திருவள்ளுவர் சிலைக்கு தஞ்சையில், காவி உடை, ருத்திராட்ச மாலை தீபாராதனை: இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கைது

பிரசுரிக்கப்பட்டது

தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை மற்றும் ருத்திராட்சை மாலை அணிவித்து, தீபாராதணை காட்டி வழிபட்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சசிக்குமார் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைகழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அர்ஜுன் சம்பத் செயல்பட்டதாக அவரது புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கும்பகோணம் அருகே உடையாளூரில் இருந்த அர்ஜுன் சம்பத்தைக் கைது செய்தனர். காவல்நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவித்து அர்ஜுன் சம்பத் வழிபாடு நடத்தியதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை சாணம் வீசி மற்றும் கருப்பு மை பூசி அவமதிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்த சூழலில், இன்று தஞ்சை ராஜராஜ சோழனின் சதயவிழாவுக்கு சென்ற அர்ஜூன் சம்பத், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வல்லம் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து, சிலையின் கை, உடம்பில் விபூதி பூசி, கழுத்தில் ருத்திராட்சை மாலை அணிவித்தார்.

பின் திருவள்ளுவர் சிலைக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.

இதை அடுத்து நிருபர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்கு தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கின்றேன்," என்றார்.

மேலும் அவர், "பிரதமர் நரேந்திர மோதி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் திருக்குறளின் பெருமைகளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் பேசி வருகிறார். திருக்குறளின் கருத்துகளை மேற்கொள் காட்டி பேசுகிறார். இது அவர் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்றை காட்டுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றனர்," என்றார்.

என்பதை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :