யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தில் 50 பேரை கொன்ற ஆயுதம் எது?

ரஷ்யா - யுக்ரேன்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், மனிஷா கங்குலி & ஜோ இன்வூட்
    • பதவி, பிபிசி செய்திகள்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

யுக்ரேனின் கிரமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அத்தாக்குதலுக்காக சர்வதேச சட்டங்களின்படி பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள், பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

பல குண்டுகளை உள்ளடக்கிய இத்தகைய கிளஸ்டர் குண்டுகள், பெரும் நிலப்பரப்பில் பரவி வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.

கடந்த 9ம் தேதி யுக்ரேனின் கிழக்குப்பகுதியிலிருந்து வெளியேற ரயில் நிலையத்தில் மக்கள் குழுமியிருந்த நிலையில், இந்த கிளஸ்டர் குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணை ரயில் நிலையத்தை தாக்கியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த ஆயுதங்களை தடை செய்யும் உடன்படிக்கை ஒன்றில், 120க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், ரஷ்யாவோ அல்லது யுக்ரேனோ அதில் கையெழுத்திடவில்லை.

கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் என்ன?

ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதற்கு பிறகு களத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர்கள், கிளஸ்டர் குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான, தெளிவான சுவடுகளை களத்தில் கண்டனர்.

பலமுறை குண்டுகள் அங்கு வெடித்ததன் விளைவாக தாக்குதல் நிகழ்ந்த இடம் முழுதும் சேதமடைந்த துண்டுகள் சிதறிக்கிடந்தன, இது இத்தாக்குதலின் முக்கியமான தாக்கமாக உள்ளது. ஒவ்வொரு குண்டுவெடிப்பும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான சுவடுகள் அங்கு பதிந்துள்ளன.

ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டடம் ஒன்றிலும் இத்தகைய சிதறல்கள், தாக்குதலால் அக்கட்டடத்தின் சுவற்றில் ஏற்பட்டுள்ள பெரிய துளையின் ஓரத்தில் சிதறியுள்ளன.

இத்தாக்குதல் நடந்த உடனேயே நிகழ்விடத்திற்கு சென்ற வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்களிடம், இத்தாக்குதலை நேரில் கண்டவர்கள், "முதலில் ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது, அதனைத்தொடர்ந்து 4 - 5 குண்டுவெடிப்புகளின் சத்தம் கேட்டது" என தெரிவித்துள்ளனர். இந்த சத்தம் கிளஸ்டர் குண்டு தாக்குதலால் ஏற்படும் சத்தத்துடன் ஒத்ததாக உள்ளது.

யுக்ரேன் - ரஷ்யா
படக்குறிப்பு, கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்று.

தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் சோவியத் கால டோச்கா-யு ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணை கிளஸ்டர் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ள ஒற்றை போர்முனையைக் கொண்டிருக்கும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணைகள் 50 குண்டுகள் வரை ஏந்திச்சென்று வெடிக்கும் திறன் கொண்டவை.

யுக்ரேனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில், ரஷ்யா இத்தகைய ஏவுகணைகளை இதற்கு முன்பாகவே பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. மேலும், தன்னுடைய ஆயுதக்கிடங்கில் யுக்ரேனும் இந்த ஆயுதத்தை வைத்துள்ளது.

யுக்ரேனின் டொனியட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பிரதேசங்களில் இந்த ஏவுகணைகளை பயன்படுத்தியதாக கூறப்பட்டதை ரஷ்யா முன்பு மறுத்திருந்தது. ஆனால், ரஷ்யாவின் மறுப்பு குறித்து விவாதம் எழுந்தது.

கிளஸ்டர் குண்டுகள்

ராணுவ நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் மையத்தைச் சேர்ந்த ஏவுகணை நிபுணர் சித்தார்த் கௌஷல் கூறுகையில், "இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் சுவடுகள், 9N24 போன்ற துணை ஆயுதங்களுடன் மிகவும் ஒத்துப்போகிறது, இது டோச்கா ஏவுகணையால் சுமந்து செல்லக்கூடிய சோவியத் கால கிளஸ்டர் வெடிமருந்து ஆகும்" என தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட மிகவும் ஆழமற்ற பள்ளம் மற்றும் ஒரு திசையில் தோன்றும் துண்டு துண்டான கதிர்வீச்சு அடையாளங்களை சுட்டிக்காட்டினார், இது துணை ஆயுதங்களுடன் ஒத்துப்போகிறது.

இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டுள்ள மேலும் இரண்டு நிபுணர்களுடன் பேசினோம்.

சமூக வலைதள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு இந்த ஏவுகணை ஏவப்பட்டதற்கான தளத்தை அடையாளம் காண பிபிசி முயற்சித்தது. ஆனால், இதுவரை அதனை அடையாளம் காண முடியவில்லை.

கிளஸ்டர் குண்டுகள்

கிளஸ்டர் குண்டுகள் தடை செய்யப்பட்டது ஏன்?

இந்த குண்டுகள் ஏற்படுத்தும் அழிவுகள் காரணமாகவும், சண்டை நடைபெறும் பகுதிகளில் இவை ஏற்படுத்தும் குறிப்பிட்ட ஆபத்துகள் காரணமாகவும், இந்த ஆயுதங்கள் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பரவலான விமர்சனங்களை பெற்றது.

இந்த ஆயுதங்கள் 400 மீட்டர் தொலைவில் 50க்கும் மேற்பட்ட குண்டுகளை வெளியேற்றி வெடிக்கச் செய்து, மக்கள்தொகை நெருக்கடியான பகுதிகளில் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தவல்லது.

இவற்றின் துணை வெடிமருந்துகள் வெடிக்காத நிலையிலும் அவை ஆபத்துகளை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்த ஆபத்து, பழமையான, பல தசாப்தங்களாக காலாவதியான சோவியத் ஏவுகணைகளிலும் உள்ளது.

கிளஸ்டர் குண்டுகள்
படக்குறிப்பு, தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் காணப்படும் கதிர்வீச்சு அடையாளங்கள்

2008-ம் ஆண்டில் நடைபெற்ற கிளஸ்டர் குண்டுகள் குறித்த மாநாட்டில், அவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டது. ஆனால், இந்த உடன்படிக்கையில் ரஷ்யாவும் யுக்ரேனும் கையெழுத்திடவில்லை.

முன்னதாக, கார்கீயவில் ரஷ்யப்படைகள் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, இதுகுறித்து விசாரணையை தொடங்குவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :