யுக்ரேன் Vs ரஷ்யா: போலி தகவல்களை கண்டுபிடிக்க இதோ 3 வழிகள்

    • எழுதியவர், மரியண்ணா ஸ்ப்ரிங்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான பொய்ச்செய்திகளும் பலவிதமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற பொய்ச்செய்திகளைத் தவிர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

போர் தொடங்கியதிலிருந்து, போலியான செய்திகளும், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பரவி நம் செல்பேசிகளை நிரப்பியிருக்கும். அது போக,குறிப்பிட்ட சில ட்ரோல்களின் கணக்குகளில் இருந்து (உள்நோக்கம் கொண்ட சமூக வலைதளக் கணக்குகள்) சதிக் கோட்பாடுகளை (ஆதாரமற்ற நிரூபிக்கப்படாத கோட்பாடு) வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

வெறுமனே சமூக வலைதளங்களில் மட்டுமல்ல. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட உள்நோக்கத்துடன் கூடிய இதுபோன்ற போலித் தகவல்கள் பரப்பட்டன. இந்த யுக்ரேன் போர்ச்சூழலில் இந்தப் பொய்த்தகவல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கேட்கும் ஒரு புதிய வானொலித் தொடரை நான் வழங்கி வருகிறேன்.

ஒரு செய்தியை பொய் அல்லது உண்மை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதன் பரவலை நிறுத்துவது எப்படி?

1.பழைய வீடியோக்களை பாருங்கள்

யுக்ரேனின் களத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மையான, சங்கடகரமான காட்சிகள் பலவும் சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. அதே சமயம், பழைய வீடியோக்களும் இதுபோன்ற சமயங்களில் கூடவே சேர்ந்து வைரலாகின்றன. பல சமயங்களில் மக்கள் அந்த வீடியோக்களை உண்மை என்று நம்பியும் உதவி செய்யும் நோக்கத்திலும் பகிர்ந்து விடுவர். ஆனால், அது மேலும் மேலும் குழப்பத்தையே விளைவிக்கும்.

ஒரு வீடியோ உண்மையா பொய்யா என்பதை கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வீடியோவை முழுமையாக கவனிப்பதுதான். அதாவது விடியோவில் இருக்கும் காலநிலை, சாலையின் சிக்னல்கள், பின்னணிக்காட்சி, மக்கள் பேசும் மொழி ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.

2020ஆம் ஆண்டு பெய்ரூட்டில் நடந்த வெடிப்புச் சம்பவத்தின் காணொளிகள், யுக்ரேனில் தற்போது (2022) நடக்கும் போர்ச்சூழலைப் போல போலியாகப் பரப்பப்படுகின்றன.

குறைந்தபட்சம், கூகுள் மேப்பைப் பயன்படுத்தி, வீடியோவில் காட்டப்படும் இடத்துடன் ஒப்பிடுவதன் மூலன் உண்மையைக் கண்டுபிடிக்கலாம். இது வரைபடங்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்கு உதவும்.

அதேபோல, `பரவும் ஒரு படத்தை` கூகுளில் இமேஜ் சர்ச் கருவி மூலம் தேடி (Reverse Image search என்று பெயர்) உண்மையைச் சரிபார்க்கலாம். ஒரு படத்தை இந்த முறையில் தேடும்போது பல்வேறு இணையதளங்களில் இந்தப் படம் இதற்கு முன்பு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பட்டியல் கிடைக்கும். அந்த படங்கள் வெளியிடப்பட்ட தேதிகளையும், அதன் விவரங்களையும் படித்தாலே இது பழைய படமா அல்லது மாற்றியமைக்கப்பட்ட படமா என்ற விவரம் தெரியவரும்.

2.யார் இதைப் பகிர்வது? ஏன்?

எந்த ஒரு செய்தியையும் முதலில் பகிர்ந்தது யார் என்பதைப் பார்க்க வேண்டியது அவசியமானது. ஆனால், முதலில் பகிர்ந்தது யார் என்பதையும் நம்பகத் தன்மையையும் எப்படி சரிபார்ப்பது?

இதுபோன்ற தவறாக வழிநடத்தவல்ல வீடியோக்களை வெளியிடுபவர்கள் பல சமயங்களில் லைக்குகள் மற்றும் ஷேர்களுக்காக இதைச் செய்கின்றனர். யுக்ரேனில் என்ன நடக்கிறது என்று சொல்லும் பதிவுகளும் இதில் உண்டு. வேறு சிலர், ருசிகரமான கதைகளைச் சொல்வதற்காக பொய்ச்செய்திகளை பரப்புகின்றனர். குழப்பத்தை விதைத்து தங்கள் அரசியல் நோக்கங்களை பிரபலப்படுத்துவதற்காக இந்த துன்பகரமான நேரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

"இந்தப் போர் ஒரு நாடகம் என்றும் யுக்ரேன் தன் சொந்த நிலத்தில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகிறது என்றும் பல ரஷ்ய ஆதரவு ட்ரோல்கள், யுக்ரேனியர்களிடம் ஆதாரமற்ற வாக்குவாதத்தைச் செய்கின்றன" என்று யுக்ரேனைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் என்னிடம் தெரிவிக்கிறனர்.

மேலும் "கீயவ் பகுதிக்கு ஆருகில் இருக்கும் என் வீடு முற்றிலுமாக குண்டு வைத்து தகர்க்கப்பட்ட படங்களைப் பார்த்த பிறகும் கூட இந்த ட்ரோல்களுக்கு உண்மை புரியவில்லை" என்கிறார் நான் நேர்காணல் செய்த நபர் ஒருவர்.

பெரும்பாலும் இந்த ட்ரோல்கள் குறைவான பின்தொடருவோர் அல்லது பின்தொடருவோரே இல்லாத கணக்குகளாக உள்ளன. முகப்புப் படமும் கூட ஏதாவது பொதுவான படமாக இருக்கும். இந்தப் போர் தொடங்கிய பிறகுதான் அந்தக் கணக்கே தொடங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் யார் இந்தக் கணக்குகளை நடத்துவது என்பது கண்டுபிடிக்க முடியாததாகவே இருக்கும் .

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொய் செய்திகளைப் பரப்பிய ட்ரோல்கள் சில தற்போது போர்குறித்த பொய்ச் செய்திகளை பரப்புகின்றன. இந்தக் குழுக்கள் தான் தற்போது, "யுக்ரேனில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டதாக நடிகர்கள் நடிக்கிறார்கள்" என்ற தொனியிலான பதிவை மீண்டும் மீண்டும் பரப்புகின்றன. இது ரஷ்ய ராஜிய அதிகாரிகளாலும் பரப்பப்பட்டது.

3. பகிரும் முன் ஒரு நொடி

சமூக வலைதளங்களில் இந்தப் போர் தொடர்பாக நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்களை தூண்டக்கூடியவையாகவே இருக்கும். குறிப்பாக அந்தப் பதிவுக்கு ஒரு எதிர்வினையை ஆற்ற வைக்கும். இதன் விளைவாக, உண்மை என்று உறுதி செய்யாமல்கூட பலரும் இந்தப் பதிவுகளைப் பகிர்கின்றனர். காரணம், இதுபோன்ற பொய்ச்செய்திகள் பலவும் நமது உணர்வுகளுடன் விளையாடக்கூடியவை.

எதிர்மறை உணர்வுகள் மட்டுமல்ல. சில சமயங்களில் நேர்மறை உணர்வைத் தரும் செய்திகளும் கூட வைரலாகும். அவை மன உத்வேகத்தை அதிகரிக்கக்கூடியவை என்றபோதும், உண்மை என்ன என்பதைக் கண்டறியமுடியாதபடிக்கு ஆன்லைனில் குழப்பங்களை விளைவிக்கக்கூடியவைதான்.

மொத்தத்தில், இந்த தகவல் போர் என்பது சமூக வலைதளங்களில் நடப்பது மட்டுமல்ல. தங்கள் இருவேறு தரப்புக் கருத்துகளை வெளிப்படுத்தும் யுக்ரேன், ரஷ்யா என்ற இரு அரசுகளுக்கு இடையிலான போர்.

எந்த செய்தியை நீங்கள் பார்த்தாலும் இது ஏன் சொல்லப்படுகிறது என்றும் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேள்வி கேளுங்கள் போதுமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: