கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுவிப்பு

பட மூலாதாரம், FACEBOOK
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ம.தி.மு.கவை உடைக்க முதலமைச்சர் மு. கருணாநிதி முயற்சிப்பதாக 2006ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. 2009ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டபோது, இதற்கும் தி.மு.க. தலைவர்தான் காரணம் என வைகோ பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாக மேலும் ஒரு அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டுமென வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கிலிருந்து வைகோவை விடுவித்தது.
இதனால், ம.தி.மு.கவை உடைக்க தி.மு.க. தலைவர் முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு குறித்த அவதூறு வழக்கை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்து.
இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வைகோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என வைகோ தரப்பில் சொல்லப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்துவருவதால் தீர்ப்பளிப்பதை மேலும் தள்ளிவைக்க விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி கருணாநிதி, இன்று தீர்ப்பளித்தார்.
வைகோ மீதான குற்றச்சாட்டுகள் சரிவர அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லையெனக் கூறிய நீதிபதி, பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும் செய்தியை எழுதிய நிருபரைக்கூட விசாரிக்கவில்லை என்றும்கூறி, சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டியவருக்கு அளித்து வைகோவை விடுவிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
பிற செய்திகள்:
- "உயிருள்ளவரை நீதிக்காக போராடுவோம்" - கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மகன்
- 240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224ல் தொலைபேசி இல்லை
- ராணுவ தேடுதல் வேட்டையில் சித்ரவதை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு
- தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு - தென்னாப்பிரிக்காவை வீழ்த்துமா?
- இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












