பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: நம்பிக்கை வாக்கெடுப்பை முடக்கியது சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இந்த வார இறுதியில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் நடாளுமன்றத்தில் இம்ரான்கானின் ஆளும் கட்சி, தன் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தவிடாமல் நிராகரித்தது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தது.
இதனால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த எதிர்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய இம்ரான் கான், வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், "நான் எப்போதும் பாகிஸ்தானுக்காக போராடியிருக்கிறேன். கடைசி பந்து வரை போராடப்போகிறேன் என்பதுதான் நாட்டுமக்களுக்கு நான் வழங்கும் செய்தி" என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அத்துடன், ரஷ்யா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நட்புறவு காரணமாக, ஆட்சியைக் கவிழ்க்க எதிர்கட்சிகளுடன் இணைந்து அமெரிக்கா சதி செய்துள்ளது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் இம்ரான்கான். ஆனால், அமெரிக்கா இதை மறுத்துவிட்டது.
அதே சமயம், வெளி நாட்டு சதி இருப்பதைக் காரணம் காட்டித்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை முடக்கியதை நியாயப்படுத்தினார் சபாநாயகர் (இம்ரான்கான் ஆதரவாளர்).
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பைத் முடக்கிய இம்ரான் கானின் நடவடிக்கை "அரசியலமைப்புக்கு முரணானது. இதில் எந்தவிதமான சட்டப்பூர்வ விளைவும் இல்லை" என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டறிந்தது.
மேலும், "பாராளுமன்றத்தை கலைக்கும் இம்ரானின் முடிவு செல்லாது' என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக, 90 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 9) மீண்டும் கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், புதிய தேர்தல் நடத்தப்பட உள்ள ஆகஸ்ட் 2023 வரைக்குமான புதிய பிரதமரை, எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
ஊழல் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆட்சியில் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை மாற்றுவதாக கூறி 2018ஆம் ஆண்டு பதவியேற்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்.
இன்னும் அவருக்கு ஆதரவாளர்கள் உள்ளனர் என்றபோதும், விலையேற்றம் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் செல்வாகை இழந்துள்ளார். கடந்த வாரம் தனது நாடாளுமன்ற பெரும்பான்மையையும் இழந்தார்.
எந்தவொரு அதிபருக்கும் மிகப்பெரிய துணையாக இருக்கக்கூடிய ராணுவத்தின் ஆதரவையும் கூட இம்ரான்கான் இழந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாகிஸ்தானில் நிலவும் அரசியல் கொந்தளிப்பின் மற்றொரு பகுதியையும் குறிப்பிடுகிறது.
இதுவரை, ஊழல் குற்றச்சாட்டுகள், ராணுவத்தின் அதிகாரபோட்டி என ஏதோ ஒரு காரணத்தால், எந்தவொரு பிரதமரும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடித்ததில்லை. 75 ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தானில் 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சிதான் நடைபெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












