதாவை ஆதரிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.

எனவே சட்டசபையில் தேவேந்திர பட்னவிசால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுதான் தெரியவரும்.

Presentational grey line

தினமணி: "ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்"

"ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்"

பட மூலாதாரம், Getty Images

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராமேசுவரம் அனைத்து மீனவர் சங்க கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

கூட்டத்தின் முடிவில் இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் காலவரைற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். 3500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வருகிற 29-ந் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் கோகோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய அரசு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line
Presentational grey line

இந்து தமிழ்: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.44 மீட்டர் உயர்வு

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.44 மீட்டர் உயர்வு

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.44 மீட்டர் உயர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 3 லட்சத்து 14 ஆயிரத்து 932 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 19 கட்டடங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன.

26 ஆயிரத்து 40 கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதில், 39 ஆயிரத்து 385 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதிதாக அமையப்பட்டவையாகும்.

பருவமழை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், சாலையோரங்களில் மழைநீர் உறைக் கிணறுகள் அமைத்தல், நீர் நிலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளினால் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 2.44 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன."

Presentational grey line

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்': வாகன உற்பத்தித்துறை மந்தநிலை - நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் 

வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு மக்களது நிலைப்பாடே காரணமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒரு வாகனம் சராசரியாக 15 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும். அந்த வகையில், தங்களது பழைய வாகனங்களின் நீடித்த உழைப்பை உறுதிசெய்யும் வகையில் மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக நான் நினைக்கிறேன். 

தற்போது பிஎஸ் IV ரக வாகனங்கள் விற்பனை ஆகாத நிலை இருந்து வருகிறது. எனவே, பிஎஸ் VI ரக வாகனங்களின் அறிமுகத்துக்காக வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன். எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுத்து வருகிறது" என்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: